Sunday, 23 October 2016

அந்தக்கரணத்தின் பிறழ்வு

தூக்கத்துடன் போராடிக் கொண்டிருந்த பின்னிரவில்
துக்கமாய் வந்தது கோரவிபத்தில் நீ இறந்த செய்தி
 பல மைல் தொலைவிலிருந்து அலைபேசி வழியாய்.
கணநேர அதிர்ச்சிக்குப் பின் என்னவாயிற்றோ என்று அறிந்துகொள்ளும் ஆவலே கூடிற்று
ஈன புத்திக்கு.
செயற்கையாய் ஒரு பரபரப்பைத் தேடிற்று அற்ப மூளை.
சடுதியில் உன் நினைவுகள் மூளைக்குள் கசிய அவற்றுள் தேடினேன் உன் சாவின் வீச்சை.
உன்னுடன் அளவளாவிய பொன்னான நேரங்கள் கண்களில் மின்னி மின்னி மறைந்து மறைந்து பூச்சாண்டி காட்ட உதடுகளில் உறைந்தது மென்புன்னகை.
பயணச் செலவு
அவசர விடுப்பிற்கான திட்டமிடல்
பசி
தாகம் இத்யாதி..இத்யாதி..எச்சுழ்நிலையையும் தன்வசமாக்கும் இந்தப் பாழாய்ப்போன மனதை ஆட்கொள்ள
காணாமல் போனது உன் இல்லாமையின் தீவிரம்.
கண்களில் துளி நீரில்லை
பெரிதாக வலியில்லை
ஒரு சிறு அதிர்வு அதன் பின்
அமைதி
அவ்வளவே.
வெற்று மனநிலையில் அறைக்குள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து நொந்துகொண்டது அறம்.
நிரந்தரமில்லா வாழ்வில் கவனம் கலைக்க மாயைகளும் குப்பைகளும் ஏராளம் ஏராளம்.
உள்ளது உள்ளபடி கொட்டிவிட்டேன் மன்னிப்பதும் தண்டிப்பதும் உன்பாடு தோழா!
இனி நீ இல்லை என்ற உண்மையை மட்டும் சுமந்து கொண்டு
இதோ கிளம்பிவிட்டேன்
பெருந்துயரம் நோக்கிய
எந்த அதிர்ச்சியையும் நீர்த்துப்போகச் செய்யும் நெடுந்தூரப் பயணம் செய்ய...

No comments:

Post a Comment