- மனிதன் முதிரும்போதுதான் மனங்களைக் கையாளக் கற்றுக்கொள்கிறான். மனம் விழுந்த பின்னர் எழ வைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால், வீழ்ந்துகொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்துவதுதான் முக்கியம். வாழ்வின் சாரமேறிக் கிடக்கும் அனுபவ அறிவால்தான் அதைச் செய்யமுடியும்.
- வணிகமே வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கிறது.
- இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே துவங்குகிறது. எல்லாவிதமான புதிய ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக அவையே இருக்கின்றன. காதலுக்குள்தான் இயற்கையின் இயங்குசக்தி பொதிந்து கிடக்குகிறது. ஆண், பெண் என்ற இரு சக்திகள் ஒருபோதும் ஒன்றையொன்று முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.
- அறியாமை ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகள், அறிந்தவர்களுக்குக் கிடைக்காது.
- நம்பிய பிறகு ஒருவனை ஐயங்கொள்வது எளிதல்ல.
- ஆறாத் துயரைக் கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணைகூறச் சொல்லில்லை.
- பரிமாற்றம் என்பது தேவை சார்ந்தது. வணிகம் என்பது ஆதாயம் சார்ந்தது. ஆதாயம் மனிதத் தன்மையற்றது; மாண்புகளைச் சிதைப்பது. இயற்கை வழங்குகிறது; நாம் வாழ்கிறோம். இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?
- எதுவொன்றையும் தேவையானதாக மாற்றுவதுதான் வணிகம். வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது. அதை வெல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை.
- செடி, கொடிகளை அறிந்தவர்களை எளிதில் ஈர்க்க முடியாது. அவர்கள் கணம்தோறும் உயிரின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தவர்கள். வண்ணங்களையும் வாசனைகளையும் அவர்கள் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவர்களின் கவனத்தைக் கவர்வதோ, காதலைப் பெறுவதோ எளிதல்ல.
- காலம் மனித அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்பாராத கனத்தில் சந்திக்கும்போது மனிதன் பொறிகலங்கிப்போவதைத் தவிர வேறு வழி என்ன?
- காமத்துக்கு மிக அருகில் பயணிப்பது நீர். உடலின் வாசனையை மனதுக்குள் பாயவிடும் மாயசக்தி நீருக்கு மட்டுமே உண்டு.
- காதல் சொல்லால்தான் மலர்கிறது.
- மலையில் வாழ்ந்தவர்கள், காட்டில் வாழ்ந்தவர்கள், கடற்கரையில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் வெட்டிச் சாய்க்கும் வாள்முனையின் பின்னும், பாய்ந்து இறங்கும் அம்பு முனையின் பின்புமே அலைந்து கொண்டிருந்தனர். ஆனால், கூடல்வாசிகள்தான் எந்நேரமும் ஊர்ந்து நகரும் மண்புழுவின் பின்னும், சிறு துவாரம் உருவாக்கி மறுகணம் சிறகு விரிக்கும் ஈசலின் பின்னும் அலைந்து கொண்டிருந்தனர்.
- கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடியென இயற்கையெல்லாம் நமக்குத் துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை, கதையன்றி வேறு யார் கொடுப்பது?
- கதை, சொல்லும்போது பெருகக்கூடியது; நினைக்கும்போது திரளக்கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக்கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.
- மனிதன், கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.
- அனுபவம், அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது.
- பறிக்கப்பட்ட காதலின் ஆவேசம் எளிதில் அடங்காது. பூவுக்குள் இருந்து விதை முளைவிடுவதைப் போல, இன்னொரு முறை காணமுடியாத அதிசயக் கனவு. அது என்னை விட்டு ஒருபோதும் பிரியாது. அந்த நினைவில், என் இளமை முகிழ்ந்த கணம் இருக்கிறது. பற்றியெரியும் காமம் இருக்கிறது. எனது மனம் ஒருபோதும் கீழிறங்காது.
- கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப்போலப் படிந்தே கிடக்கவேண்டும். காதலுக்குத்தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெரும்தண்டனையைக் கனவுகளே அளிக்கின்றன.
- கேள்விகள் உருவாகிவிட்டால் அவை பதிலின்றி உதிராது. இயல்பாக உதிராத கேள்விகளை உடைத்தால், அவை மீண்டும் தழைக்கும்.
- மனித மனத்தை இயக்கும் விசையை அறிதலே கலையின் உச்சம்.
- எந்தவோர் அரண்மனையிலும் அனைத்து இடங்களிலும் அதிகாரம் செலுத்துவது அரசரின் குரலன்று; அரசரின் குரலாகக் கருதப்படுகிற குரல். அதைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது.
- மண்ணுக்குள் நீர் இருப்பது போல, மரத்துக்குள் தீ இருக்கும். மரம் தீயாய் மாறும் ஆவேசம் அளவிட முடியாதது. அது காலகாலமாக அடக்கி வைக்கப்பட்ட ஒன்றின் வெளிப்பாடு.
- உறங்கும் இரவுகளில் கனவுகளை நிறுத்தும் வல்லமையை மனிதன் ஒருபொழுதும் பெற்றுவிட முடியாது.
- பொறாமையும் வெறுப்பும் மனித மனத்தைக் குறைந்த அளவே இயக்கும் ஆற்றல் கொண்டவை. பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது.
- பகை மட்டுமே மூட்டியவனால் கூட அணைக்க முடியாத பெரு நெருப்பு.
- பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ள மாட்டாள். அவள் சிக்கிக்கொள்வது அவளிடம் மட்டும்தான். ஆண் ஒருபோதும் பெண் மனதைக் கண்டறிய முடியாது. பெண்ணுடல், பிரித்தறிய முடியா மர்மங்களின் சேர்மானம். ஆண்களால் கணிக்கவே முடியாத கற்பாறை.
- கலையின் வழியாக ஆணுக்குள் இறங்குபவள், இயல்பாகவே அடியாழம் வரை இறங்க முடியும்.
- அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழ முடியாது. ஏனென்றால், அது இயற்கைக்கு எதிரானது. விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது. இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.
- இழக்கக்கூடிய வாழ்விடத்தில் எந்த உயிரையும் இயற்கை உருவாக்கவில்லை. எனவே, தனது வாழ்விடத்தை ஓர் உயிர் இழப்பது இயற்கையுடனான ஆணிவேரை அறுத்துக்கொள்வதற்கு நிகர்.
- எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை.
- போரென்று வந்துவிட்டால், அதற்கு வெற்றி மட்டுமே நோக்கமாக இருக்க முடியும். அந்த வெற்றியை அடைய நிகழ்த்தப்படும் கொலையில் அறமும் அடக்கம். எனவே, போரில் அறம் நெடுநேரம் உயிர் வாழாது.
- நீரை நிலம் விழுங்குவதைப் போல, தனது வீரத்தைத் தானே விழுங்கி வற்றச்செய்யும் வேலையை மனம் நமக்குத் தெரியாமலேயே செய்து கொண்டிருக்கும்.
- மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை.
- முழுமுற்றாக நிராகரிப்பதற்கும் நிராகரிக்கும் காரணத்தை விளக்குவதற்கும் நுட்பமான இடைவெளி உண்டு. கண்ணுக்குத் தெரியாமல் ஒருபடி கீழிறக்கும் செயல் அது.
- கரையத் தொடங்கிய ஒன்று மறுபடியும் தனக்குத்தானே உறைந்து இறுகுவது எளிதன்று.
- விதிகள், சமமான தோற்றத்தை உருவாக்க நினைப்பவை. அறவுணர்வு, சமமற்றவற்றின் நியாயத்தைப் பற்றி நிற்பவை.
- முடிவுறாத வேட்டையை எந்த உயிரினமும் நடத்தாது. மனிதன்தான் ‘போர்’ என்ற பெயரில் அதை நடத்திக் கொண்டிருக்கிறான்.
- அதிகாரமும் அறமும் இரண்டு எல்லைகள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறம் பேணவே முடியாது.
- எந்தவொரு உயிரினமும் தன் உயிர் காக்கும் செயலை உச்ச ஆற்றலோடுதான் நடத்தும்.
- எரிந்து மறைதலும் ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு.
- சு. வெங்கடேசன்
No comments:
Post a Comment