Thursday, 17 September 2020

இச்சையின் ருசிக்குப் பலியான பின்...

 ஒரே மாதிரிக் குரலில் பாட்டாக வடிவெடுத்து வந்த, காம ஒலியுண்ட சொற்கள் அவனைச் சுற்றிலும் கொசுக்கள் போலவும், ஈக்கள் போலவும், வண்டுகள் போலவும், பூச்சிகள் போலவும் மொய்த்துக்கொண்டு " ரீங்... க்ரிங்" என்று ரீங்காரம் செய்தன. காம ஒலியுண்ட சொற்கள் எறும்புகள் போலவும், புழுக்கள் போலவும் அவனுடைய உடலெங்கும் ஏறி அடர்ந்து ரோமத் துவாரங்கள் வழியாக அவனைக் கடித்துத் துளைத்துக் கொண்டு உள்ளே புகுந்துவிட முயன்றன. நேரம் செல்லச் செல்ல... பருத்துக் கொழுத்து வளர்ந்து ஆடு மாடுகள் போலவும், யானை, காண்டாமிருகங்கள் போலவும் அவன் மேலேறி மிதித்துத் துவைத்தபடி ஓடின.  காம ஒலி - அவனை மண்ணில் அறைந்து மண்ணைத் தோண்டி மண்ணுக்குள் புதைப்பதாகத் தோன்றியது; நீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து அவனைச் சுற்றிச் சுழற்றி இழுத்துக்கொண்டு செல்வதாய்த் தோன்றியது; காட்டுத் தீயாக மூண்டு பல்லாயிரம் நாக்குகளால் அவனை நக்கி நக்கிப் பொசுக்குவதாய்த் தோன்றியது; பெரும் காற்றாய் சூறாவளியாய் அவனை மூலைக்கு மூலை எறிவதாய்த் தோன்றியது. ஒலியுண்ட காமமோ, காமம்கொண்ட ஒலியோ, அது இப்போது சொற்கள் என்ற தோற்றத்திலிருந்து ஒரு புதிய உலகமாகப் பரிணமிக்கத் தொடங்கியது. அனாதி காலமாக ' ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் வேண்டித் துடிதுடிக்கும் வேட்கையின் வீறு அவனுக்குள் கிளர்ந்து எழுந்தது. அடக்கவொண்ணாத இச்சைவெறி பொறியாகத் தோன்றிப் பெரு நெருப்பாகித் தனக்குள் தன்னைத் துரத்திச் சூழ்வதை உணர்ந்து அவனுக்கு ஒரே அச்சமாக இருந்தது. அந்தக் காமகோரம் தன் மேல் பாய்வதையும், தான் தரையில் சாய்வதையும் உணர்ந்தான். மோகவெறி அதன் பிடியைத் தளர்த்திவிட்டு எழுந்து ஒதுங்கிய போது, அந்தச் சில நிமிடங்களில் தான் மிகவும் ஆபாசமாக அசிங்கப்பட்டு விட்டதாய் அவன் உணர்ந்தான். அவனுக்கு மிக மிக அருவருப்பாக இருந்தது. தான் பிசுபிசுவென்றும் பொலபொலவென்றும் மண்ணில் கிடப்பதாக அவன் உணர்ந்தான். திடீரென்று மந்தை மந்தையாகப் பன்றிகள் வாலை ஆட்டிக்கொண்டும் "கீங்... கீங்" என்று கத்திக்கொண்டும் அவனை நோக்கி ஓடி வந்தன. அவை தன்னை மிக்க சுவைத்து வேகம் வேகமாக உண்பதை உணர்ந்தான். பலப்பல மூலைகளிலிருந்து மூச்சிரைக்க ஓடிவந்த நாய்களும் அவனை நக்கித் தின்றன. புழுக்கள் அவனைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெகு சுறுசுறுப்பாய்த் தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டு செல்வதும் தெரிந்தது. தன் நாற்றம் தனக்கே சகிக்கமாட்டாமல் அவனுக்குக் குமட்டியது, வாந்தி வந்தது.

- எம். வி. வெங்கட்ராம்

நாவல்: காதுகள்