ஒரு தேசத்தில் எவ்வளவு கண்மூடித்தனமான தேசபக்தர்கள் இருக்கிறார்களோ, அவ்வளவு முட்டாள்களும் ஊமைகளும் அடிமைகளும் இருப்பதாக அரசாங்கம் கருதிவிடும்! கண்டித்துப் பேச எதிர்க் கட்சிக்காரர்கள் இல்லாவிட்டால் அரசாங்கம் யதேச்சதிகாரமாக மாறி, பெருவாரியான மக்களுக்குத் தீமைகளைப் பெருக்கிக்கொண்டே போகும். கூடிய சீக்கிரம் தேசம் சர்வ நாசமடைந்து அந்நியருக்கு அடிமைப்பட்டுப் போகும். அளவு மீறிய தேசபக்தியால் ஒரு தேசத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பது அரசியல் தத்துவம்.
*
இராஜ பக்தி என்பது வேறு; தேசபக்தி என்பது வேறு! அரசாங்கத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பக்தி வேறு; ஆளப்படும் தன் நாட்டைக் கண்திறந்து பார்க்கும் பக்தி வேறு. நாட்டிலுள்ள மக்களின் நல்வாழ்வின் மீதும் உரிமைகளின் மீதும் மொழிவழிக் கலாச்சாரத்தின் மீதும் கருத்துச் செலுத்துவதுதான் தேச பக்தியாகும். அந்த முறையில் பார்த்தால் சாம்ராஜ்யச் சக்தியும் ஆட்சி பீடத்தின் அதிகாரப் பெருக்கும் எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு ஜனங்களின் உரிமைகளும் மொழிவழிக் கலாச்சார முன்னேற்றமும் செழித்தோங்கும்! சாம்ராஜ்யம் சர்வ சக்தி வாய்ந்ததாகப் பெருகப் பெருக, ஆட்சித்தலைவனிடம் அதிகாரம் குவியக்குவிய, நாட்டின் விஸ்தீரணம் அதிகரிக்க அதிகரிக்க, தனிமனிதனின் சுதந்திரமும் மனித குலத்தின் உரிமைகளும் குறுகிக் குறுகி அடிமைச் சந்தையாகிவிடும்!
*
ஏகாதிபத்திய முறை அரசியலானது, குடிமக்களையெல்லாம் தன்னுடைய செக்குமாடுகளாக்கவே ஆசைப்படும். மக்களின் உணர்ச்சி மழுங்கி தலைதூக்க முடியாதவாறு பிரஜைகளைத் தன் காலடியில் போட்டுக் கொண்டிருக்கவே திட்டமிடும். இதற்குத் தேவையான அடிமைத்தனம் மக்களின் உணர்ச்சிகளிலும், சந்ததிகளின் இரத்தத்திலும் ஊறிவிட வேண்டுமென்பதற்காக சாஸ்திர ரீதியான ஜாதியாச்சாரங்களையும் வேரூன்றி வளரச் செய்யும்.
*
சமதர்ம உணர்ச்சியோடு பிறக்கும் மனித இனத்தை , பிறப்பைக் கொண்டே நான்கு ஜாதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு ஜாதிக்கும் பல உட்பிரிவுகளை உண்டாக்கி மக்களின் ஓரின உணர்ச்சியையும், ஒற்றுமையையும் பலவாறாக சிதறடித்து ஜாதிக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, ஒவ்வொருவரும் தங்கள் ஜாதி ஆசாரங்களை அநுஷ்டிக்க வேண்டுமென தெய்வத்தின் பெயரால் பயமுறுத்தி மக்களைப் பிரித்தாளும் ஜாதி தர்மத்திற்கு ஆட்படும் மக்கள் சக்தியானது - பல ஜாதிகளாகத் துண்டாடப்பட்டு, ஒரு ஜாதி மற்றொரு ஜாதிக்கு அடிமைப்பட்டு, எந்த ஜாதியும் எந்த தனிமனிதனும் தன் பிறப்பிலிருந்து முண்டவோ முரண்டவோ தலைதூக்கவோ முடியாதபடி ஒடுக்கப்பட்டு, சமத்துவ உணர்ச்சி மழுங்கிப்போய் சந்ததிதோறும் அடிமைத்தனத்தையே தேவாமிர்தமாக ஊட்டி வளர்த்து வரும். மக்களைப் பிரித்தாளும் இராஜ தந்திரத்தையே அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய முறை அரசியலானது, தன்னுடைய யதேச்சதிகாரம் நிலை பெறுவதற்கு இந்த ஜாதிப் பிரிவினை பெரிதும் சௌகரியமாயிருக்கிறதென்று உள்ளூரக் கருதும்!
*
அமைதியான நிலையில் நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ளமாட்டோம்! கேடான சம்பிரதாயங்கள் சிறிதும் பழுதுறாமலே இருந்துவரும். நம்மை வேறு யாராவது அடித்து உதைத்துத்தான் சீர்திருத்த வேண்டும். நாட்டில் அந்நிய மதத்தினரின் படையெடுப்பும் அந்நிய கலாச்சாரங்களின் மோதல்களும் எதிரொலிகளும் ஏற்பட்டு ஸ்தம்பித்துப் போகும்படிச் செய்யும் நெருக்கடி ஏற்படும்போதுதான் நம் சம்பிரதாயங்களில் ஊறி வந்துள்ள கேடுகளெல்லாம் திகைப்புண்டு அழிந்து நம் கலாச்சாரம் புனர்ஜன்மம் அடையும். அதுவரை ஆத்திரப்பட்டு ஒரு பயனுமில்லை!
*
சர்வாதிகார சக்தி என்பது கூர்மையான சக்தி. சர்வாதிகாரி என்பவன் முன்போ பின்போ சுயநல இச்சைகள் ஏற்படும்போது அடம்பிடிக்கும் குழந்தையாகி விடுகிறான்! எந்த க்ஷணமும் கொடுங்கோன்மையாக மாறக்கூடிய சர்வாதிகார அரசியலை விட, சக்தியற்ற மந்தமான அரசியல் எவ்வளவோ மேலானது!
*
அரசியல்வாதிகள் தங்கள் சுயதிருப்திக்காக தேசிய இலட்சியங்களைச் சூதாட்டக் காய்களாக வைத்து விளையாடுகிறார்கள்! ஆத்மவாதிகளோ தங்கள் ஆத்ம திருப்திக்காகத் தத்துவ சாஸ்திரங்களை வைத்துக்கொண்டு கண்கட்டு விளையாட்டு விளையாடுகிறார்கள்!
*
அரசியல் அதிகார பதவியில் முன்னேறுகிற எவனுடைய சரித்திரத்தை வேண்டுமானாலும் புரட்டிப் பாரும், அதிலே அவனுடைய அடிப்படை தர்மம் நிலைத்திராது! அதிகார வேட்டையிலே அவனுடைய மனித இருதயம் அழுகிப் போயிருக்கும்!
*
ஆட்சியாளனுக்குச் சர்வாதிகார வெறி ஏற ஏற, அவனுடைய பதவி அதிகாரத்திற்கு அடிமைகள் மட்டுமே தேவைப்படும்! மக்களை உணர்ச்சியற்ற அடிமைகளாகவும் பதில் பேசா ஊமைகளாகவும் ஆக்க வேண்டுமென்றால் அவர்களின் மொழியுணர்ச்சியைத் தான் முதலில் அழிக்க முயல்வான்!
*
யதேச்சதிகாரி எப்போதும் புகழ்மாலைகள் சூடிக்கொள்ளவே ஆசைப்படுவான். அவை தனக்கு ஆத்ம திருப்தி தருவதோடு, மக்களின் அதிருப்தியையும் மறைக்குமென்றும் எண்ணுவான்!
*
நீதி விசாரணை என்பது ஜனங்கள் முன்னால் தொங்கவிடப்படும் ஓர் அழகான நாடகத்திரை! அதை நீக்கிவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தால், அங்கே யதேச்சதிகாரந்தான் தென்படும்.
*
கைதேர்ந்த துரோகிகளின் பொதுநலக் கூட்டணிதான் அரசியல் துறை.
*
ஒருவனுடைய ஆசைக்குப் பெயர் சுயநலம்! பல்லாயிரக்கணக்கானவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஆசைப்படுவதற்குப் பெயர் லட்சியம்! இரண்டுக்கும் எண்ணிக்கையளவில் வித்தியாசமே தவிர, குண பரிமாணத்தில் இரண்டும் ஒன்றுதான்!
*
எந்தப் பொது லட்சியத்திலும் தனி மனிதனின் சுயநலம் எள்ளத்தனையாவது கலந்தே இருக்கும்.
*
இலட்சியம் விரிய விரியச் சூன்யம்தான் தட்டுப்படுகிறது.
*
மனித தர்மம் நசித்துப்போகும்போது காவல் பெருகுவது இயற்கைதானே?
*
மனிதனுக்குத் துக்கமோ காதலோ அதிகரிக்கும் போது தான் தத்துவச் சிந்தனைகள் உதயமாகின்றன.
*
மனைவி மக்களோடு ஆனந்தமாக வாழ்க்கை வாழ விரும்புபவனுக்குச் சரித்திரமில்லை! சரித்திரத்தை விரும்புகிறவனுக்கு மனைவி மக்களோடு
கூடிய வாழ்க்கை இல்லை!
*
கருத்தொருமித்த அன்பு மட்டும் இருந்தால் போதாது! அது அறநெறியுடையதாகவும் அங்கீகரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
*
தானே சம்பாதிக்கும் சொத்திலும் தானே தேடிக்கொள்ளும் காதலியிடமுந்தான் மனிதனுக்குச் சுவை இருக்கும்.
*
அவள் பருவப்பெண் என்று சொன்னாலே போதும், பாவையின் அழகை வர்ணிக்கத் தேவையில்லை!
*
அவள் என்னை உள்ளூரக் காதலிப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் வெளிப்படையாக அவள் காதலிக்க முயல்வதைத்தான் நான் சிறிதும் விரும்பவில்லை!
*
கற்பனையின் பாதையிலே இந்த உலகம் உன்னத நிலையை நோக்கிச் சுழன்று முன்னேற முயல்கிறது.
- அரு. ராமநாதன்