சென்னையின் அந்த இரயில் நிறுத்தம் சிறு ஓய்விற்குப் பின் மீண்டும் தன்னைச் சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருந்தது. மாலைப்பொழுது இறந்து இரவு பிறந்துகொண்டிருந்தது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது. யாசகர்களும் திருநங்கைகளும் இரயில்களையும் இரயில் நிறுத்தத்தையும் ஆக்கிரமித்திருந்தனர். இரயில் நிறுத்தத்தில் உள்ள ‘கியோஸ்க்'களில் வெளிச்சப்புள்ளிகள் தெரிய ஆரம்பித்தன. நிறுத்தத்தில் நிறைய மரமேசைகள் இரும்பை அடித்தளமாகக் கொண்டு வீற்றிருந்தன. ஒரு மரமேசை கூட ஒழுங்கான நிலையில் இல்லை. மேசையின் உட்காரும் படுக்கையான இடங்களில் மரப்பலகைகள் உடைந்து பிசிறுகளோடு துருத்திக்கொண்டு இருந்தது. சாய்ந்து அமரமுடியாமல் சிரமப்படவேண்டியிருந்தது. உத்தேசமாக ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து அதில் அமர்ந்தான் அவன். துரதிர்ஷ்டவசமாக அந்த மேசையிலும் ஓரத்தில் கைவைக்கும் இடத்தில் மரத்தாலான பலகை இல்லாமல் சாலையில் உள்ள பள்ளங்களைப் போல ஓட்டைகள் கொண்ட இரும்புக் கைப்பிடி இருந்தது. கொஞ்சம் கவனம் தவறினாலும் கையைக் கிழித்துவிடும் நிலையில் இருந்தது.
சற்றே கலைந்த தலையுடன்,முகத்தில் மண்டிக்கிடந்த தாடியுடன் பார்ப்பதற்கு நாடோடி போலத் தெரிந்த அவன் முகத்தில் அயர்ச்சி தெரிந்தது. பார்ப்பவர்கள் சந்தேகிக்கும் தோற்றத்தில் இருந்தான். தாடியுடன் இருப்பவர்கள் அவ்வளவு இங்கிதம் தெரிந்த ஆசாமிகளாக இருக்கமுடியாது என்பது இந்தச் சமூகத்தின் எண்ணம். சமூகம் விரும்புவது அழகான திருத்தமான முகம்,சுத்தமான உடை,அதை அணிந்திருக்கும் விதம்,நடையிலும் பேச்சிலும் நேர்த்தி,வாரிய தலை. இந்தத் தகுதிகள் அவனை நம்பப் போதுமானவை! சாம்பல் நிறமும் வெள்ளை போன்ற மங்கலான நிறமும் கொண்ட நேர்கோடுகளைக் கொண்ட சட்டையும்,சாம்பல் நிற காற்சட்டையும் அணிந்திருந்தான். ஏதோவொரு தனியார் நிறுவனத்திலிருந்து வேலை முடிந்து வந்திருக்கக்கூடும். ஆனால் கால்களில் ஷூ இல்லை. கழுத்தில் அடையாள அட்டை இல்லை. இருபத்தைந்து வயது இளைஞன். யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அடிக்கடி அலைபேசியில் மணிபார்த்துக் கொண்டும் இரயில் நிறுத்தத்தை வேடிக்கைப்பார்த்துக்கொண்டும் இருந்தான். ரசிக்கும்படியாகவும் வித்தியாசமாகவும் அந்த நிறுத்தத்தில் எதுவுமே இல்லை தண்டவாளங்களில் குவிந்துகிடந்த குப்பைகளைத் தவிர.
ஒரு கிழவி அழுக்குச் சீலையணிந்து, பல நாட்கள் குளிக்காததால் சிக்கலாகிப்போன தலைமயிருடன், சருமத்தில் அழுக்குபடிந்து அதுவே ஒரு நிறமாக மாறிப்போயிருக்க, மெதுவாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கையில் சிறுமூட்டை ஒன்று வைத்திருந்தாள். யாசிப்பவர்கள் அந்த சிறுமூட்டைக்குள் என்னதான் வைத்திருப்பார்கள்? அவளுடைய மொத்த உடைமைகள் அவ்வளவுதான்! அவனருகே வந்து தன் வலதுகையை நீட்டினாள். அவளது கண்கள் அவன் கண்களை நோக்கி இருந்தது. அந்தப் பார்வையின் உக்கிரம் தாங்காமல் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டு கண்பார்வையைத் தவிர்க்க முயன்றான். அவள் நகர்வதாகத் தெரியவில்லை. சட்டைப்பையைத் துலாவி இரண்டுரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஒரு வெற்று மனநிலையில் அவள் கையில் தந்தான். அந்த இரண்டுரூபாயைத்தர அவன் தனக்குள் ஒரு விவாதமே நடத்தியிருக்கக்கூடும்! அவள் எந்த பாவனையும் செய்யாமல் அவனுக்கு அருகில் அமர்ந்த பிரஜையை நோக்கி நகர்ந்தாள். அவள் அதற்கு பழகியிருந்தாள். பெரும்பாலும் அவளது வலதுகை முன்னோக்கி நீண்டிருந்தது. அந்தக் கிழவியின் இடத்தை, அவள் அவனுக்குள் உருவாக்கிய வெற்று மனநிலையை அந்தக் கிழவியின் குழந்தைப்பருவம் கொண்ட சிறுமி நிவர்த்தி செய்தாள். மனதில் எரிச்சல் மண்டியது. மறுபடியும் சில்லரை தேடினான். சட்டைப்பையில் பத்துரூபாய் தாள்களே இருந்தன. சட்டென்று மூளையில் முளைத்த சுயநலம் தன் கொம்புகளை நீட்டி எட்டிப்பார்த்தது. சுயநலக் கொம்புகளை கவனித்த அவன் மனம் சுயபச்சாதாபம் கொண்டது. ஒரு பத்துரூபாய் நோட்டை எடுத்து அவள் கையில் வைத்தான். தன்னிடம் இருக்கும்போது இல்லாதவர்களுக்கு கொடுப்பதில் ஏன் இத்தனை தர்க்கங்கள் எட்டிப்பார்க்கின்றன எனப் புரியாமல் தவித்தான். தன்னையே வெறுத்தான்.
ஒரு உதவியோ தானமோ செய்தபின், திரும்ப அதை உடனே செய்யவேண்டிய நிலை வரும்போது சிறு தயக்கம் உண்டானாலும் முதலில் செய்தது தானமாக இருக்க முடியாது. தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கும். ஓரிரு உதவிகளுக்குப் பின் மனித மனத்தை சுயநலம் கவ்விக்கொள்கிறது. மனதிற்கு உதவி செய்யவும் கால இடைவெளி தேவைப்படுகிறது.
சரியாக ஏழரை மணிக்கு அவள் இரயில் நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தாள். கிராமத்து யுவதி. குடும்ப சூழ்நிலையால் தன் படிப்பிற்கேற்ற வேலையில் தன்னை நுழைத்துக்கொண்டு அந்த நிறுவனத்தில் ஒரு ‘கம்ஃபர்ட்னெஸ்’சை உணர்ந்ததால் வேறு எங்கும் செல்ல விரும்பாதவள். மாநிறம். மெலிந்த தேகம். நல்ல உயரம். அவனது பள்ளித்தோழி அவள். பள்ளிக்காலத்திலிருந்தே தோழியல்ல. இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் காமத்துக்கும் தோழமைக்கும் இடையேயான ஊசலாட்டத்தில் அவளைத் தோழியாக நினைக்க அவன் தன்னைப் பண்படுத்திக் கொண்டிருந்தான் என்பதே நிஜம்! அவளது முகம் முதல் கால்வரை ஒரு பார்வையைக் கொடுத்துவிட்டு அவள் கால்களுக்கு வந்து சேர்ந்தான். அவள் கட்டைவிரலுக்குப் பக்கத்து விரல் கட்டைவிரலை விட நீண்டிருந்தது. அது அவள் கால்களின் அழகைக் கெடுத்தது. பெண்களின் பாதங்கள் மென்மையானவை. காமத்தைத் தூண்ட வல்லவை. கொலுசுகள் வினையூக்கி. ஏனோ நடந்து நடந்து மரத்துப்போன அவன் அன்னையின் பாதங்களும் குதிகால் வெடிப்புகளும் அவன் நினைவுகளின் இடுக்கில் கசிந்தன. கால்விரல் நகங்களில் ஒருவிதமான அடர் கருப்பு நிறத்தில் நகப்பூச்சு பூசியிருந்தாள். பெண்களின் ரசனை விசித்திரமானது. ஒவ்வாத நிறத்தையே அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அவள் செருப்பைப் பார்த்தால் எரிச்சலாக இருந்தது அவனுக்கு. அதற்காக அவளைக் கடிந்து கொண்டான்.
அவள் இடது கையில் ஒரு வரலாற்றுப் புத்தகமும் பர்ஸ்சும் இருந்தது. அவற்றைத் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்திருந்தாள். வலது கையில் அலைபேசியும் கைக்குட்டையும் இருந்தது. பெண்கள் ஏன் புத்தகங்களைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி அவனுக்கு எழுந்தது. ஆனால் அவளிடம் அதைக் கேட்கவில்லை. “புத்தகத்தைக் கொடு” என்றான். அவள் தனக்குப் பரிசாக வந்த புத்தகம் என்றும் பத்திரமாகத் திருப்பித் தருமாறும் கேட்டுக்கொண்டு நீட்டினாள். அவளுக்கு புத்தக வாசிப்பில் ஆர்வமில்லை என்பது அவனுக்குத் தெரியும். பரிசு என்பது அன்பின் வெளிப்பாடு என அவள் நம்பியதால் அந்தப் புத்தகம் அவளுக்கு பிடித்தமானதாக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். வாங்கிப் பிரித்துப் பார்த்தான். ஆங்காங்கே பக்கங்கள் தையலிலிருந்து பிரிந்து தொங்கிக்கொண்டிருந்தது. சில பக்கங்கள் தனியாக எடுத்துக்கொண்டு வந்தன. அவளைப் பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து,”ஒழுங்கா வச்சுக்கலடா” என்றாள். “ஒரு புக்குக்கா இவ்ளோ தூரம் வந்த? என்னலாம் பாக்கணும்னா வருவியா?” என பெண்ணுக்கே உரித்தான கேள்வியைக் கேட்டாள். அவன் சிரித்துக்கொண்டே,”புக்க சாக்கா வச்சு உன்னப் பாக்கதான் வந்தேன்” என்றான். ”சமாளிக்காத” என்றாள்.
உண்மையில்,அதுதான் உண்மை என்பது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவளைப் பார்க்கவேண்டும் என்று மனதில் உதித்த தருணம் அவன் உருவாக்கிக்கொண்ட காரணி அது. ஆணுக்குப் பெண்ணை சந்திப்பதிலும், உரையாடுவதிலும் என்றுமே ஆர்வமும் குறுகுறுப்பும் இருக்கும். அதைத்தாண்டி அவன் யோசிப்பதும் நடந்துகொள்வதும் அவனைப்பற்றிய அவள் எண்ணத்தைச் சார்ந்தது. அவளுக்கு அவன் யார் என்பதைச் சார்ந்தது.
அவளைப் பேசவிட்டு கேட்டுக்கொண்டிருந்தான். வேலைப்பளு பற்றி, குடும்பப் பிரச்சினைகள் பற்றி, அவனது பொறுப்பின்மையைப் பற்றி, இன்னும் என்னன்னவோ பேசிக்கொண்டிருந்தாள். பெண்களுக்கு பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவள் இடைவெளி விடும் நேரத்தை அவளைத் தொடர்ந்து பேச வைக்க அவன் உபயோகித்துக் கொண்டான். பேசும்போது அவள் கண்கள் கைக்கடிகாரத்தின் மேல் வந்து வந்து செல்வதை அவன் கவனிக்கத் தவறவில்லை.
இரவு, உலகைத் தன்னுள் இழுத்துக்கொண்டது.
“நல்லா இருட்டிட்டு. கெளம்பலாமா?” என்றாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே. எதுக்கு வெரட்டுற?” என்றான்.
“ உனக்குதான்டா தூரமா போகணும். கெளம்பு” என்று அவனை அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள்.
ஒரு பெண்ணுடனான சந்திப்பில், உரையாடலை ஆண் என்றுமே நிறுத்துவதில்லை. அவள்தான் முற்றுப்புள்ளி வைக்கிறாள். வெகுநாள் கழித்துப் பார்த்ததால் அவளுடன் பேசிக்கொண்டிருக்க அவனுக்கு பிடித்திருந்தது. அவளுக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால், இருட்டவும் அவள் பெண்மை விழித்துக்கொள்கிறது. தன் பாதுகாப்பின் அவசியம் உணர்ந்து கொள்கிறாள். வீடு திரும்ப யத்தனிக்கிறாள். பெண்களுக்கு இரவு பகைவன் போல! பெண்களின் கற்பு சார்ந்த எண்ணம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. மனதை விட்டுவிட்டு உடலை சதையை காபந்து பண்ணுவதை கருத்தில்கொண்டு வாழ்கிறாள். மனம் சகதியில் குதித்தாலும் நெறிகளிலிருந்து பிசகினாலும் அவள் அதை அநாயசமாக கடந்து செல்கிறாள். உடல் அப்படியல்லவே! ஆனால், கற்பு உடல் சார்ந்ததல்ல உளம் சார்ந்தது என்பதை அறிந்தே இருந்தாலும் உடலை காப்பதையே பிரதானமாக கற்பெனக் கொள்கிறாள்.
அவளிடம் விடைபெற்றுக் கொண்டு தன் சிந்தனைகளுக்குள் மூழ்கினான். அவளைப் பார்க்கும் முன்பு இருந்த மனநிலைக்கும் பார்த்தபின் இருக்கும் மனநிலைக்குமான வேறுபாடு அவனை ஏதோ செய்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்னான தன் தர்க்கங்கள் மறந்து சாதாரணமாக அவளுடன் இயைந்து பேச முடிந்ததை எண்ணி வியந்தான். தனக்குச் சாதகமான பிடித்தமான ஒன்று நடக்குமெனில் எந்தச் சூழ்நிலையிலும் மனம் கிளைவிட்டு கிளை தாவுவதை உணர்ந்தான். கசப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது அவனுக்கு.
அவன் போகவேண்டிய இரயில் வந்து சேர்ந்தது. ஏறிக்கொண்டான். திறந்த கதவுகளின் ஓரமாகவே நின்று கொண்டான். மக்கள் பேருந்து,இரயில் பயணங்களின் போது ஜன்னல் ஓரங்களில் அமர்வதையும் படிகளில் நின்றுகொண்டு வருவதையும் உடனே இறங்குவதற்கு ஏற்றாற்போல் பாதையை மறைத்துக்கொண்டு நிற்பதையுமே பெரிதும் விரும்புகிறார்கள். பேருந்து, இரயில்களின் மையப்பகுதியில் நின்றுகொண்டு வருவதையும் ஜன்னல் ஓரம் தவிர பிற இருக்கைகளையும் யார்தான் நேசிப்பது? திருநங்கை ஒருவர் அனைவரது தலையிலும் கைவைத்து “நல்லாருப்ப,காசு குடு” என்று சொல்லி காசு கேட்பதை அவன் கவனித்தான். மிகக் கடினமான விஷயங்களில் ஒன்று, திருநங்கைகளைத் தவிர்க்க முயல்வது. அவர்கள் “காசு குடு” என்று கேட்பதில் இருக்கும் ஒருமையில் ஒரு உரிமை இருக்கும். அதிகாரம் இருக்கும். வலி இருக்கும். இந்தச் சமூகம் அவர்களுக்கான இடத்தைத் தர மறுப்பதினால் உண்டான விளைவு இது. சக ஆணையும் பெண்ணையும் சட்டைசெய்யாமல் நகரும் மனிதர்களுக்கு இவர்களைத் தவிர்க்கத் தெரிவதில்லை. தடுமாறுகிறார்கள். அருவறுப்பினாலும் அச்சத்தினாலும் கட்டாயத்தினாலும் காசு கொடுக்கிறார்கள். அவர்கள் நிலை உணர்ந்து தன் நிலையறிந்து உதவுபவர்கள் அரிது. அவன் பத்துரூபாய் கையில் எடுத்துவைத்துக்கொண்டான். திருநங்கை நெருங்கிவரும்போதே எடுத்து நீட்டினான். அவன் பயணநேரம் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் நான்கைந்து திருநங்கைகள்.இருவருக்கு கொடுக்க முன்வந்தவன் அதன்பின் தன்னைக் குறுக்கிக்கொள்கிறான். அவன் பங்கு அவ்வளவுதான் என்பது போல! ஏதோ பெரிய சேவை செய்துவிட்டது போல! திரும்பவும் தன்னையே வெறுத்தான்.
இரண்டு மூன்று நிறுத்தங்களுக்குப் பின் அவன் நின்றிருந்த பெட்டியில் ஏதோ சலசலப்பு கேட்டுத் திரும்பினான். அவன் நின்றிருந்த பெட்டியின் ரஸ்தோவைத் தாண்டி மறுமுனையில் நான்கு இளைஞர்கள் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரை சரமாரியாக அடித்துக்கொண்டிருந்தார்கள். மறுமுனையிலிருந்த அனைவரும் இந்த முனைக்கு வந்துவிட்டனர். நால்வரில் ஒருவன்,” …த்தா அவன போட்றா” என்றான். அந்த மனிதர்,” ஏன்பா என்ன அடிக்கிறீங்க? விட்ருங்கப்பா” என்று கைகூப்பிக் கேட்கிறார். அவர் பேசும்போதே ஒருவன் இரயில் கம்பியை இறுக்கப்பற்றிக்கொண்டு அவரை எம்பி உதைக்க அவர் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. அவர் முகத்தில் சரமாரியாக நால்வரும் அடிக்க அவர் கீழே விழுந்தார். “மச்சான் நம்ம ஏரியா வந்துட்டு. கெளம்பலாம்” என்று சொல்லிக்கொண்டே திரும்பிவந்து அவரை ஓங்கி உதைத்துவிட்டு நிறுத்தத்தில் நடைமேடைக்கு எதிர்முனையில் இறங்கி ஓடினார்கள். அனைவரது கண்களும் அவர்களை நோக்கியே இருந்தன. அவர்கள் நகர்ந்தபின் திரும்ப மறுமுனைக்கு வந்த மக்கள் அவரை கண்டுகொள்ளவே இல்லை. பரிதாபத்துடனும் சந்தேகத்துடனும் அவரை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மட்டும் தண்ணீர் போத்தலை கொண்டுவந்து கொடுத்து முகம் கழுவச் சொன்னார். மறுமுனையிலிருந்த அனைவரும் இந்த மூலைக்கு திடுதிடுவென வரும்போதே ஏதோ விபரீதம் எனப் புரிந்துகொண்ட அவனும் வேடிக்கை பார்த்தான். ஏதோ ஒரு விசை அவனை நகரவிடாமல் பிடித்து இழுத்தது. “ஒருத்தர் வந்திருந்தா கூட போதுமே? நானும் போயிருப்பேனே?” என்று அவன் மனம் சமாதானத்தைத் தேடியது. பதற்றம் கொண்டான். மனம் அவசரகதியில் சிந்தனையில் குதித்தது. மனிதன் மனிதனின் ஒட்டுண்ணியாகவே வாழ விரும்புகிறான். சார்ந்திருத்தல் மனிதகுணம். எனில், தற்சார்பு என்பது தன் சுயவளர்ச்சியில் மட்டும்தானா? தன்மானம் என்பது தன் சுயம் காத்தல் மட்டும்தானா? ஒரு விஷம் உடல் முழுக்கப் பரவுவதை உணர்ந்தான். பயங்கரமாக தலை வலித்தது அவனுக்கு. செல்கள் தெறிக்க நரம்புகள் புடைக்க தன்மேலேயே கோபம் கொண்டான். திரும்பவும் தன் மேலேயே துவேஷம் கொண்டான். தன்னையே வெறுத்தான். அவனால் அதைத்தான் செய்ய முடிந்தது!

No comments:
Post a Comment