Wednesday, 6 February 2019

வீ

ஏன்? எதற்கு? எப்படி?
என்றெல்லாம் தெரியாது
அவனிடம் பேசத் துவங்கினேன்
பிடித்திருந்தது
பிடித்திருந்தது என்றால் பிடித்திருந்தது
அவ்வளவுதான்

பேசப்பேசச் சொற்கள் எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காத ஒரு உறவுச் சங்கிலியை செவ்வனே செப்பனிட்டது

அவன் நிறைய பேசினான்
சண்டையிட்டான்
கோபப்பட்டான்
தன் உள்ளக் கங்குகளை உள்ளது உள்ளபடியே என் நெஞ்சில் வீசினான்
என் உள்ளம் குளிர்ந்தது
பெரும்பாலும் ஒன்றும் விளங்காது
விளங்கினாலும் மனம் ஏற்றுக்கொள்ளாது அடம்பிடிக்கும்

அவன் என்றும் வாழ்வின் சிடுக்குகளையே பேசினான்
எதிர்மறை எண்ணங்களை அள்ளித் தெளித்தான்
தன்னை தன் நிறை குறைகளோடு அப்படியே வெளிப்படுத்தினான்
அன்பை உமிழ்ந்தான்
வெறுப்பை ருசித்தான்
அத்தனையும் உண்மைக்கு அணுக்கமாக இருந்தது
அல்லது
அப்படி ஒரு மாயையை அவன் என்னுள் உருவாக்கினான்

பெரும்பாலான நேரங்களில் நான் பெண் என்பதையே அவன் மறந்து விட்டிருந்தான்
அது ஒரு பெரும்புதிராக இருந்தது

வாழ்வின் மீதான என் அத்தனை நேர்மறை எண்ணங்களின் மீதும்
கல்வீசிய அவனைக் கண்டு நான் பயந்தேன்

நானோ பரிசுத்தமான காதலின் பிரியை
அவனோ காமத்தின் காதலன்
நானோ திருமண வாழ்வின் சுவை தேடுபவள்
அவனோ திருமணத்தின் கசப்பைக் கக்குபவன்
நானோ தன்னம்பிக்கையின் ஒரு துளி
அவனோ அவநம்பிக்கையின் கடல்
நானோ கடவுளின் குழந்தை
அவனோ சாத்தானின் தோழன்

இருந்தும்
அவன் என்னை இன்னும் நெருங்கினான்
நான் கட்டமைத்திருந்த உலகில் அவன் சிறு சிறு கற்களை வீசி உடைத்து உள் நுழைந்தான்

புத்தி எச்சரிக்கை செய்தது
மனவேலியை இன்னும் வலுவாக்கினேன்
மீண்டும் எளிதாக நுழைந்தான்
மனம் எனும் மாயையைக் காறித் துப்பினேன்

சங்கிலியில் துரு ஏறுவதை நான் விரும்பவில்லை
எங்கு எப்படி அறுப்பது அல்லது தொடர்வது என்று எனக்குத் தெரியவில்லை
விட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தேன்
அது சுலபமாயிருந்தது

அவனுக்காக மனம் உருகி வேண்டிக் கொண்டேன்
வேறென்ன செய்ய முடியும் அவனுக்கு என்னால்?
அவன் வாழ்வில் நான் இல்லாமல் போவதை விட.

No comments:

Post a Comment