மலையாளக் கரையின் திரைப்பட இயக்குநர்களின் சிந்தனையும், ரசனையும், தைரியமும் அவர்களின் வித்தியாசமான முயற்சிகளிலேயே தெரிகிறது. ரசனையின் அளவுகோல் மாறுபட்டிருப்பதை நன்றாகவே உணர்ந்திருக்கும் திரைப்பட பிரம்மாக்கள், ஒரு கதையை எப்படி எடுத்தால் அது மக்களைப் போய்ச் சேரும் என்பதில் ‘அப்டேட்ட்’டடாக இருக்கிறார்கள்.
ஒரு படத்திற்காக அவ்வளவு உழைக்கிறார்கள். அந்த உழைப்பு படத்தின் ‘டீட்டெய்லிங்’கில் தெரிகிறது. சமீபகாலமாக மலையாளப் படங்கள் அவ்வளவு ரசனையாக எடுக்கப்படுகின்றன.
தமிழ் மக்களுக்கு மலையாளப் படங்கள் முன்னும் பின்னுமாக பரிச்சயம் என்றாலும் திரிஷ்யம், ஹெள ஓல்டு ஆர் யூ, பெங்களுர் டேஸ் படங்களால் உண்டான ‘கிரேஸ்’,
பிரேமம், ஒரு வடக்கன் செல்ஃபி,
என்னு நின்டே மொய்தீன்,
சார்லி, ஆக்சன் ஹீரோ பிஜூ என்று தீப்பிடித்து எரிகிறது.
எல்லாமே வித்தியாசமான, தரமான படைப்புகள். அந்த நெருப்பில் தூபம் போட்டாற் போல் வெளிவந்திருக்கிறது “மகேஷின்டே பிரதிகாரம்”(மகேஷின் பழிவாங்கல்). ஒரு வெகுசாதாரணமான கதையை வெகுசாதாரணமான காட்சிகளால் நகர்த்தி கதாபாத்திரங்களுக்குள் சுவாரஸ்யங்களைப் புதைத்து பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார் இயக்குநர்.
கேரள சினிமாவின் சிறப்பே நல்ல கதையம்சமுள்ள மசாலாதனம் இல்லாத கதை பண்ணும்போது அதன் இயல்பிலிருந்து இம்மியளவு கூட விலகாமல் கதைக்கு என்னத் தேவையோ அதை அப்படியே நடிகர்களுக்குள் புகுத்தி அவர்களை அக்கதாபாத்திரமாகவே உலவவிட்டு படத்தின் ‘நேட்டிவிட்டி’யை உயிர்ப்புடன் வைத்திருப்பதே!
படத்தின் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரிகிறது. பல கதைகள் கதைக்கிறது.
காட்சிகள் இயல்பான அழகியலோடும் நுணுக்கத்தோடும் நகர்கின்றன. படம் முடிந்து வெளியில் வந்ததும் முதலில் கூகுளில் தேடியது கலைஞர்களின் பெயர்களைத்தான்.
காட்சிகளை அணுஅணுவாக செதுக்கியிருக்கிறார் இயக்குநர் திலீஷ் போத்தன். இவருக்கு இயக்குநராக இது முதல்படம். பிண்ணனியிலும் பாடல்களிலும் கதையோடு இயைந்து இழைந்து பயணிக்கும் பிஜூ பால் இசை, ஒரு காட்சியில் கூட கூடுதல் நீளமாக உணரவே விடாமல் வெட்டி ஒட்டியிருக்கும் ஷாஜூ ஸ்ரீதரன், செமயான திரைக்கதை பண்ணியிருக்கும் ஷியாம் புஷ்கரன், இடுக்கியின் வனப்பை குளுகுளுவென கண்ணில் காட்டிய ஷைஜூ காலித் என்று மொத்த படக்குழுவினருக்கும் பெரிய பாராட்டுக்கள்!
ஒரு பிரபலமான நடிகனை வைத்துக்கொண்டு இப்படியான ஒரு கதையை பண்ணுவதற்கான சாத்தியமே தமிழில் இல்லை என்பதுதான் உண்மை.
கதையை கந்தகோலமாக்கி விட வாய்ப்புகள் அதிகம்.
ஏனெனில், தமிழ்நாட்டில் நடிகர்கள் மீதான பார்வையே வேறு.
ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே அடைத்து வைப்பது நம்மவர்களுக்கு கை வந்த கலை.
அதனால்தானோ என்னவோ தமிழின் ஆகச்சிறந்த படங்களில் பெரும்பாலும் அதிகம் கவனிக்கப்பட்டிராத கலைஞர்கள் அல்லது புதுமுகங்களே நடித்திருப்பார்கள். சந்தேகமேயில்லாமல் அது மாதிரியான முயற்சிகள் வசூல்ரீதியாக தோல்வியடைந்திருக்கும்.
அதையும் மீறி ஒரு பிரபலம் நடித்தாலும், சதை கிழிந்து எலும்பு துருத்திக்கொண்டு நிற்பதைப் போல அவர் மட்டும் தனியாகத் தெரிவார்.
கதாபாத்திரமாக அல்ல.
அவர் பெயரிலேயே அறியப்படும் அளவுக்குத்தான் இருக்கும்.
ஒருவேளை கதாபாத்திரமாகவே மாறினாலும் தமிழ் மக்கள் அதையும் அந்த பிரபலத்தின் சிறந்த நடிப்பாகவே பார்க்கிறார்களே அன்றி கதாபாத்திரமாக அல்ல.
அங்கே கதையும் கதைமாந்தர்களும் காணாமல் போய்விடுவார்கள். பாபநாசம் சிறந்த உதாரணம். விதிவிலக்கில்லாத விதியும் இல்லையாதலால் சில படங்கள் ‘கிளிக்’
ஆகிவிடும். தற்போதைய பிரபலம் முந்தைய அறிமுகம். வரலாற்றைப் புரட்டினால் பிரபலங்களின் ஆரம்பகாலப் படங்கள்தான் என்றுமே பேசப்படுபவையாக இருக்கும்.
இப்படியான மனநிலையில் மலையாளப் படங்கள் தனித்து தெரிவதை தமிழர்கள் உணர்கிறார்கள். ரசிக்கிறார்கள். போதாக்குறைக்கு எல்லா மலையாளப் படங்களிலும் ஏதோ ஒரு வகையில் தமிழை உபயோகித்து விடுவதால் இன்னும் கூடுதலாக ஒரு பிடிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.
கேரள மண்ணில் இந்த ‘ஹீரோயிச’ பராக்கிரமங்களுக்கெல்லாம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் அறவே இடம் கிடையாது. இங்கு எல்லா கலைஞர்களிடமும் ஒரு ‘ப்ளெக்ஸிபிலிட்டி’ இருக்கிறது. எந்த பிரபலம் நடித்தாலும் கதைதான் நாயகன். கதைதான் பேசும், பாடும், ஆடும், காதலிக்கும், சண்டையிடும், உனர்ச்சிவசப்படும்! இன்னும், எல்லாம் செய்யும். அந்தத் தரம்தான் ஒரு நல்ல திரைப்படத்தின் வெற்றி.
“மகேஷின்டே பிரதிகாரம்”
கொஞ்சம் கூட பிசகாமல் அப்படியான தரத்துடன் இருக்கிறது.
படம், ஒரு ஜோடி செருப்பில் ஆரம்பாகிறது. கேரளாவில் இடுக்கி ஒரு பெரிய மாவட்டம் ஆனால் குறைந்த மக்கள்தொகையும் அதிக வனப்பகுதியும் கொண்டது.
இடுக்கியின் அழகியலை ஒரு பாடலோடு அழகாக உணர்த்தி நகர்கிறது கேமரா. இடுக்கியும் இடுக்கி சார்ந்த மக்களும் தான் கதைநாயகர்கள். மகேஷ் பாவனா என்ற ஃபோட்டோகிராபராக ஃபகத் ஃபாசில் பின்னிப்பெடலெடுத்திருக்கிறார். படத்தின் முக்கியமான திருப்புமுனையாக அமையும் காட்சியும், ஒரு சண்டைகாட்சியும் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அட்டகாசமானது. இயக்குநருக்கு அதற்காக ஒரு ஷொட்டு.
மகேஷின் தந்தை வின்சென்ட் பாவனாவாக கே.எல்.அந்தோணி.
முகபாவனைகளிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார். ஃபோட்டோகிராபி பற்றிய அவரது எண்ணமும் அதை மகனுக்கு கடத்தும் காட்சியமைப்புகளும் கவித்துவமானவை.
செளம்யாவாக அனு ஸ்ரீ. ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளைத் திட்டித்தீர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஜிம்சியாக அனுபமா பாலமுரளி. இவர்தான் நம்ம பசங்களுக்கு பிடித்தமான துடுக்கான, மிடுக்கான, அழகான, கொஞ்சம் அறிவான,
வெகுளித்தனமான, அடக்கமான ஆனால் வெளியில் திமிராக இருக்கும் பெண்.
'பிரேமம்’ மலருக்கு அடுத்து இந்த ஜிம்சியை இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். கேரளத்தில் கதாநாயகிகளை எங்கிருந்துதான் கண்டுபிடிக்கிறார்களோ? இருவருமே வழக்கம்போல அழகு. அலென்ஸியர் லே என்பவர் பேபி சேட்டனாக அதகளம் செய்கிறார். கிரிஸ்பினாக வரும் செளபின் ஷாகிர்,
பேபி சேட்டன் மகள் சோனியாவாக வரும் லிஜிமோல் ஜோஸ்,
ஜிம்சியின் அண்ணன் ஜிம்சனாக வரும் சுஜித் ஷங்கர் என படத்தில் வரும் எல்லா சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வெகுவாக ஈர்க்கிறார்கள். திரையரங்கிலிருந்து குறைந்தது வீடு திரும்பும் வரையிலாவது உங்கள் சொண்டுகளில் மந்தகாசம் அகலாது!
சரி, கதை என்ன என்கிறீர்களா?
ஹி..ஹி..முந்தைய பத்தியின் முதல்வரியில் ஒரு ‘ஹிண்ட்’ இருக்கிறது.
அதையும் படத்தின் தலைப்பையும் வைத்து நீங்களாகவே எதையாவது கற்பனை செய்து கொண்டு திரையில் இடுக்கிக்கு ஒரு ‘விசிட்’ அடிங்க!