Sunday, 24 May 2020

கவிதைக்குள் கவிதைகள்

கவிதை வாசிப்பில் தீவிரமாக ஈடுபடும் மனதும் மூளையும், ஏராளமான உணர்வுக் குவியல்களின் பொதியைச் சுமந்து திரியும். அஃது ஓர் பித்து நிலை. அப்படியான நிலையில் திரியும் மனது, அவ்வப்போது சில கிறுக்குத்தனங்களைச் செய்து பார்க்கும். அதில் ஒன்றுதான் எழுதப்பட்ட கவிதையைக் கலைத்துப்போட்டு வேறொரு கவிதைக்குள் நுழைவது. எந்தக் கவிஞரும் இதைக் கேட்டால் சினங்கொள்ள வாய்ப்புண்டு. எழுதப்பட்ட கவிதையின் வழியாக பல தளங்களுக்குள் நுழைவதும், எழுதப்பட்ட கவிதையின் ஒழுங்கை(ஒழுங்கின்மையைச்) சிதைத்து, வரிகளைக் கலைத்துப்போட்டு மாற்றி மாற்றி படித்தும் எழுதியும் பார்த்து பல தளங்களுக்குள் நுழைவதும் வேறு வேறு.
முதலாவது, கவிஞரின் கட்டற்ற சுதந்திர வெளியில் திரிந்து பறந்து தனக்கான ஏதோ ஒன்றைக் கண்டடைவது.
இரண்டாவது, தனக்கான ஏதோ ஒன்றைக் கண்டடைவதற்காகக் கவிஞரின் சொற்களை வளைப்பது.

கவிஞரின் எழுதுகோல் வழியாக வழிந்த
சொற்களின் இரசவாத வித்தையின் சூட்சுமம் பிடிபட மறுக்கும்போது, வாசகனுக்கு மேற்சொன்ன 'இரண்டாவது' உத்தி கைகொடுக்கிறது. கவிதைக்குள் கவிதைகளை எடுக்க உதவுகிறது. எனவே, பிரம்மாக்கள் தயை கூர்ந்து இக்கருச் சிதைவைப் பொறுத்தருள வேண்டும்.

அப்படியான ஓர் கவிதை இது.

நினைவு மறதி
*******
அவன் தன் இதயத்தை சந்தியில் நின்று விநியோகிப்பான்
அவன் உனக்குக் கவிதை எழுதிக் கொடுப்பதாகச் சொல்வான்
அவன் பார்த்துப் பார்த்து செய்வான்
அவனைக் காலடியில் கிடத்த ஒரு புன்னகை போதும்

அவன் நடு இதயத்தில் ஆணி அடிப்பான்
அவன் இன்று உன்னைக் குறித்த ஒரு வதந்தியைப் பரப்பியிருப்பான்
அவன் உன் ரோஜாத்தோட்டத்தை வெந்நீர் ஊற்றி அழிப்பான்
அவன் உன்னைத் திரும்பியும் பார்க்க மாட்டான்
அவன் அடிப்பதை நீ வாங்கிக்கொள்வாய்

அவன் போலி ஐடியில் இருந்து நட்புக்கோரிக்கை அனுப்புவான்
அவன் உன்னோடு தேநீர் குடிக்கும்போதும் படுக்கையைக் கற்பனை செய்வான்
அவன் மது அருந்தும் போதெல்லாம் நீதான் ஊறுகாய்
அவன் மனைவிக்கு உன்னை அறிமுகம் செய்யமாட்டான்
அவன் நெருங்கினால் வாழைமட்டை, விலகினால் கொடிக்கம்பம்
அவன் இன்பாக்ஸில் நண்பன், பொதுவில் எதிரி
அவன் வெட்கமே இல்லாமல் மன்றாடுவான், நீ பலியாள்

அவனுக்கு சுயமைதுனம் செய்ய நடிகையின் புகைப்படம் வேண்டும்
அவனுக்கு நீ பேசுவது புரியாது, ஆனால் மையமாக இளிப்பான்
அவனுக்கு கற்பனையில் மட்டுமே விந்து வெளியேறும்
அவனுக்கு நீளம்போதாது
அவனுக்கு நேரம்தாங்காது
அவனுக்கு மனப்பிறழ்வு, தினமும் உடற்பயிற்சி செய்வான்
அவனுக்கு நீ தாயாகவோ, தங்கையாகவோதான் இருக்கமுடியும்
அவனுக்கு உன்னை வைத்துக்கொண்டு என்ன செய்வதெனத் தெரியாது
அவன் உன் கருவறைக்குள் சென்று படுத்துக்கொள்வான்

அவனை என்ன செய்தும் வீழ்த்தவே முடியாது
அவனை நிராகரித்தால் தலை தீப்பிடித்து எரியும்
வேறு வழியில்லை
அவன்
தான் ‘ஆண்’ என்பதை மறக்கும்வரை நீ பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

- லீனா மணிமேகலை

No comments:

Post a Comment