Saturday, 15 July 2023

இயற்கையின் அணைப்பில்...

இரவில் படுத்திருக்கும்போது திடீரென்று நேர்வாக்கில் நின்றுகொண்டே தூங்குவதாய்த் தோன்றுகிறது. பயந்துபோய் எதையாவது பற்றிக்கொள்ளத் தவிக்கிறான். எந்தப் பக்கமும் பிடிப்பு எதுவுமில்லை. அந்தர வெளியில் தனியாக மிதப்பது போலிருக்கிறது. அவனுடைய உடல், பாரம் தாங்காமல் கீழே கீழே வெகுவேகமாக விழுகிறது. போகிறபோக்கில் எதையாவது பற்றிக்கொள்ளக் கைகள் நீண்டு துடிக்கின்றன. ஒன்றும் கிடைக்கவில்லை. படாரென்று பெரும்பாறையில் மோதிச் சிதறுகிறான். அனைத்து திசைகளிலும் அச்சம் நிழல் விரித்துப் படுத்திருக்கிறது. எங்கு திரும்பினாலும் அவனைக் கடித்துக் குதற அதன் வாய் தயாராய்த் திறந்திருக்கிறது. மனம் படபடவென்று துடித்து மெல்ல அடங்கிற்று. கண்களைத் திறந்து எதைப் பார்ப்பதற்கும் அவனுக்கு விருப்பமில்லை. மனதின் நடுக்கம் எல்லாவற்றிலும் புகுந்து அசைத்தது. ஆனால் கண்களின் நிழல்கள் விடாமல் துரத்தின. அச்சத்தால் விசும்பி அழுதான். கண்ணீர் தேங்கி நின்றது. திடீரென்று அவன் உடல் சிலிர்த்து மயிர்கள் குத்திட்டு நின்றன. உடலைக் குறுக்கி மண்ணுள் புகுந்து தற்காத்துக் கொள்ள முடியுமென்று கருதினான். உடல் சுருங்கிச் சுருங்கி புள்ளி போலானது. கற்கள் நீட்டிக்கொண்டிருக்கும் சொரசொரத்த சுவர்கள் நாற்புறமும் சூழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அவனை நெருக்கிக்கொண்டே வருகின்றன. நாற்புறமும் ஒன்றோடொன்று இணையும் இடுக்கில் அவன் சிக்கிச் சிதறுகிறான். கத்திக்கொண்டே தூக்கத்தில் புரண்ட பிறகுதான் எல்லாம் மாயம் என்பது தெரிகிறது. அதிர்ச்சி ஓடிய உடல் முறுக்கிச் சமநிலை கொண்டது. கண்ணீர் அவனுடைய கன்னங்களில் கயிறாய் ஓடிற்று. வெறும் விசும்பல் மட்டுமே அவனுள்ளிருந்து வந்த ஒலி. அவன் நாக்கு உள்ளிழுத்துக் கொண்டது. பேச்சே வரவில்லை. அழுகையே அவன் மொழி. இடைவிடாமல் அதையே பேசினான்.

அவன் வழிகளற்றவன்.

பற்றித்தூக்கும் துணைகளற்றவன்.

இரக்கம் தரும் சொற்களைப் பேசும் வாய்களற்றவன்.

ஆதரவற்றவன்.

எதுவுமற்றவன்.

நட்சத்திரங்களெல்லாம் உதிர்ந்துவிட்ட வானம் வெளிறிக் கிடந்தது. காற்று இருப்பதற்கான சுவடே இல்லை. வெகு அடர்த்தியான இருள் அவனுக்கு நெருக்கமாக வந்து தனக்குள் அவனை இழுத்துக்கொண்டது.

- பெருமாள் முருகன்

(நாவல்: கூளமாதாரி)


No comments:

Post a Comment