Saturday 15 July 2023

இயற்கையின் அணைப்பில்...

இரவில் படுத்திருக்கும்போது திடீரென்று நேர்வாக்கில் நின்றுகொண்டே தூங்குவதாய்த் தோன்றுகிறது. பயந்துபோய் எதையாவது பற்றிக்கொள்ளத் தவிக்கிறான். எந்தப் பக்கமும் பிடிப்பு எதுவுமில்லை. அந்தர வெளியில் தனியாக மிதப்பது போலிருக்கிறது. அவனுடைய உடல், பாரம் தாங்காமல் கீழே கீழே வெகுவேகமாக விழுகிறது. போகிறபோக்கில் எதையாவது பற்றிக்கொள்ளக் கைகள் நீண்டு துடிக்கின்றன. ஒன்றும் கிடைக்கவில்லை. படாரென்று பெரும்பாறையில் மோதிச் சிதறுகிறான். அனைத்து திசைகளிலும் அச்சம் நிழல் விரித்துப் படுத்திருக்கிறது. எங்கு திரும்பினாலும் அவனைக் கடித்துக் குதற அதன் வாய் தயாராய்த் திறந்திருக்கிறது. மனம் படபடவென்று துடித்து மெல்ல அடங்கிற்று. கண்களைத் திறந்து எதைப் பார்ப்பதற்கும் அவனுக்கு விருப்பமில்லை. மனதின் நடுக்கம் எல்லாவற்றிலும் புகுந்து அசைத்தது. ஆனால் கண்களின் நிழல்கள் விடாமல் துரத்தின. அச்சத்தால் விசும்பி அழுதான். கண்ணீர் தேங்கி நின்றது. திடீரென்று அவன் உடல் சிலிர்த்து மயிர்கள் குத்திட்டு நின்றன. உடலைக் குறுக்கி மண்ணுள் புகுந்து தற்காத்துக் கொள்ள முடியுமென்று கருதினான். உடல் சுருங்கிச் சுருங்கி புள்ளி போலானது. கற்கள் நீட்டிக்கொண்டிருக்கும் சொரசொரத்த சுவர்கள் நாற்புறமும் சூழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அவனை நெருக்கிக்கொண்டே வருகின்றன. நாற்புறமும் ஒன்றோடொன்று இணையும் இடுக்கில் அவன் சிக்கிச் சிதறுகிறான். கத்திக்கொண்டே தூக்கத்தில் புரண்ட பிறகுதான் எல்லாம் மாயம் என்பது தெரிகிறது. அதிர்ச்சி ஓடிய உடல் முறுக்கிச் சமநிலை கொண்டது. கண்ணீர் அவனுடைய கன்னங்களில் கயிறாய் ஓடிற்று. வெறும் விசும்பல் மட்டுமே அவனுள்ளிருந்து வந்த ஒலி. அவன் நாக்கு உள்ளிழுத்துக் கொண்டது. பேச்சே வரவில்லை. அழுகையே அவன் மொழி. இடைவிடாமல் அதையே பேசினான்.

அவன் வழிகளற்றவன்.

பற்றித்தூக்கும் துணைகளற்றவன்.

இரக்கம் தரும் சொற்களைப் பேசும் வாய்களற்றவன்.

ஆதரவற்றவன்.

எதுவுமற்றவன்.

நட்சத்திரங்களெல்லாம் உதிர்ந்துவிட்ட வானம் வெளிறிக் கிடந்தது. காற்று இருப்பதற்கான சுவடே இல்லை. வெகு அடர்த்தியான இருள் அவனுக்கு நெருக்கமாக வந்து தனக்குள் அவனை இழுத்துக்கொண்டது.

- பெருமாள் முருகன்

(நாவல்: கூளமாதாரி)


Thursday 17 September 2020

இச்சையின் ருசிக்குப் பலியான பின்...

 ஒரே மாதிரிக் குரலில் பாட்டாக வடிவெடுத்து வந்த, காம ஒலியுண்ட சொற்கள் அவனைச் சுற்றிலும் கொசுக்கள் போலவும், ஈக்கள் போலவும், வண்டுகள் போலவும், பூச்சிகள் போலவும் மொய்த்துக்கொண்டு " ரீங்... க்ரிங்" என்று ரீங்காரம் செய்தன. காம ஒலியுண்ட சொற்கள் எறும்புகள் போலவும், புழுக்கள் போலவும் அவனுடைய உடலெங்கும் ஏறி அடர்ந்து ரோமத் துவாரங்கள் வழியாக அவனைக் கடித்துத் துளைத்துக் கொண்டு உள்ளே புகுந்துவிட முயன்றன. நேரம் செல்லச் செல்ல... பருத்துக் கொழுத்து வளர்ந்து ஆடு மாடுகள் போலவும், யானை, காண்டாமிருகங்கள் போலவும் அவன் மேலேறி மிதித்துத் துவைத்தபடி ஓடின.  காம ஒலி - அவனை மண்ணில் அறைந்து மண்ணைத் தோண்டி மண்ணுக்குள் புதைப்பதாகத் தோன்றியது; நீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து அவனைச் சுற்றிச் சுழற்றி இழுத்துக்கொண்டு செல்வதாய்த் தோன்றியது; காட்டுத் தீயாக மூண்டு பல்லாயிரம் நாக்குகளால் அவனை நக்கி நக்கிப் பொசுக்குவதாய்த் தோன்றியது; பெரும் காற்றாய் சூறாவளியாய் அவனை மூலைக்கு மூலை எறிவதாய்த் தோன்றியது. ஒலியுண்ட காமமோ, காமம்கொண்ட ஒலியோ, அது இப்போது சொற்கள் என்ற தோற்றத்திலிருந்து ஒரு புதிய உலகமாகப் பரிணமிக்கத் தொடங்கியது. அனாதி காலமாக ' ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் வேண்டித் துடிதுடிக்கும் வேட்கையின் வீறு அவனுக்குள் கிளர்ந்து எழுந்தது. அடக்கவொண்ணாத இச்சைவெறி பொறியாகத் தோன்றிப் பெரு நெருப்பாகித் தனக்குள் தன்னைத் துரத்திச் சூழ்வதை உணர்ந்து அவனுக்கு ஒரே அச்சமாக இருந்தது. அந்தக் காமகோரம் தன் மேல் பாய்வதையும், தான் தரையில் சாய்வதையும் உணர்ந்தான். மோகவெறி அதன் பிடியைத் தளர்த்திவிட்டு எழுந்து ஒதுங்கிய போது, அந்தச் சில நிமிடங்களில் தான் மிகவும் ஆபாசமாக அசிங்கப்பட்டு விட்டதாய் அவன் உணர்ந்தான். அவனுக்கு மிக மிக அருவருப்பாக இருந்தது. தான் பிசுபிசுவென்றும் பொலபொலவென்றும் மண்ணில் கிடப்பதாக அவன் உணர்ந்தான். திடீரென்று மந்தை மந்தையாகப் பன்றிகள் வாலை ஆட்டிக்கொண்டும் "கீங்... கீங்" என்று கத்திக்கொண்டும் அவனை நோக்கி ஓடி வந்தன. அவை தன்னை மிக்க சுவைத்து வேகம் வேகமாக உண்பதை உணர்ந்தான். பலப்பல மூலைகளிலிருந்து மூச்சிரைக்க ஓடிவந்த நாய்களும் அவனை நக்கித் தின்றன. புழுக்கள் அவனைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெகு சுறுசுறுப்பாய்த் தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டு செல்வதும் தெரிந்தது. தன் நாற்றம் தனக்கே சகிக்கமாட்டாமல் அவனுக்குக் குமட்டியது, வாந்தி வந்தது.

- எம். வி. வெங்கட்ராம்

நாவல்: காதுகள்

Wednesday 3 June 2020

வீரபாண்டியன் மனைவி - சில துளிகள்

ஒரு தேசத்தில் எவ்வளவு கண்மூடித்தனமான தேசபக்தர்கள் இருக்கிறார்களோ, அவ்வளவு முட்டாள்களும் ஊமைகளும் அடிமைகளும் இருப்பதாக அரசாங்கம் கருதிவிடும்! கண்டித்துப் பேச எதிர்க் கட்சிக்காரர்கள் இல்லாவிட்டால் அரசாங்கம் யதேச்சதிகாரமாக மாறி, பெருவாரியான மக்களுக்குத் தீமைகளைப் பெருக்கிக்கொண்டே போகும். கூடிய சீக்கிரம் தேசம் சர்வ நாசமடைந்து அந்நியருக்கு அடிமைப்பட்டுப் போகும். அளவு மீறிய தேசபக்தியால் ஒரு தேசத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பது அரசியல் தத்துவம்.

*

இராஜ பக்தி என்பது வேறு; தேசபக்தி என்பது வேறு! அரசாங்கத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பக்தி வேறு; ஆளப்படும் தன் நாட்டைக் கண்திறந்து பார்க்கும் பக்தி வேறு. நாட்டிலுள்ள மக்களின் நல்வாழ்வின் மீதும் உரிமைகளின் மீதும் மொழிவழிக் கலாச்சாரத்தின் மீதும் கருத்துச் செலுத்துவதுதான் தேச பக்தியாகும். அந்த முறையில் பார்த்தால் சாம்ராஜ்யச் சக்தியும் ஆட்சி பீடத்தின் அதிகாரப் பெருக்கும் எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு ஜனங்களின் உரிமைகளும் மொழிவழிக் கலாச்சார முன்னேற்றமும் செழித்தோங்கும்! சாம்ராஜ்யம் சர்வ சக்தி வாய்ந்ததாகப் பெருகப் பெருக, ஆட்சித்தலைவனிடம் அதிகாரம் குவியக்குவிய, நாட்டின் விஸ்தீரணம் அதிகரிக்க அதிகரிக்க, தனிமனிதனின் சுதந்திரமும் மனித குலத்தின் உரிமைகளும் குறுகிக் குறுகி அடிமைச் சந்தையாகிவிடும்!

*

ஏகாதிபத்திய முறை அரசியலானது, குடிமக்களையெல்லாம் தன்னுடைய செக்குமாடுகளாக்கவே ஆசைப்படும். மக்களின் உணர்ச்சி மழுங்கி தலைதூக்க முடியாதவாறு பிரஜைகளைத் தன் காலடியில் போட்டுக் கொண்டிருக்கவே திட்டமிடும். இதற்குத் தேவையான அடிமைத்தனம் மக்களின் உணர்ச்சிகளிலும், சந்ததிகளின் இரத்தத்திலும் ஊறிவிட வேண்டுமென்பதற்காக சாஸ்திர ரீதியான ஜாதியாச்சாரங்களையும் வேரூன்றி வளரச் செய்யும்.

*

சமதர்ம உணர்ச்சியோடு பிறக்கும் மனித இனத்தை , பிறப்பைக் கொண்டே நான்கு ஜாதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு ஜாதிக்கும் பல உட்பிரிவுகளை உண்டாக்கி மக்களின் ஓரின உணர்ச்சியையும், ஒற்றுமையையும் பலவாறாக சிதறடித்து ஜாதிக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, ஒவ்வொருவரும் தங்கள் ஜாதி ஆசாரங்களை அநுஷ்டிக்க வேண்டுமென தெய்வத்தின் பெயரால் பயமுறுத்தி மக்களைப் பிரித்தாளும் ஜாதி தர்மத்திற்கு ஆட்படும் மக்கள் சக்தியானது - பல ஜாதிகளாகத் துண்டாடப்பட்டு, ஒரு ஜாதி மற்றொரு ஜாதிக்கு அடிமைப்பட்டு, எந்த ஜாதியும் எந்த தனிமனிதனும் தன் பிறப்பிலிருந்து முண்டவோ முரண்டவோ தலைதூக்கவோ முடியாதபடி ஒடுக்கப்பட்டு, சமத்துவ உணர்ச்சி மழுங்கிப்போய் சந்ததிதோறும் அடிமைத்தனத்தையே தேவாமிர்தமாக ஊட்டி வளர்த்து வரும். மக்களைப் பிரித்தாளும் இராஜ தந்திரத்தையே அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய முறை அரசியலானது, தன்னுடைய யதேச்சதிகாரம் நிலை பெறுவதற்கு இந்த ஜாதிப் பிரிவினை பெரிதும் சௌகரியமாயிருக்கிறதென்று உள்ளூரக் கருதும்!

*

அமைதியான நிலையில் நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ளமாட்டோம்! கேடான சம்பிரதாயங்கள் சிறிதும் பழுதுறாமலே இருந்துவரும். நம்மை வேறு யாராவது அடித்து உதைத்துத்தான் சீர்திருத்த வேண்டும். நாட்டில் அந்நிய மதத்தினரின் படையெடுப்பும் அந்நிய கலாச்சாரங்களின் மோதல்களும் எதிரொலிகளும் ஏற்பட்டு ஸ்தம்பித்துப் போகும்படிச் செய்யும் நெருக்கடி ஏற்படும்போதுதான் நம் சம்பிரதாயங்களில் ஊறி வந்துள்ள கேடுகளெல்லாம் திகைப்புண்டு அழிந்து நம் கலாச்சாரம் புனர்ஜன்மம் அடையும். அதுவரை ஆத்திரப்பட்டு ஒரு பயனுமில்லை!

*

சர்வாதிகார சக்தி என்பது கூர்மையான சக்தி. சர்வாதிகாரி என்பவன் முன்போ பின்போ சுயநல இச்சைகள் ஏற்படும்போது அடம்பிடிக்கும் குழந்தையாகி விடுகிறான்! எந்த க்ஷணமும் கொடுங்கோன்மையாக மாறக்கூடிய சர்வாதிகார அரசியலை விட, சக்தியற்ற மந்தமான அரசியல் எவ்வளவோ மேலானது!

*

அரசியல்வாதிகள் தங்கள் சுயதிருப்திக்காக தேசிய இலட்சியங்களைச் சூதாட்டக் காய்களாக வைத்து விளையாடுகிறார்கள்! ஆத்மவாதிகளோ தங்கள் ஆத்ம திருப்திக்காகத் தத்துவ சாஸ்திரங்களை வைத்துக்கொண்டு கண்கட்டு விளையாட்டு விளையாடுகிறார்கள்!

*

அரசியல் அதிகார பதவியில் முன்னேறுகிற எவனுடைய சரித்திரத்தை வேண்டுமானாலும் புரட்டிப் பாரும், அதிலே அவனுடைய அடிப்படை தர்மம் நிலைத்திராது! அதிகார வேட்டையிலே அவனுடைய மனித இருதயம் அழுகிப் போயிருக்கும்!

*

ஆட்சியாளனுக்குச் சர்வாதிகார வெறி ஏற ஏற, அவனுடைய பதவி அதிகாரத்திற்கு அடிமைகள் மட்டுமே தேவைப்படும்! மக்களை உணர்ச்சியற்ற அடிமைகளாகவும் பதில் பேசா ஊமைகளாகவும் ஆக்க வேண்டுமென்றால் அவர்களின் மொழியுணர்ச்சியைத் தான் முதலில் அழிக்க முயல்வான்! 

*

யதேச்சதிகாரி எப்போதும் புகழ்மாலைகள் சூடிக்கொள்ளவே ஆசைப்படுவான். அவை தனக்கு ஆத்ம திருப்தி தருவதோடு, மக்களின் அதிருப்தியையும் மறைக்குமென்றும் எண்ணுவான்!

*

நீதி விசாரணை என்பது ஜனங்கள் முன்னால் தொங்கவிடப்படும் ஓர் அழகான நாடகத்திரை! அதை நீக்கிவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தால், அங்கே யதேச்சதிகாரந்தான் தென்படும்.

*

கைதேர்ந்த துரோகிகளின் பொதுநலக் கூட்டணிதான் அரசியல் துறை.

*

ஒருவனுடைய ஆசைக்குப் பெயர் சுயநலம்! பல்லாயிரக்கணக்கானவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஆசைப்படுவதற்குப் பெயர் லட்சியம்! இரண்டுக்கும் எண்ணிக்கையளவில் வித்தியாசமே தவிர, குண பரிமாணத்தில் இரண்டும் ஒன்றுதான்!

*

எந்தப் பொது லட்சியத்திலும் தனி மனிதனின் சுயநலம் எள்ளத்தனையாவது கலந்தே இருக்கும்.

*

இலட்சியம் விரிய விரியச் சூன்யம்தான் தட்டுப்படுகிறது.

*

மனித தர்மம் நசித்துப்போகும்போது காவல் பெருகுவது இயற்கைதானே?

*

மனிதனுக்குத் துக்கமோ காதலோ அதிகரிக்கும் போது தான் தத்துவச் சிந்தனைகள் உதயமாகின்றன.

*

மனைவி மக்களோடு ஆனந்தமாக வாழ்க்கை வாழ விரும்புபவனுக்குச் சரித்திரமில்லை! சரித்திரத்தை விரும்புகிறவனுக்கு மனைவி மக்களோடு 
கூடிய வாழ்க்கை இல்லை!

*

கருத்தொருமித்த அன்பு மட்டும் இருந்தால் போதாது! அது அறநெறியுடையதாகவும் அங்கீகரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

*

தானே சம்பாதிக்கும் சொத்திலும் தானே தேடிக்கொள்ளும் காதலியிடமுந்தான் மனிதனுக்குச் சுவை இருக்கும்.

*

அவள் பருவப்பெண் என்று சொன்னாலே போதும், பாவையின் அழகை வர்ணிக்கத் தேவையில்லை!

*

அவள் என்னை உள்ளூரக் காதலிப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் வெளிப்படையாக அவள் காதலிக்க முயல்வதைத்தான் நான் சிறிதும் விரும்பவில்லை!

*

கற்பனையின் பாதையிலே இந்த உலகம் உன்னத நிலையை நோக்கிச் சுழன்று முன்னேற முயல்கிறது.

- அரு. ராமநாதன்

Sunday 24 May 2020

கவிதைக்குள் கவிதைகள்

கவிதை வாசிப்பில் தீவிரமாக ஈடுபடும் மனதும் மூளையும், ஏராளமான உணர்வுக் குவியல்களின் பொதியைச் சுமந்து திரியும். அஃது ஓர் பித்து நிலை. அப்படியான நிலையில் திரியும் மனது, அவ்வப்போது சில கிறுக்குத்தனங்களைச் செய்து பார்க்கும். அதில் ஒன்றுதான் எழுதப்பட்ட கவிதையைக் கலைத்துப்போட்டு வேறொரு கவிதைக்குள் நுழைவது. எந்தக் கவிஞரும் இதைக் கேட்டால் சினங்கொள்ள வாய்ப்புண்டு. எழுதப்பட்ட கவிதையின் வழியாக பல தளங்களுக்குள் நுழைவதும், எழுதப்பட்ட கவிதையின் ஒழுங்கை(ஒழுங்கின்மையைச்) சிதைத்து, வரிகளைக் கலைத்துப்போட்டு மாற்றி மாற்றி படித்தும் எழுதியும் பார்த்து பல தளங்களுக்குள் நுழைவதும் வேறு வேறு.
முதலாவது, கவிஞரின் கட்டற்ற சுதந்திர வெளியில் திரிந்து பறந்து தனக்கான ஏதோ ஒன்றைக் கண்டடைவது.
இரண்டாவது, தனக்கான ஏதோ ஒன்றைக் கண்டடைவதற்காகக் கவிஞரின் சொற்களை வளைப்பது.

கவிஞரின் எழுதுகோல் வழியாக வழிந்த
சொற்களின் இரசவாத வித்தையின் சூட்சுமம் பிடிபட மறுக்கும்போது, வாசகனுக்கு மேற்சொன்ன 'இரண்டாவது' உத்தி கைகொடுக்கிறது. கவிதைக்குள் கவிதைகளை எடுக்க உதவுகிறது. எனவே, பிரம்மாக்கள் தயை கூர்ந்து இக்கருச் சிதைவைப் பொறுத்தருள வேண்டும்.

அப்படியான ஓர் கவிதை இது.

நினைவு மறதி
*******
அவன் தன் இதயத்தை சந்தியில் நின்று விநியோகிப்பான்
அவன் உனக்குக் கவிதை எழுதிக் கொடுப்பதாகச் சொல்வான்
அவன் பார்த்துப் பார்த்து செய்வான்
அவனைக் காலடியில் கிடத்த ஒரு புன்னகை போதும்

அவன் நடு இதயத்தில் ஆணி அடிப்பான்
அவன் இன்று உன்னைக் குறித்த ஒரு வதந்தியைப் பரப்பியிருப்பான்
அவன் உன் ரோஜாத்தோட்டத்தை வெந்நீர் ஊற்றி அழிப்பான்
அவன் உன்னைத் திரும்பியும் பார்க்க மாட்டான்
அவன் அடிப்பதை நீ வாங்கிக்கொள்வாய்

அவன் போலி ஐடியில் இருந்து நட்புக்கோரிக்கை அனுப்புவான்
அவன் உன்னோடு தேநீர் குடிக்கும்போதும் படுக்கையைக் கற்பனை செய்வான்
அவன் மது அருந்தும் போதெல்லாம் நீதான் ஊறுகாய்
அவன் மனைவிக்கு உன்னை அறிமுகம் செய்யமாட்டான்
அவன் நெருங்கினால் வாழைமட்டை, விலகினால் கொடிக்கம்பம்
அவன் இன்பாக்ஸில் நண்பன், பொதுவில் எதிரி
அவன் வெட்கமே இல்லாமல் மன்றாடுவான், நீ பலியாள்

அவனுக்கு சுயமைதுனம் செய்ய நடிகையின் புகைப்படம் வேண்டும்
அவனுக்கு நீ பேசுவது புரியாது, ஆனால் மையமாக இளிப்பான்
அவனுக்கு கற்பனையில் மட்டுமே விந்து வெளியேறும்
அவனுக்கு நீளம்போதாது
அவனுக்கு நேரம்தாங்காது
அவனுக்கு மனப்பிறழ்வு, தினமும் உடற்பயிற்சி செய்வான்
அவனுக்கு நீ தாயாகவோ, தங்கையாகவோதான் இருக்கமுடியும்
அவனுக்கு உன்னை வைத்துக்கொண்டு என்ன செய்வதெனத் தெரியாது
அவன் உன் கருவறைக்குள் சென்று படுத்துக்கொள்வான்

அவனை என்ன செய்தும் வீழ்த்தவே முடியாது
அவனை நிராகரித்தால் தலை தீப்பிடித்து எரியும்
வேறு வழியில்லை
அவன்
தான் ‘ஆண்’ என்பதை மறக்கும்வரை நீ பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

- லீனா மணிமேகலை

Tuesday 14 April 2020

வீரயுக நாயகன் வேள்பாரி - மனதில் நின்ற வரிகள்

  • மனிதன் முதிரும்போதுதான் மனங்களைக் கையாளக் கற்றுக்கொள்கிறான். மனம் விழுந்த பின்னர் எழ வைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால், வீழ்ந்துகொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்துவதுதான் முக்கியம். வாழ்வின் சாரமேறிக் கிடக்கும் அனுபவ அறிவால்தான் அதைச் செய்யமுடியும்.

  • வணிகமே வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கிறது.

  • இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே துவங்குகிறது. எல்லாவிதமான புதிய ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக அவையே இருக்கின்றன. காதலுக்குள்தான் இயற்கையின் இயங்குசக்தி பொதிந்து கிடக்குகிறது. ஆண், பெண் என்ற இரு சக்திகள் ஒருபோதும் ஒன்றையொன்று முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.

  • அறியாமை ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகள், அறிந்தவர்களுக்குக் கிடைக்காது.

  • நம்பிய பிறகு ஒருவனை ஐயங்கொள்வது எளிதல்ல.

  • ஆறாத் துயரைக் கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணைகூறச் சொல்லில்லை.

  • பரிமாற்றம் என்பது தேவை சார்ந்தது. வணிகம் என்பது ஆதாயம் சார்ந்தது. ஆதாயம் மனிதத் தன்மையற்றது; மாண்புகளைச் சிதைப்பது. இயற்கை வழங்குகிறது; நாம் வாழ்கிறோம். இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?

  • எதுவொன்றையும் தேவையானதாக மாற்றுவதுதான் வணிகம். வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது. அதை வெல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை.

  • செடி, கொடிகளை அறிந்தவர்களை எளிதில் ஈர்க்க முடியாது. அவர்கள் கணம்தோறும் உயிரின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தவர்கள். வண்ணங்களையும் வாசனைகளையும் அவர்கள் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவர்களின் கவனத்தைக் கவர்வதோ, காதலைப் பெறுவதோ எளிதல்ல.

  • காலம் மனித அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்பாராத கனத்தில் சந்திக்கும்போது மனிதன் பொறிகலங்கிப்போவதைத் தவிர வேறு வழி என்ன?

  • காமத்துக்கு மிக அருகில் பயணிப்பது நீர். உடலின் வாசனையை மனதுக்குள் பாயவிடும் மாயசக்தி நீருக்கு மட்டுமே உண்டு.

  • காதல் சொல்லால்தான் மலர்கிறது.

  • மலையில் வாழ்ந்தவர்கள், காட்டில் வாழ்ந்தவர்கள், கடற்கரையில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் வெட்டிச் சாய்க்கும் வாள்முனையின் பின்னும், பாய்ந்து இறங்கும் அம்பு முனையின் பின்புமே அலைந்து கொண்டிருந்தனர். ஆனால், கூடல்வாசிகள்தான் எந்நேரமும் ஊர்ந்து நகரும் மண்புழுவின் பின்னும், சிறு துவாரம் உருவாக்கி மறுகணம் சிறகு விரிக்கும் ஈசலின் பின்னும் அலைந்து கொண்டிருந்தனர்.

  • கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடியென இயற்கையெல்லாம் நமக்குத் துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை, கதையன்றி வேறு யார் கொடுப்பது?

  • கதை, சொல்லும்போது பெருகக்கூடியது; நினைக்கும்போது திரளக்கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக்கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.

  • மனிதன், கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.

  • அனுபவம், அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது.

  • பறிக்கப்பட்ட காதலின் ஆவேசம் எளிதில் அடங்காது. பூவுக்குள் இருந்து விதை முளைவிடுவதைப் போல, இன்னொரு முறை காணமுடியாத அதிசயக் கனவு. அது என்னை விட்டு ஒருபோதும் பிரியாது. அந்த நினைவில், என் இளமை முகிழ்ந்த கணம் இருக்கிறது. பற்றியெரியும் காமம் இருக்கிறது. எனது மனம் ஒருபோதும் கீழிறங்காது.

  • கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப்போலப் படிந்தே கிடக்கவேண்டும். காதலுக்குத்தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெரும்தண்டனையைக் கனவுகளே அளிக்கின்றன.

  • கேள்விகள் உருவாகிவிட்டால் அவை பதிலின்றி உதிராது. இயல்பாக உதிராத கேள்விகளை உடைத்தால், அவை மீண்டும் தழைக்கும்.

  • மனித மனத்தை இயக்கும் விசையை அறிதலே கலையின் உச்சம்.

  • எந்தவோர் அரண்மனையிலும் அனைத்து இடங்களிலும் அதிகாரம் செலுத்துவது அரசரின் குரலன்று; அரசரின் குரலாகக் கருதப்படுகிற குரல். அதைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது.

  • மண்ணுக்குள் நீர் இருப்பது போல, மரத்துக்குள் தீ இருக்கும். மரம் தீயாய் மாறும் ஆவேசம் அளவிட முடியாதது. அது காலகாலமாக அடக்கி வைக்கப்பட்ட ஒன்றின் வெளிப்பாடு.

  • உறங்கும் இரவுகளில் கனவுகளை நிறுத்தும் வல்லமையை மனிதன் ஒருபொழுதும் பெற்றுவிட முடியாது.

  • பொறாமையும் வெறுப்பும் மனித மனத்தைக் குறைந்த அளவே இயக்கும் ஆற்றல் கொண்டவை. பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது.

  • பகை மட்டுமே மூட்டியவனால் கூட அணைக்க முடியாத பெரு நெருப்பு.

  • பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ள மாட்டாள். அவள் சிக்கிக்கொள்வது அவளிடம் மட்டும்தான். ஆண் ஒருபோதும் பெண் மனதைக் கண்டறிய முடியாது. பெண்ணுடல், பிரித்தறிய முடியா மர்மங்களின் சேர்மானம். ஆண்களால் கணிக்கவே முடியாத கற்பாறை.

  • கலையின் வழியாக ஆணுக்குள் இறங்குபவள், இயல்பாகவே அடியாழம் வரை இறங்க முடியும்.

  • அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழ முடியாது. ஏனென்றால், அது இயற்கைக்கு எதிரானது. விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது. இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.

  • இழக்கக்கூடிய வாழ்விடத்தில் எந்த உயிரையும் இயற்கை உருவாக்கவில்லை. எனவே, தனது வாழ்விடத்தை ஓர் உயிர் இழப்பது இயற்கையுடனான ஆணிவேரை அறுத்துக்கொள்வதற்கு நிகர்.

  • எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை.

  • போரென்று வந்துவிட்டால், அதற்கு வெற்றி மட்டுமே நோக்கமாக இருக்க முடியும். அந்த வெற்றியை அடைய நிகழ்த்தப்படும் கொலையில் அறமும் அடக்கம். எனவே, போரில் அறம் நெடுநேரம் உயிர் வாழாது.

  • நீரை நிலம் விழுங்குவதைப் போல, தனது வீரத்தைத் தானே விழுங்கி வற்றச்செய்யும் வேலையை மனம் நமக்குத் தெரியாமலேயே செய்து கொண்டிருக்கும்.

  • மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை.

  • முழுமுற்றாக நிராகரிப்பதற்கும் நிராகரிக்கும் காரணத்தை விளக்குவதற்கும் நுட்பமான இடைவெளி உண்டு. கண்ணுக்குத் தெரியாமல் ஒருபடி கீழிறக்கும் செயல் அது.

  • கரையத் தொடங்கிய ஒன்று மறுபடியும் தனக்குத்தானே உறைந்து இறுகுவது எளிதன்று.

  • விதிகள், சமமான தோற்றத்தை உருவாக்க நினைப்பவை. அறவுணர்வு, சமமற்றவற்றின் நியாயத்தைப் பற்றி நிற்பவை.

  • முடிவுறாத வேட்டையை எந்த உயிரினமும் நடத்தாது. மனிதன்தான் ‘போர்’ என்ற பெயரில் அதை நடத்திக் கொண்டிருக்கிறான்.

  • அதிகாரமும் அறமும் இரண்டு எல்லைகள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறம் பேணவே முடியாது.

  • எந்தவொரு உயிரினமும் தன் உயிர் காக்கும் செயலை உச்ச ஆற்றலோடுதான் நடத்தும்.

  • எரிந்து மறைதலும் ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு.

- சு. வெங்கடேசன்

Sunday 26 January 2020

முடிவற்ற உரையாடல் - 2


“ மச்சி...சரக்கு வாங்கலாம்னா, உனக்கு எப்புடி குடுக்குறதுன்னு யோசிக்கிறேன்.”

“ இப்பத்தாண்டா நீ ஒரு உருப்படியான கேள்வி கேட்டுருக்க. நல்ல தரமான, சுவையான, விலை அதிகமான சரக்கா வாங்கி அனுப்பு.”

CHEVAS REGAL– SPECIAL EDITION  வாங்கிருக்கேன். How to transfer?

“ அதான் தெரியல... கண்ணாடிப் போத்தல் இல்லாம வேற எதுலன்னா அடச்சுத் தருவாய்ங்களா?”

“ கண்ணாடிப் போத்தல்லதான் வரும். வேற எதுல வரும்?”

“ இல்லடா... Kinda polymer stuff… சரி விடு, நீ எந்த ‘பார்சல்’ல அனுப்புனாலும் ஒடஞ்சுப் போக நெறைய வாய்ப்பிருக்கு. அதுனால, ஒன்னுக்கு ரெண்டா வாங்கி அனுப்பு.”

“ டேய்... This is bottle. How can I parcel it?

Why not ? Try thermocol or sponge kinda stuff for packing and send it.

“ ‘பார்சல்’லாம் லேது. யாராச்சும் போனா குடுத்துவிடுறேன்.”
“ மூணு பவுண்ட் மூளைய வச்சுக்கிட்டு எவ்வளவோ யோசிக்கிற... இந்தச் சின்ன விஷயத்தப் பண்ணமாட்டியா?”

“ ஆமா, பண்ண மாட்டேன்.”

“ ஓகே... ஓகே வாங்கு. முடிஞ்சா கூடவே நல்ல கஞ்சா கெடச்சா வாங்கி அனுப்பி விடு.”

“ அடேய்... அதெல்லாம் நம்ம நாட்டுலேயே கெடைக்கும்… தவிர, உனக்கு ஏன் இந்த வேண்டாத வேல? ஏற்கனவே ஒரு மாதிரி சுத்திட்டுருக்க... இதுல இந்த எழவு எதுக்கு உனக்கு?”

எல்லாம் ஒரு தேவைக்குத்தான்... இந்த நெனப்பு இருக்கே... நெனப்ப விட ஒரு பெரும் போதை இருக்க முடியுமா? மண்டைய ஒழப்பிவிட்டு அந்தச் சனியனைக் கொஞ்ச நேரம் செதைக்கத்தான்.

“ இந்த வியாக்கியானத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை. இலக்கிய ஆர்வமெல்லாம் தாறுமாறா இருக்கே... அதுல எறங்கிற வேண்டியதுதான?”

“ அது ஒரு மாதிரி எனக்கான ஒரு சமாதானம், ஒரு விடுபடல்... அம்புடுத்தான். மத்தபடி, இலக்கியம் இந்தச் சமூகத்துக்கோ தனி மனித மேம்பாட்டுக்கோ பெரும் தொண்டாற்றும்னுலாம் எனக்குத் தோணல. வாழ்க்கையோட இருளும் வெளிச்சமும் கலந்த மாயப் பாதையிலிருந்து தப்பிக்க இன்னொரு பெரும் மாயைக்குள் தலையை நுழைக்க வேண்டியிருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு வழி இருக்கும். எனக்கு வாசிப்பு ஒரு வழி. சொல்லப்போனா வாசிப்பு மனுசன யோசிக்க வைக்குது, சமநிலையைக் கொலைக்குது, வாழ்வின் அத்தனை கசப்புகளுக்கும் மத்தியில ஒருத்தர் தங்களைச் சுத்திக் கட்டமைச்சு வச்சுருக்க மகிழ்ச்சியான உலகத்தைச் செதைச்சு இந்த உலகத்தோட போலித்தனத்தைத் தெளிவா தோலுரிச்சுக் காட்டுது. அது இந்த உலகின் மீது, வாழ்வின் மீது, தெளிவான ஒரு பற்றற்ற மன நிலையையும் மன வெறுமையையும்தான் அதிகமாக்குதே தவிர, மன மகிழ்வையோ நிம்மதியவோ தராதுன்னு தோனுது. ஒருவேளை, அப்படியான ஒரு தேடல்தான் பூரணமோ என்னவோ தெரியலை. என்னளவில், இலக்கியம் விட்டுச் செல்வதெல்லாம் மானுட வாழ்வின் மீதான, சமூகத்தின் மீதான, பண்பாடுகளின் மீதான, வரலாற்றின் மீதான, கடைபிடிக்கும் மதம் மற்றும் சாதிச் சடங்குகள் மீதான, அரசியல் மற்றும் தத்துவக் கொள்கை கோட்பாடுகள் மீதான, இன்னும் எண்ணிலடங்கா விசித்திரங்களின் மீதான எண்ணற்றப் புதிரானக் கேள்விகளே.

“ எனக்கென்னமோ நீ ஒரு பக்கத்தத்தான் பாக்குறாப்ல தோனுது. இலக்கியம் நீ வாழும் உலகைப் பேரன்பு கொண்ட கண்களோடு பார்க்க, நீ வாழும் வாழ்வின் மீது பற்றுக்கொள்ள, வாழும் கணங்களின் உன்னதத்தை உணரப் பேருதவி புரிகிறது. இந்த பூமியில் உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றின் இருப்பை, அவற்றுக்கு இந்த பூமியோடான பிணைப்பை  ஒரு பெருமழையைப் போல - சுட்டெரிக்கும் வெயிலைப் போல - கவிழத்துவங்கும் இருளைப் போல - அழிக்கத் துடிக்கும் புயல் போல, மனித மனங்களில் காகிதப் படிமங்களாகப் பதிவு செய்கிறது. இயற்கையின் பேருண்மையோடு மானுட வாழ்வின் படிநிலைகளை, சிக்கல்களை, கொண்டாட்டங்களைப் பிணைத்து ஆவணப்படுத்தும் ஒரு பெரும்பணியைச் சத்தமில்லாமல் செய்வதோடு, மனிதனை அவனறியாமல் செழுமைப்படுத்தவும் செய்கிறது. பேராசைகளோடு, பொறாமையோடு, சுயநலத்தோடு ஓடும் மனிதனை வடம் கட்டி இழுத்து வைக்காமல் ஒரு மெல்லிய இறகைப் போல வாழ்வின் அழகியலையும் அன்பின் மகத்துவத்தையும், ஒரு சவுக்கடியைப் போல உண்மைகளையும் அவலங்களையும் மனிதனின் அகக்கண்ணுக்குக் காட்சிப்படுத்துகிறது. எழுத்தில்லையேல், சமூகக் கீழ்மைகள் எதிலிருந்தும் மனிதன் மீண்டிருக்க வாய்ப்பே இல்லை. இன்றைய அநீதிகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களுக்கும், எதிர்வினைகளுக்கும், பிரச்சனைகளைத் தொலைநோக்குடனும் பொறுப்புடனும் அணுகுவதற்கும் அடிப்படை, ஆதி, பேனாவிலிருந்து இளகி ஓடிய நீல நிறமே.

“ நேர் - எதிர் வினைகள் இரண்டுமில்லாத வாழ்வென்பதேது? என்ன மாதிரியான விளைவுகளை, மாற்றங்களை எழுத்தோ - கலையோ இந்தச் சமூகத்துல ஏற்படுத்திருக்கு இப்ப வரைக்கும்? சமூகக் கீழ்மைகள் எது மறைஞ்சு போயிருக்கு இப்ப வரைக்கும்? வேறு வடிவில் வேறு வழியில் இன்னும் உக்கிரமாகப் பரவுதே தவிர கொறையலையே. I cannot stick with this so called “positivity” when I am seeing full of thrones in life path. All I am saying is just don’t act everything is not like before or everything is changed, just accept it and try to resolve it in anyways you know.”

மாற்றங்கள் நீ சொல்றது மாதிரியெல்லாம் மின்னல் வேகத்துல வராது, வரவும் முடியாது. Change is a progress and it will take its time nonetheless of whatever happens in society. It engulfs generations for that. And for that, positive mind is mandatory and very important too. So, try to understand or shut the fuck off. Don’t spread your negative vibe to everyone. Gotcha?”

ஏன் இப்படி? நான் என் கருத்தைச் சொன்னேன், அவ்ளோதான். கூடுமானவரை நல்லனவற்றையே இந்த உலகம் பாக்கணும்ங்குற நப்பாசைதான் எனக்கு. அதோட ஆதங்கம்தான் இதெல்லாம். சரி, எதுனா வாசிச்சியா?”

“ ம்ஹூம். அப்பப்ப காமெடி, அப்பப்ப பிட்டு (கிட்டத்தட்ட எல்லா நாளும்).”

“ சிறப்பு. இந்தச் சனியனை விட்டொழிக்க எதாச்சும் பண்ணணும். ஒரு பொண்ணப் பாத்துக் கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாயிடும்னு சொல்றவங்களுக்கெல்லாம் புரிதலில்லன்னு படுது. அதெல்லாம் தாண்டுன ஒரு விஷ போதை இது!”

“ பொண்ணு, கல்யாணம், உடல் தேவை காரணிகளெல்லாம் ஓரளவு சரியும் கூட.”

“ கரமைதுனம், விரும்பிச் செஞ்சா ஒரு சிற்றின்பம்; ஆயினும், பேரானந்தம். பெரும்பான்மைச் சமூகத்துக்கு அது குற்ற உணர்வு. இன்னொரு பாலினம் என்று வரும் போது ஒரு உயிர். அங்கதான் உளவியல் பிரச்சனை துவங்குது.”

“ அடேய்! இது ஒரு need, ஒரு fantasizing. ஒரு பெண் இருந்தா பரஸ்பர உடல் பகிர்வுகளால external source தேவையில்லாமப் போயிடும்.”

ம்ஹூம். நீ பாத்த எல்லாமே நடப்புல முரணாவோ போலியாவோ இருந்தா, பரஸ்பர புரிதல் வேறாவும் உடல் வேறாவும் ஆட்டம் போட்டா, இயல்பில் எதிர்ப் பாலினம் கசப்பா இருந்தா... பேராபத்து இல்லையா?”

“ பாத்த எல்லாத்தையும் செஞ்சுப் பாக்கணும்ங்குற எண்ணத்தைத் தேவையில்லாம வளத்துக்கிட்டா நீ சொல்றது நடக்க வாய்ப்பிருக்கு. சுயமைதுனம், மனசையும் ஒடம்பையும் தன்னோட கட்டுப்பாட்டுல வச்சுக்கறதுக்கான ஒரு தற்காலிகத் தீர்வுங்குறத எப்பவும் நெனப்புல வச்சுக்கிட்டே இருக்கணும்.”

“ சரிதான். மூளை எப்பவுமே சரியானதைச் சொல்லுது... இல்லாத மனசுதான் தறிகெட்டுத் திரியிது. தெனவெடுத்து அலையுற ஒடம்ப என்னப் பண்ணுறது?”

“ ஆமா, என்னப் பண்றது? இப்போதைக்கு அதுக்குத் தேவையானதைக் குடுத்துட்டு நகர வேண்டியதுதான்.”

“ நம்ம ஒரு நாள் PORN ADDICTION பத்திப் பேசிட்டு இருந்தப்போ, அப்படி அதுல என்னதான் இருக்குன்னு எல்லாப் பாலியல் வலைதலங்களுக்கும் போனேன். எவ்ளோ ஆழம் போறோம்னு பாக்க... உண்மையா காமம் உன்மத்தம் எடுத்து ஆடுது! அதை உள்வாங்க உள்வாங்க பொண்ணெல்லாம் ஒரு உசுரா நெனைக்குற எண்ணமே மறைய ஆரம்பிக்கிறதா தோணுச்சு.”

Yes, vicious cycle. We should be more careful about what we are going through. There is a bait which is so obvious. Neither being a prey nor seeing the opposite sex as a prey is very important. It should not make us to forget the importance of opposite sex.”

“ பெண்ணே இல்லாத ஆண் சமூகமும், ஆணே இல்லாத பெண் சமூகமும் இருந்தா இந்தப் பாலியல் இச்சைங்குற ஒரு உணர்வே இல்லாம போயிடுமோ? வக்கிர எண்ணங்களுக்கு விதையான இந்த உடல் இச்சை ஒழிஞ்சா பாலியல் வன்கொடுமைகள் எதுவும் இல்லாம ஆயிடுமோ? பெண்களுக்கெனத் தனி உலகமும், ஆண்களுக்கெனத் தனி உலகமும் இருந்து, மானுட பிறப்பிற்கான கலவி என்ற ஒன்றே இல்லாது போய், அந்தந்த உலகில் இருக்கும் உயிர்கள் காமமின்றி மற்ற அத்தனை உணர்வுகளோடும் வாழ்ந்தழிந்து புதுப்புது உயிர்கள் தோன்றாதா? தோன்றி மறையாதா?  என்றெல்லாம் அடிக்கடி தோன்றும். அதற்கு நானோ (என் மனவோட்டத்தின் அடிப்படையில்) அல்லது இச்சமூக அமைப்போ காரணமாயிருக்கலாம்.”

“ எதுக்கு இவ்ளோ விசித்திரமா யோசிக்கணும்? சமூகத்தோட எதார்த்தங்களை வச்சு, சமூகத்தைச் சுத்தியே சிந்திக்குறதுதான் சரியா இருக்கும். பிரச்சனைகளுக்குத் தீர்வு வரணும்னா அது இங்க இருந்து தான் வரணும். சந்திரன்ல இருந்தோ சூரியன்ல இருந்தோ வராது. பிரச்சனைகளை எவ்வளவு எளிமையா அணுகுறமோ, அவ்வளவு எளிமையா தீர்வு கெடைக்கும்.”

“ விசித்திரமா யோசிக்கிறனா? உச்சமா ஒரு எடுத்துக்காட்டு சொல்லணும்னா, பொள்ளாச்சி சம்பவம். மனித மனம் எத்தனை சுயநலமும் கழிவும் பீடித்த ஒன்றென்பதற்கானச் சான்று. இப்படியெல்லாம் நடந்தா அப்படியெல்லாம் யோசனை வரத்தான் செய்யும்.”

“ ஆமா. பிரமாண்டமா பரவிக் கெடக்குற இணையவெளி, புதிய திறப்புகள் புதிய குற்றங்களுக்கு உதவி செய்யுது.”

“ புதிய திறப்புகள் அதிகமா குற்றங்களுக்கு மட்டும்தான் உதவுது. பாலியல்   பிரச்சனைகளை ஆழ்ந்து கவனிச்சா, இச்சையும் அதைத் துன்புறுத்தி அடைவதில் பெறும் ஆனந்தமும்தான் மனித மனம் விரும்புது. கணவன் மனைவியை, காதலன் காதலியை... ஏதோ ஒரு வகை வன்முறை மூலமாத்தான் இச்சை தீர்க்கப்படுது... அதுதான் மகிழ்வையும் தருது... அத்தனைக் கசப்பு! அதனாலதான் அதைச் சத்தமா, ரொம்பச் சத்தமா பேச வேண்டிய தேவையிருக்கு.”

“ சிலருக்கு...சிலருக்கு.”

“அடேய்... குற்றம் நேரடியா இருக்கு சிலர் செய்யும்போது... சட்ட விதிகளுக்குள் வருவதால். சட்ட விதிகளுக்குள் இல்லாமத்தான் இங்கப் பல குற்றங்கள் இருக்கு.”

“ சட்ட விதிகளுக்குள் இல்லாமனா?”

As per section, it is a crime; it is not added as a crime or not a big crime but mistake. And that makes big difference. Vocal dispute, stalking, marital troubles, sexual intercourse difficulties – all are approached as a trivial matter in this society mostly…  These contradictive  and lethargic dealing of issues lead to disaster… particularly in sexual approach… don’t know how to convey you… it is as it is… with flaws… you have to survive in that and die. There is no living in all this bullshit. That’s all.”

ஓ... அப்ப நம்ம கலாச்சாரக் குளறுபடிகளால பாலியல் புரிதல் தெளிவா இல்லாததால உண்டாகுற பாலியல் வறட்சி பாலியல் உறவைச் சிக்கலாக்க வாய்ப்பிருக்கலாம். பாலியல் வன்முறைகளுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ இந்தச் சமூகத்தோட பங்கும் இருக்கலாம்.  இதத்தான் நீ சொல்ல வர்றேன்னு நெனைக்கிறேன்.”

“ அன்பின் பேராலயும் அதிகாரத்தின் பேராலயும் நடக்குற வன்முறைகளுக்கு இந்தச் சமூகத்துல சரியானத் தீர்வுகளைச் சட்டத்தின் வழி அடையறது சிக்கலானதுங்குறத புரிஞ்சுக்கலாம். ஆனா, நேரடி வன்முறைகளுக்கே ஒரு முடிவும் இல்லன்னா எப்படி? எப்பவும் ஏன் காமம், காதல் பற்றிய சிந்தனைகளுக்குள் மூழ்கிப் போறதா கேக்குறியே? ஆண், பெண் உறவுதான் மானுட வாழ்வின் மையப்புள்ளி. அந்த உறவின் வேரே காமம் தான். அதை ஒதுக்கிட்டு இங்க ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.”

“ ஆண் பெண் உறவு ஒரு பெரிய வட்டம்; காமம் அதுல ஒரு சின்ன வட்டம். அந்தச் சின்ன வட்டத்துக்குள்ளேயே சுத்திட்டு இருக்க வேணாம்னுதான் நான் சொல்றேன்.”

உனக்குப் புரியல... நான் என்ன அங்கேயேவா நிக்கிறேன்? அந்தப் பெரிய வட்டத்துக்கே ஆதியும் அந்தமும் காமமும், காதலும் தான். மத்ததெல்லாம் இடைச்செருகல்கள்.”

“ நான் ‘ வட்டத்துக்கு வெளியே’னு சொன்னேன்.”

“ வாழ்க்கையை நீ வட்டமா உருவகம் பண்ணதால அப்படிச் சொன்னேன். பிரபஞ்சமா உருவகம் பண்ணா முதல் அணுத்துகள்னு வேணும்னா சொல்லலாம் ஒரு புரிதலுக்கு.”

“ வாழ்க்கை வட்டமெல்லாம் இல்லடா; அது நேர்க்கோடு. திரும்பியெல்லாம் வர முடியாது. எதுவுமே அதோட ஆதாரம் இல்ல.  வழியில வர சில தொந்தரவுகளை உதறித் தள்ளிட்டுப் போகும் இல்லன்னா தடம் மாறும் இல்லன்னா அழியும்.”

“ இது எதிர்மறை எண்ணமாவே இருந்தாலும் இன்று வரையிலான என் தெளிவில் சொல்றேன். எதற்கும் இங்கே தீர்வில்லை... தேடுதல் மட்டுமே நீடிக்கும்... புதுப்புது சித்தாந்தங்கள் பிறக்கும் - மரிக்கும்... இது ஒரு கருந்துளைப் போல.”

“ தேடல் தப்பே இல்லையே. தேக்கநிலைதான் ஆபத்தே தவிர தேடல் அல்ல. புதுப்புதுச் சித்தாந்தங்கள் உருவாக உருவாகத்தான் தேடல் தீவிரப்படும். தேடல் நோக்கி ஒட்டுமொத்த மனிதகுலமே நகரும். நகர்வு இல்லன்னா தேக்கம்தான். தேக்கத்தின் நீட்சி ஐயமேயின்றி அழிவுதான். சுருங்கச் சொன்னா, saturation is a killer.”

தேடல் நோக்கிய நகர்வுகள் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்குது. அந்த இழப்பு ஏதோ ஒரு புள்ளில நிக்கணும்ல? அப்பத்தான அந்தத் தேடலுக்கு மரியாதை? இல்லன்னா என்னத் தேடி என்ன?”

“ பாதிப்புகள் இருக்கும். கொஞ்ச கொஞ்சமா குறையும். நாளைக்கே சுழியாகணும்னு எதிர்ப்பாக்குறது முட்டாள்தனம்.”

“ குறையாது, அதிகமாகுங்குறேன். இதெல்லாம் நெனப்புல ஓடிட்டே இருக்கதாலையோ என்னவோ மனசு ஒரு கொதிநிலையிலேயே இருக்கு.”

“ ம்... எல்லாரும் சொல்றது போல நீ ஏன் புடிச்ச விசயத்துல கவனம் செலுத்தக்கூடாது?”

“ புதுசா செய்யுற எல்லா கருமமும் கூடுதலா சேந்துக்குதே தவிர கொறஞ்ச பாடில்ல... மோசமான பழக்கங்களுக்குள் சுத்தினாலும் வேலைக்காகாது போல. கஞ்சா தான் பாக்கி.”

“ சிறப்பு! அதுனாலதான் கஞ்சா கேட்டியா? ஜெ. மோ சொல்றாப்ல, அறிவுசார் தளத்துல இயங்குறவங்க இப்படித்தான் இருக்கணும்னு. அப்படியே ஒரு படி மேலப் போய் ‘ மேட்டர்’ பண்ணிட்டனா, கலைஞனா ஒரு பூரணத்துவம் வந்துடும் உனக்கு. சீக்கிரம் நடக்க வாழ்த்துகள்.”

“ த்தா.. நல்லா வருது. கொஞ்சம் கூட சொரணையே இல்லாத, ரொம்பப் பொறுப்பான சுயநல சராசரி சமூக விலங்கா மாறலனா சீக்கிரம் சாவு மணிதான்னு நெனைக்குறேன். தட்டையான மனநிலை இருந்தாத்தான் ஒடம்புக்கும் மனசுக்கும் நல்லது போல.”

“ சரிதான். ஆனா, அந்தளவுக்கு சமூகத்த உள்வாங்கிருக்கியான்னு தெரியல. என்னளவுல, நம்மப் பாக்குற கொஞ்சப் பகுதிக்கே இவ்வளவு கடுப்பாகுதே! சமூகப் பிரச்சனைகளுக்காகவே போராடி, பொது வாழ்க்கையில இறங்கி இதுக்காகவே உழைக்கிறவங்களுக்கு எவ்ளோ இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இருக்கும் மனுசன், சமூகம் மீதான எதிர்பார்ப்புகளைச் சுருக்கிக்கப் பழகணும். போராடுறவங்க கூட நிக்கிறதும், அவங்களுக்காக குரல் குடுக்குறதும்தான் ரொம்ப முக்கியம்.”

“ ரொம்பச் சரி. நம்மல்லாம் ஒன்னுமேயில்ல. ஒரு  சராசரி ஆளோட ஆற்றாமை, கோபம், இயலாமை...னு எல்லாமே கலந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இதெல்லாம்... அவங்களையெல்லாம் நெனச்சா நெஞ்சு பதறுது.”

“ ம்... ம்...”

“ உன் தலைவன் கட்சி துவங்குனதுலருந்து என்னென்னமோ பண்றான்யா... சில விளம்பரங்களெல்லாம் தரம் தாழ்ந்து இருக்கு.”

“ அரசியலில் அவர் என் தலைவர் இல்ல... நிச்சயமா இல்லை. செய்யுற அரசியல் பூராவே ‘உன்னைப் போல் ஒருவன் - இரண்டாம் பாகம்’ மாதிரிதான் தெரியுது. மொத்தமா தொகுத்து படமா விடலாம்.”

“ அப்ப மய்யம் இல்லையா நீ?!! அப்ப நடப்புச் சூழலுக்குத் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் பக்கமா இருப்பன்னு நெனைக்குறேன்.”

“ ஆமா. இப்போதைக்கான சரியான தேர்வு.”

“ ஒருவேளை அவர நடிகராவே உள்வாங்குனதால அவர் உண்மையில் பேசும் தொனி கூட நடிப்பு போல தெரிய வாய்ப்பிருக்கு இல்லையா? அவரவருக்கான பேசும் முறை மாறாது இல்லையா?”

“ பேசும் தொனியா? பேட்டில தடுமாறுறதுக்கும் விளம்பரத்துல சௌகர்யமா பேசுறதுக்கும் வித்தியாசம் தெரியலையா என்ன? And his vote pulling star is MGR. பேசாத நியாயமெல்லாம் பேசிட்டு கடைசியில எம்.ஜி. ஆர் னா எப்படி?”

“ இருக்கட்டும். இப்பத்தான வந்துருக்காப்ல... தடுமாறுனா தப்பில்ல... ஆனா, கத்துக்குவாப்ல... பாரதிராஜா சொன்னாப்ல முழுசா கத்துக்கிட்டு வந்துருக்கலாம்... பரவால்ல, வந்து கத்துக்கிட்டாலும் என்ன கொறைய போகுது?”

Ha Ha.. What is the resource? Do you know the ultimate agenda of political party? They must support whoever is funding. If he follows the same path, there is no difference between them and him.”

If it is gonna happen in this way, why don’t the election commission review and revise the agenda ? First of all, why each political party has to spend more money on banner, posts, excerpts, flags, etc., should they ask vote only, right? I heard, around 80L election expenditure officially announced by EC for one area?!! This should be limited, you know.

டேய்... ஒரு தொகுதிங்குறது ஒரு மாவட்டம்டா! செலவு இல்லாம அவ்ளோ மக்களை எப்படிப் போய்ச் சேர முடியும்?!

டேய்... Practically these all expenses are leads to looting, bribing.  நான் செலவே பண்ண வேணாம்னு சொல்லல, கட்டுப்படுத்தணும்னு சொல்றேன். ஒரு தொகுதிக்கான அதிகபட்ச தொகையே இவ்வளவுன்னா, இவனுங்க அதையும் தாண்டி எவ்வளவு செலவு பண்ணுவானுங்க?! என்னதான் மாஞ்சி மாஞ்சி விளம்பரம் பண்ணாலும், பிரதான கட்சிகள் என்னன்னு ஒரு சராசரி குடிமகனுக்கு நிச்சயம் தெரியும். புதுக் கட்சிகள் எத்தனை பேசுனாலும், எவ்ளோ கட்சிக் கொள்கை பற்றிய துண்டுப் பிரசுரம் குடுத்தாலும் பேச்சை கவனிக்குறவங்களோ படிக்குறவங்களோ ரொம்பக் கம்மி. ஒரு அனுமானத்துல அவனே முடிவு பண்ணி வச்சுருக்க கட்சிக்குத் தான் ஓட்டுப் போடுவான். அப்பறம் எதுக்கு இவ்வளவு செலவு செய்யணும்? அப்படி செலவு பண்ணியே ஆகணும்ங்குற கட்டாயம் வருவதால்தான் கட்சிக்குப் பணம் தருபவர்களுக்கு ஆதரவா கட்சி மாறுது...நெனச்சத செய்ய முடியறதில்ல...”

See… getting fund from others is party’s choice. If party wishes, it can be simply stand in election. Simple.”

சரி விடு... ’October’ பாத்தியா?”

“ பாத்தேன்... வெளங்கல.”

That is an in completed movie, you know. Or maybe it looks like that. But… I felt some solace, pain, sadness by questioning, Should we need some valid point or strong connection to fell in love or to develop feelings with someone?’ ”

...அதுல இதெல்லாம் எப்ப சொல்றாங்க?!!”

I said I felt it. And I read reviews to find the other layers of this movie but unconvincing.”

“Felt pointless. I saw the series named ‘house’. There is a girl who has no one in her life. When one doctor gets to know she has life taking disease, she struggles to tell her directly. So, she became her friend and make her comfortable. The other doctors happened to see her activities and advised her to stop this nonsense right now otherwise you will be in pain after her death. She will tell them, “I know, but when a good person dies, someone should be upset, someone should cry”. That is really good.”

“Kinda same. Human needs to developing feelings towards some person to feel the pain, guilt, sorrow…to develop the feelings and drown with the emotions you need some kinda relationship. In his case, he just took one casual statement comes from her to develop his feelings towards her.”

“The character design is little bit amateur in October.”

“This movie has its flaws. But at some point, the approached content is conveyed in wonderful manner. I felt sadness.”

“That’s the point.”

“Yep. Imagine when you are working with someone who is just acquainted for you and you merely did some chit chats. And suddenly that person affected by any irreversible problem, will you feel for that person normally? Just some pity outcome will come from anyone. This movie speaks about that only, actually questioning that. And most importantly this movie opens more doors to think about human values and questioning existence.”

“What kinda objective this movie intends to? To make everyone feel guilty because they are taking others life problems in an easy way? They are not doing wrong. They ready to offer help too. They too feel, when they miss.”

“The objective is ‘questioning that casualness or easygoing. Why should we all need some guilt or love or affection or some mean reason to care someone?’ maybe.”

“Huh... such a purist concept it is.”

மச்சி...ஒரு கட்டத்துல எவ்வளவு நல்லா இருக்குறதையும் வேடிக்கையா அணுகுறதுல இருக்குற பிரச்சனையே அது மேல இருக்க ஆர்வம் கம்மியாயிடும்ங்குறதுதான். எல்லாம் பொய்தானேனு ஈடுபாடு இல்லாம படம் பாக்குறவனுக்கு ஒன்னுமே இல்லாத மாதிரி தோணும். நீ இப்ப அந்த நிலைல இருக்குறதா படுது எனக்கு.”

“ ம்ஹும்... இதைக் கொஞ்சம் அதிகமா எடை போட்டுட்டேன் போல, அதான்.”

“ அந்தப் படம் ஒரு சோக அழகியல்... எல்லாக் கதைகளும் முழுமையடையவோ வலுவான காரணத்தின் பொருட்டோ நகர வேண்டிய தேவையில்லை. “ Where is den ?னு அவ கேக்குற சூழல் ஒரு தோழனைப் பற்றியதல்ல... தன்னோடு வேலை செய்யும் சக ஊழியன் என்ற முறையிலான கேள்வி. அவ இறப்புக்குப் பின், அவன் அவளைப் பற்றி வருந்துவதற்காகவே அந்தக் கேள்வியைத் தக்க வைக்கிறான்... திரும்ப திரும்பத் தனக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறான்... கொஞ்சம் கொஞ்சமாக அவன் அவளோடு ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்கிறான் அவனறியாமலேயே. பின், இறந்துவிடுவாள் என அறிந்தே அவளோடு இருக்கும் நாட்களை நோய்சூழ் மனநிலை கொண்ட மக்களிடமிருந்து விலக்கி ஒரு மென்மையான பரிவும் அன்பும் கலந்து பேசுகிறான். கடைசியில் அவள் ‘டேன்’ என்று சொல்லி இறப்பது அவன் அவளோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர் உரையாடல்களின் வெளிப்பாடே. இப்படி, பல கோணங்களில் கதைக்களத்தை நாமே அணுகலாம். அந்தப் படம் ஒரு காற்புள்ளி... மிச்சத்தை நாமாகவே எழுதிக்கொள்ள வேண்டியதுதான்.”

“ ம்.”

“ ஒரு பாதுகாப்பு கவசமா அண்ணன், அக்கா, தம்பின்னு சொல்ற கலாச்சாரத்த இந்தத் தமிழ்நாட்டுல ஒழிச்சா நல்லாருக்கும். இப்ப ஒரு கடையில சாப்புட போனேன்... என் கண்ணுக்கு நிறைவா ஒரு பொண்ணு... பாத்தோனே பிடிச்சுட்டு... கொஞ்சம் ‘சைட்’ அடிக்கலாம்னு பாத்தா ‘ அண்ணன்’ங்குது... சங்கட்டமா போச்சு... கொறஞ்சபட்சம் இந்தப் பொண்ணுங்க பசங்க பாக்குறத வெச்சாவது பேசாம இருக்கலாம்.”

“ அந்த breaking shackles முதல்ல இந்த அண்ணன்ங்கிற வார்த்தைய எதுக்கு இவ்ளோ acknowledge பண்றங்குறதுல இருந்து ஆரம்பிக்கணும். யாருன்னே தெரியாத பொண்ணு அண்ணா சொல்றதெல்லாம் ஒரு filler word தான். அப்படியே ‘ராக்கி’ கட்டி, செலவுக்குப் பணம் கேட்டு, மறுவீட்டுக்குப் போறப்போ உன்னையப் பாத்து அழலாம் போறதில்ல. அவ்ளோலாம் உணர்ச்சிவசப்படாத.”

“அதில்லடா வெண்ண... அவ அழகை ரசிக்கும் போது அண்ணன் அண்ணன்னு சொன்னா பெரும் இம்சையா இருக்கு. அந்தப் பொண்ணுக்காகவே இனி அடிக்கடி போவேன் வேற. அவ்வளவு நிறைவான முகம் அது.”

“ம்...ம்... இந்தக் காதல்னு ஊதிப் பெருசாக்கப்பட்ட வெத்து கருத்துருவாக்கம் ஒன்னத் தூக்கிக்கிட்டு எல்லாம் சுத்துறாங்க. அது மாதிரி ஏதும் பண்ணாம இருந்தா சரி.”

“ பொண்ணு பாத்துருக்காங்கல்ல உனக்கு? பாக்குறேன்டா... ஊதிப் பெருசாக்கப்பட்ட வெத்து கருத்துருவாக்கம் தோணாம நீ என்ன மயிரப் புடுங்கப் போறேன்னு.”

“ ஹா... ஹா... அது கொஞ்சம் கஷ்டம்தான். ரொம்பப் பொங்காத.” 

“ பாக்கத்தானே போறேன்... காதல்னு பேரு வெச்சுருக்காங்க அவ்ளோதான்... உள்ள ஏதோ பெசயாம, அறுக்காம கடைசி வரைக்கும் நீ இருந்துடு, நான் உன் கால்ல விழறேன். “ மெஹந்தி சர்க்கஸ்” படத்துல சொல்றது போல காதல்தாண்டா இந்த உலகத்த ஆசிர்வதிக்குது.”

“ அது ஒரு மயிரும் பண்ணல. இந்த இசை, பூ பூக்குறது, பறக்குறது, உள்ள பூந்து கொடயுறது, திணிக்கப்பட்ட அழகியல் கருமாந்திரமெல்லாம் சாராம காதலை அப்படியே காதலாவே அணுகுற படம் எதுனா ஞாபகம் வருதா? ‘பூ’ மாதிரி. அதுலையும் அந்தக் கல்யாணத்துக்குப் போகச் சொல்லிப் பண்ணுறது கொஞ்சம் அதிகம்னாலும் கிராம எதார்த்தம்.”

“ யப்பா டேய்... நீ ‘பூ’ படத்தையாடா சொல்லுற... வெளங்கிரும், அது எதார்த்தமாடா ? அந்தப் படம் பேசுற காதலெல்லாம் தெய்வீகத்தை விட ஒரு படி மேல. ௦.1% கூட அது இயல்பான எதார்த்த காதலே இல்ல. நான் பார்த்தவரையில் தமிழில் ‘உள்ளம் கேட்குமே, முன்தினம் பார்த்தேனே’, மலையாளத்துல ஐயமே இல்லாம ‘மாயநதி’.”

“ அடேய்... இதெல்லாம் ரொம்ப ஓவர். ஒனக்கு அப்போ எதார்த்தம்னா என்ன? காதலைக் கடந்து திருமணம் செய்து வாழ்வது மட்டும்தான் எதார்த்தமா? இல்ல, காதலே செய்யாம திருமண பந்தத்தால் மட்டுமே உருவாகும் உறவுதான் எதார்த்தமா? ஏன் அதெல்லாம் ‘weird ல வராதா? சின்ன வயசுலருந்து அவளுக்குச் சொல்லப்பட்டதை, வளர்ந்து அப்படியே ஆக்கிக்குறா... அந்தப் படம் சொல்லப்பட்ட முறையிலையும் அவ்வளவு நேர்த்தி இருக்கும்.”

“ போடா டேய்... அவளுக்கு அவனைப் புடிக்குறதுக்குக் காரணமேயில்ல... அசாத்தியமானக் காதல்டா அது!”

“ சின்ன வயசுலருந்து சொல்லி வளர்க்கலனா ஒருவேளை அது இந்த அளவு ஆழமா இல்லாமப் போயிருக்கும்... காரணமெல்லாம் இருக்கு.”

“ ஒரு மண்ணும் கெடையாது... தங்கராசுக்குக் கட்டி வைக்கலாம்னு பேசுறதுக்கு முன்னாடியே அவன் அவளுக்குள்ள முழுசா எறங்கிருப்பான். வீட்டுல பேச்சு வார்த்தை நடக்குறப்போ அவ சிரிப்பா... சின்ன பொண்ணு அப்போ... அந்த விதை வளருறதெல்லாம் அவ போடுற ஒரம்தான். அந்த ஒரம், நீ சொன்ன ஊதிப் பெருசாக்கப்பட்ட பலூன் தியரிதான். அது எதார்த்தம்னா, ‘96’ ராம் கூட எதார்த்தம்தான். ஆனா, சமூகம் கற்பிக்குற யதார்த்தமே வேற.”

“ ம்... யதார்த்தம்னு நம்ம நம்புறது ஒன்னாவும் உண்மையில வேறயாவும் இருக்கு. நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராத எதையும் மனுச மனசு யதார்த்தமா எடுத்துக்காது. எழுதப்படாத விதி இது. என்ன பேசி என்ன? அந்தப் படம் பெருசா ஓடலையே?”

“ தமிழ் சினிமா வரலாறுக்கு இது ஒன்னும் புதுசில்லையே. அந்தப் படம் ஓடாததுக்கு இயக்குநர் சசியே சொன்னது போல அவக் கேட்ட கேள்விதான் காரணமா இருக்கும்... நெறைய பேருக்கு அந்த உண்மை மூஞ்சில அடிச்ச மாதிரி இருக்குறத ஜீரணிக்க முடியல.”

“ எதைச் சொல்லுற?”

“ திருமணம் முடிஞ்சு அன்பான கணவனோடு அத்தனை உயிர்ப்பா ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருப்பா. ஊர் திருவிழாவுக்கு ரொம்ப ஆர்வமா கிளம்பி அம்மா வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட கேக்குற முதல் கேள்வியே, தங்கராசு பத்தித்தான் இருக்கும். அவளோட அம்மா, நெஞ்சுல நெருப்ப அள்ளிக் கொட்டுனாப்ல ஒரு பார்வை பாத்துக்கிட்டே, இன்னுமாடி நீ அவன மறக்கலன்னு கேப்பா. அதுக்கு அவ, ஏன் மறக்கணும்னு கேப்பா. அந்தக் கேள்வி மனித உறவுகளின் ஒழுக்க விதிகளுக்கு விடப்படும் சவால். இதை ஏன் சொல்லுறேன்னா இது சமூகம் எதார்த்தம்னு கட்டமைச்சு வச்சுருக்குறத ஒடைக்குற ஒன்னு. ‘ அடேய் மனுசப் பிறவிகளா... நீங்கல்லாம் நாகரிகம்னு சொல்லி வேஷம் போட்டுத் திரியிரவனுங்க... உண்மையில மனசுக்குப் பூட்டே கெடையாது... அது நெனைக்குறத நெனைக்கத்தான் செய்யும், அதுதான் எதார்த்தம்’னு ஒரு படைப்பு சொன்னா சுளீர்னு சுடுமா இல்லையா? அதுதான் அந்தப் படத்துக்கு நடந்தது.”

“ ம்... காதலிக்குறதுக்கும் ஒரு வரையறை இருக்குல்ல.”

“ நம்பிக்கையின் பேரில்தான் உறவே தவிர காதலின் பேரில் அல்ல. காதல் வரையறைக்குள் அடங்காத ஒன்னு; வம்படியா வரையறுக்க நெனச்சா தோத்துப் போயிடுவோம். காதலுக்கு யாராலையும் கடிவாளம் போட முடியாது. எனக்கான கேள்வியெல்லாம், ‘ இந்த இடியாப்பச் சிக்கலில் காமத்தை எங்கு செருகுவது என்பதில்தான்... அல்லது காமமே காதலாய் உருக்கொண்டதா அல்லது அப்படி நம்ப வைக்கப்பட்டதா என்பதே.’ ”

“ மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறுன கதையா நீ அங்கேயே போகாத, கடுப்பாகுது.”

“மச்சி... பொண்ணுங்க முத்தம் குடுக்குறப்போ ஏன் கண்களை மூடிக்கிறாங்க?”

“ பொண்ணுங்க மட்டும் இல்ல, பசங்களும் மூடுவாங்க. இயற்பியலில் ஒரு பகுதியான ஒளியியலில், ‘தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு’ னு ஒரு கோட்பாடு இருக்கு. அதன்படி, அந்த மீச்சிறு தொலைவு 15 செ.மீ தான். முத்தம் குடுக்குறப்போ உன் இணையோட முகம் அதை விட கிட்ட இருக்கும். அதனால, கண்ணைத் தொறந்து வச்சுருக்கதால ஒரு பயனும் இல்ல. ஒருவேளை கண்ணை மூடுனாலாச்சும் வெட்கம் கொறஞ்சு ரொம்ப ஈடுபாட்டோட முத்தம் குடுக்க வாய்ப்பிருக்கு. தூரத்துல யாராச்சும் பாக்குறாங்கலான்னு பாக்குறதுக்கு வேணும்னா கண்ணைத் தொறக்கலாம்.”

“ இயற்பியல், ஒளியியல்னுலாம் போறியேடா. ஆண்கள் வெகு குறைவுன்னுதான் தோனுது. ஏன்னா, சினிமால அப்படித்தான் காட்டுறாங்க.”

“ சினிமால பெரும்பாலும் முத்தமே குடுக்க மாட்டாங்க. எல்லாம் ஒரு sugarcoating for exaggerating love. காதல் ஒரு கவிதைடா; கவிதைக்குப் பொய் அழகுடா.”

“ அதுதான் வேணாங்குறேன்... கவிதையே ஒரு மனித மன உண்மை என்பதையே மறந்து, கவிதை – பொய் - அழகு இதெல்லாம் இவங்களா ஏற்படுத்திக்கிட்டது. கவிதைகளோட பயணம் பண்ணுறவங்குற முறைல சொல்லுறேன்: அத்தனையும் உண்மை... வலி – ரணம் – மகிழ்ச்சி – காதல் – பாசம் – எல்லாம் கலந்த உணர்வுப் பொதி கவிதை... காதல், கவிதை ரெண்டும் நெசம்டா.”

Exagerration.”

புனைவுக்கு இம்மியளவாச்சும் உண்மை வேணும்... இல்லாம முடியாது. ஆனா, உண்மைக்கு புனைவு வேணும்னா வெச்சுக்கலாம்... வேணாம்னா தூக்கிப் போட்டுடலாம். இது புரிஞ்சா, நான் சொல்றது புரியும்.”

“ உண்மைக்குள்ள இருக்குற புனைவைக் கண்டுபுடிக்குறது ரொம்பக் கஷ்டம். அது வசதியா உண்மையோட கலந்துடும். ஆனா, புனைவுக்குள்ள இருக்குற உண்மை, புனைவையும் உண்மையாக்கும் அல்லது தானும் புனைவாயிடும்.”

“ எப்படிப் பார்த்தாலும் உண்மை உண்மைதான். அது இல்லாம ஒன்னும் புடுங்க முடியாது.”

“ பெரும்பாலான கவிதைகள் மிகைப்படுத்துதல்தான். பிரிவுத் துயரங்களைச் சொல்லும், மானுட உவகையைச் சொல்லும், அரசியல் நிலைப்பாடுகளைச் சொல்லும் பூச்சற்ற கவிதைகள் கொஞ்சம் அதிகமா கவரலாம், அவ்வளவுதானே.”

“ அதென்ன கவருதல்?! அது அது அதனதன் இயல்போட வெளிப்படும். உன் வாழ்வியலோட ஒத்துப்போனா ரொம்பப் புடிக்கலாம் அல்லது புடிக்காமலும் போகலாம். உன் வாழ்வியலே இல்லனா ஒரு தகவலாத் தெரியலாம். அதுக்கப்புறம் உன் வாழ்வியலுக்குள்ள வரலாம் அல்லது வராமலும் போகலாம்... ' கவிதையில் மிகைப்படுத்துதல் ஒரு வகை. கவிதை பல தளங்களில் பயணம் செய்வது.' ”

“ சரி, வேலை கிடக்கு. பாப்போம்.”