வாழ்வில் கனவு என்ற அனுபவத்தை உணராமல் எந்த மனிதனும் இருக்கமுடியாது. அவரவர் ஆழ்மனதின் ஆசைகளுக்கேற்ப, வக்கிரங்களுக்கேற்ப, விசித்திர எண்ணங்களுக்கேற்ப, கனவு தன் எல்லையை வரையறுத்துக் கொள்கிறது. கனவு, எதை விதைக்கிறோமோ அந்த எல்லையைத் தாண்டாமல் விதைத்ததை மட்டும் கிளைபரப்பி வளர்த்துக்கொண்டே போகும் பொக்கிஷம், விபரீதம் - எண்ணங்களின் தாண்டவம் - உணர்ச்சிகளின் சங்கமம். எண்ணங்களுக்கு நேரம் காலமெல்லாம் கிடையாது. அதனால்,கனவுக்கும். பகலும் இரவும் கனவெனும் மாபெரும் வெளியில் சஞ்சரிக்கலாம். குழந்தையாகலாம், கவிஞனாகலாம், மிருகமாகலாம், முத்தமிடலாம், கொலை செய்யலாம், காதல் புரியலாம், காமம் தீர்க்கலாம், களவு செய்யலாம்,கட்டி உருளலாம், கத்தித் தீர்க்கலாம், ரெளத்திரம் பழகலாம், வன்மம் கலையலாம், அழுது புலம்பலாம், சிரித்து மகிழலாம், மாண்டு உயிர்க்கலாம், அசுரகுணம் கொள்ளலாம், அருவமாய் போகலாம். யார் கண்டது? மொத்தத்தி்ல் மனதில் கனன்று கொண்டிருக்கும் உறுபசி தீரலாம்! இது முடிவிலா நிலை. இங்கு முடியாதது எதுவுமே இல்லை. நம் நினைவுக் கண்ணிகளை முன்னுக்குப்பின் முரணாக கலைத்துப் போடுவதும், அகோரமுகத்தைக் கண்முன்னே கிழித்துத் தொங்கவிடுவதும், லட்சியங்களின் எல்லையை விஸ்தாரமாக்குவதும் கனவின் விளையாட்டு. கனவால் மட்டுமே முடிந்த விளையாட்டு.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழும். இது கற்பனை அல்லவா என்று. கற்பனை, இல்லாததை உருவாக்கி ரசிப்பது (power to make the things not present in reality). கனவு, இயல்பாகவே இருப்பதிலிருந்து இல்லாததை சாத்தியமாக்குவது (inherent ability to attain unreality from reality exists). கனவு, சுய பிரதிபலிப்பு சுயமின்றி நிகழ்வது. கற்பனை சுயநினைவோடு புற,அகத் தூண்டல்களால் நாமே உருவாக்கும் மாயை. இன்னும் தெளிவாகச் சொன்னால், நீரில் நடப்பது போல் நினைப்பது கற்பனை. நீரில் நடந்ததாய் உணர்வது கனவு. கனவுகள் ஆழ்மனதின் அபிலாஷைகள். கற்பனைகள் சந்தர்ப்பங்களின் சிந்தனை வெளிப்பாடுகள். கனவுகள் தானாகவே நிகழ்பவை. கற்பனைகள் உருவாக்கப்படுபவை. பயணம் ஒன்றுதான்,பாதைகள்தான் வெவ்வேறு என்பதே முரண்நகை. போதும். இதற்கு மேல் பேசினால் நீங்கள் எனக்காக ஒரு புது வசைச்சொல்லை உருவாக்கக்கூடும்.
பறவையைப் போல் வானில் பறப்பது போல கனவு கண்டிருக்கிறீர்களா? நான் கண்டிருக்கிறேன். இரு கைகள் சிறகுகளாக, மெள்ள மெள்ள வான்நோக்கி பறப்பேன். பறவையாவேன்! அது ஒரு சுகானுபவம். அதை நாம் நம்பும் நிஜத்தில் முயன்றால் எப்படி இருக்கும்? Ankhon Dekhi என்று ஒரு ஹிந்திப் படம். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற கூற்றை சற்றே மாற்றி தீர விசாரித்து கண்ணால் கண்டால் மட்டுமே மெய் என ஒருவன் நம்பினால் எப்படி இருக்கும்? நம் அறிவியல் நிரூபித்த அத்தனையையும் நம்ப மறுத்து, தன் கண்களால் பார்த்தாலொழிய ‘இருக்கலாம்’ என்று கடந்து செல்லும் ஒருவன் தான் கண்ட கனவை நிஜமாக்க நினைத்தால் எப்படியிருக்கும்? அவன் பறவையாய் பறப்பது போன்று கனவு காண்கிறான். அப்படி கனவு காணும் போதெல்லாம் பறவையாய் உணர்வதாக மனைவியிடம் சொல்லும் போது,’நீங்கள் இதுவரை பறந்ததுண்டா? பின் எப்படி உணர முடியும்?’ என சிரித்துக்கொண்டே கேட்கிறாள். அவள் கேட்கும் கேள்வி அவன் கோட்பாட்டை சுக்குநூறாக்குகிறது. தன்னை உறுத்திக்கொண்டே இருக்கும் அந்தக் கேள்விக்கான விடையை அவன் கண்டறியும் அந்த பேரனுபவத்தோடு படம் நிறைவடைகிறது!
கன்னா பின்னாவென்று வரும் இந்தக் கனவுகள் மிரட்சியடையச் செய்பவை. மந்தகாசத்தைத் தருபவை. ஏகாந்தத்தை உணர்த்துபவை. நீங்கள் பிறப்பதற்கு முன்பே இறந்துபோன சித்தப்பா உங்கள் பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நெருக்கமானவர் மரணிக்கும் போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? என்றோ தற்கொலை செய்துகொண்டு செத்துப்போன பின் வீட்டுக்காரன் ஏன் செத்தேன் என்று உங்களிடம்தான் சொல்வேன் என்று அடம்பிடித்தால் எப்படி இருக்கும்? பாம்புகடித்து இறந்துபோன அண்ணன் ‘அகேஷனலாக’ வந்து உங்களைப் பார்த்து அழுது கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? பெரும்பாலும் நிராசைகளும் துயரங்களும் நிறைந்ததாய் இருக்கின்றன கனவுகள். லட்சிய வேட்கை கொண்ட கனவுகளும் உண்டு. எனக்கு ‘இன்னதாக’ ஆக வேண்டும், இதையெல்லாம் செய்யவேண்டும் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உருவாக்கிக்கொண்ட ஒன்றல்லவா? தன் பலம் எதுவென்று பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து, அடையாளம் காணும் ஒன்றல்லவா? ஒருவேளை உங்கள் விருப்பத்தை அடையாளம் கண்டபின் வேண்டுமானால் கனவாக வரக்கூடும். கனவென்பது இயல்பாக தோன்றும் எண்ணங்களின் திரட்சி அல்லவா? அதெல்லாம் முடியாது, அப்துல்கலாம் சொல்லியிருக்கிறார் என்கிறீர்களா? சரி, இருந்துவிட்டுப் போகட்டும். தன் லட்சியத்தை தன் கனவில் கண்ட பின் அதற்கு உரமாக கற்பனைகள் அவசியமாகிப் போகிறது. அதனால்தானோ என்னவோ எனக்கு லட்சியங்கள் கனவில் வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை என் லட்சியம் எதுவென்று தெரியாததால் கூட இருக்கலாம்! சுவாரசியமான கனவுகளும் உண்டு. நண்பர்களோடு அமர்ந்து மது அருந்திக்கொண்டிருக்கும் நடு இரவில், யாருக்குத் தெரியக்கூடாது என்று நினைத்தோமோ அவரே திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு என் தாத்தாவை எழுப்பி ‘ஷைடிஷ்’ வாங்கினால் எப்படி இருக்கும்? சம்பந்தமே இல்லாமல் என் தாத்தாவும், என் நண்பனின் அண்ணனும் எப்படி நுழைந்தார்கள் எனத் தெரியவே இல்லை. முகம் தெரியா நபரை கையில் அரிவாளோடு ஓட ஓட விரட்டி வெட்ட நானும் என் தாத்தாவும் முயலும்போது கனவு கலைந்தால் எப்படி இருக்கும்?
பல வருடங்களாக வெளிநாட்டில் உழன்று கொண்டிருக்கும் மகன் தன்னோடு சேர்ந்து உணவருந்தியதாக ஒரு தாய் உணர்வதும், இறந்துபோன நண்பன் தன்னைச் சுற்றியே எப்பொழுதும் இருப்பதாய் உணர்வதும் கனவின் நீட்சியன்றி வேறென்ன? கனவு நிகழும்போது அதைப் பார்வையாளனாக கவனித்திருக்கிறீர்களா? நம்புங்கள். நான் உணர்ந்த நிஜம். தூக்கத்தின் விழிப்பு அது என்று கூட சொல்லலாம். எதுவாயினும், தலைக்குள் தனி உலகம் இந்தக் கனவு!