Thursday, 29 August 2019

குறைந்தது...

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலாவது
வீழ்தல் வேண்டும்.

Sunday, 2 June 2019

ஒரால் நலம்

தன்னை அடையாளம் கண்டு தன்னை தன் முரண்களோடு நேசிக்கும் உறவு மனதில் தன் இராட்சச வேர்களைப் பரப்பும்போதும்

உறவில் ஓர் அந்தரங்கத் தனிமை நோக்கி நகரும் போதும் 

உறவாக அன்பில் வாழ இயலாது பதறும்போதும்

உறவில் காதலையே உணராத போதும்

உறவில் அடுத்த நிலை நோக்கி நகர திராணி இல்லாத போதும்

பேரன்பை பெருஞ்சுமையாய் உணரும்போதும்

பிரிவின் துயர் நினைத்து அஞ்சும்போதும்

ஓர் உறவை முறித்துக்கொள்ளுதல் தேவையாயிருக்கிறது.

இங்கு ஓர் உறவை முறித்துக்கொள்ளுதல் என்பது
ஒருவரை விட்டு விலகிச்செல்லுதல்
ஒருவரை வாழவிடுதல்.

Thursday, 11 April 2019

தீராப் பிணி

கலை
இலக்கியம்
வேலை
உடற்பயிற்சி
சாராயம்
பயணம்
என எந்த போதையும் கைகொடுக்கவில்லை
இந்த போதைக் கோதையைக் கொய்தெறிய.

கட்டக் கடைசியாக காமதேவனிடம் கையேந்தினால்
இன்முகத்தோடு திமிருடன் சொன்னான்
கண்டுகொள் காமத்தின் ருசி என்று.

அள்ளிப் பருகி காமுகனாய் உருமாறி உலவித் திரிகையில்
புதைமணலில் முகிழ்க்கும் நீர்க்குமிழிகள் போல
விந்துக்குவியலினூடே பணிந்த கண்கள் கொண்டு முழித்து முழித்துப் பார்க்கிறது
இந்த மாயப்பிசாசு

இந்தப் பாழாய்ப்போன அன்பெனும் சனியனை எப்படித் தொலைக்க ?

Wednesday, 6 February 2019

வீ

ஏன்? எதற்கு? எப்படி?
என்றெல்லாம் தெரியாது
அவனிடம் பேசத் துவங்கினேன்
பிடித்திருந்தது
பிடித்திருந்தது என்றால் பிடித்திருந்தது
அவ்வளவுதான்

பேசப்பேசச் சொற்கள் எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காத ஒரு உறவுச் சங்கிலியை செவ்வனே செப்பனிட்டது

அவன் நிறைய பேசினான்
சண்டையிட்டான்
கோபப்பட்டான்
தன் உள்ளக் கங்குகளை உள்ளது உள்ளபடியே என் நெஞ்சில் வீசினான்
என் உள்ளம் குளிர்ந்தது
பெரும்பாலும் ஒன்றும் விளங்காது
விளங்கினாலும் மனம் ஏற்றுக்கொள்ளாது அடம்பிடிக்கும்

அவன் என்றும் வாழ்வின் சிடுக்குகளையே பேசினான்
எதிர்மறை எண்ணங்களை அள்ளித் தெளித்தான்
தன்னை தன் நிறை குறைகளோடு அப்படியே வெளிப்படுத்தினான்
அன்பை உமிழ்ந்தான்
வெறுப்பை ருசித்தான்
அத்தனையும் உண்மைக்கு அணுக்கமாக இருந்தது
அல்லது
அப்படி ஒரு மாயையை அவன் என்னுள் உருவாக்கினான்

பெரும்பாலான நேரங்களில் நான் பெண் என்பதையே அவன் மறந்து விட்டிருந்தான்
அது ஒரு பெரும்புதிராக இருந்தது

வாழ்வின் மீதான என் அத்தனை நேர்மறை எண்ணங்களின் மீதும்
கல்வீசிய அவனைக் கண்டு நான் பயந்தேன்

நானோ பரிசுத்தமான காதலின் பிரியை
அவனோ காமத்தின் காதலன்
நானோ திருமண வாழ்வின் சுவை தேடுபவள்
அவனோ திருமணத்தின் கசப்பைக் கக்குபவன்
நானோ தன்னம்பிக்கையின் ஒரு துளி
அவனோ அவநம்பிக்கையின் கடல்
நானோ கடவுளின் குழந்தை
அவனோ சாத்தானின் தோழன்

இருந்தும்
அவன் என்னை இன்னும் நெருங்கினான்
நான் கட்டமைத்திருந்த உலகில் அவன் சிறு சிறு கற்களை வீசி உடைத்து உள் நுழைந்தான்

புத்தி எச்சரிக்கை செய்தது
மனவேலியை இன்னும் வலுவாக்கினேன்
மீண்டும் எளிதாக நுழைந்தான்
மனம் எனும் மாயையைக் காறித் துப்பினேன்

சங்கிலியில் துரு ஏறுவதை நான் விரும்பவில்லை
எங்கு எப்படி அறுப்பது அல்லது தொடர்வது என்று எனக்குத் தெரியவில்லை
விட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தேன்
அது சுலபமாயிருந்தது

அவனுக்காக மனம் உருகி வேண்டிக் கொண்டேன்
வேறென்ன செய்ய முடியும் அவனுக்கு என்னால்?
அவன் வாழ்வில் நான் இல்லாமல் போவதை விட.

Saturday, 6 October 2018

'தொண்ணூற்றாறு' எனும் திரைக்கவிதை

“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே யுள”

கண்ணால் காண்பதை எல்லாம் காதால் கேட்க முடியாது.
காதால் கேட்பதை எல்லாம் கையால் தொட முடியாது.
தொடுவதை எல்லாம் நுகர முடியாது.
நுகர்வதை எல்லாம் உண்ண முடியாது.
ஆனால், கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும்  ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே!
~~
ஒரு பெண்ணின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டவனை விட, மையல் கொண்டு திரிபவனை விட, ஒரு பெண்ணை அணு அணுவாய் நேசித்தவனை விட, எந்த அனுபவங்களும் கிடைக்கப்பெறாத ஒருவனால் இன்னும் அதிகமாக காதலின், அன்பின், பிரிவின் உணர்வுகளுக்குள் ஊறித் திளைக்க முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை!

பேசிப்பழகும் போது காதலில் விழுவதற்கான பல தருணங்கள் வாய்த்திருந்தும் சூழலோ, கோழைத்தனமோ, மனநிலையோ, இயலாமையோ, சுயகழிவிரக்கமோ, சொல்ல முடியாத ஏதோ ஒன்றோ தடுத்துவிட்ட அந்தப் பொன்னான தருணங்களை இழந்த யாரும் தங்களை எல்லாக் காதல் கதைகளுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளமுடியும். காதல்வெளியில் இறக்கைகளின்றி பறக்கமுடியும்.
அந்த வகையில், ஒவ்வொரு காட்சியிலும் காதலில் விழுந்துகொண்டே இருந்த ஒரு திரைக்கவிதை '96. விழவே வேண்டாமென்று தள்ளி நின்று ரசித்த அத்தனை உள்ளங்களும் இந்தக் காதலில் விழுந்துவிடும்! இந்தக் காதலைக் கொண்டாடும்!

காதலில் விழுந்து, வாழ்ந்து, திளைத்து, மகிழ்ந்து, சேர முடியாமல் பிரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர்களுக்கு இத்திரைக்கவிதை கடத்தும் வலி சொல்லில் அடங்காதது!

‘காதலிப்பதால் கிடைப்பதில் பாதிசுகம்…பார்த்துக்கொண்டிருப்பதில்தான் இருக்கிறது' எனும் வள்ளுவன் கூற்றை அப்படியே கடத்தியிருக்கிறார்கள் திரையில்!
கண்கள்! கண்கள்! கண்கள்! திரைமுழுக்க பார்வைகளின் மாயம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கண்கள்தான் எப்பேற்பட்ட உணர்வு கடத்தி! இத்திரைக்கவிதை காதல்பித்தனால் மட்டுமே முடிந்த ஒன்று! மற்றபடி, அவனது நினைவுச் சிதறல்களில் ஏதோ ஒரு நிகழ்வில் எல்லோரும் பயணம் செய்யலாம்!

கலை காட்சிகளின் கையாடல் என்பதற்கு இந்தத் திரைக்கவிதை ஒரு நற்சான்று!

வேறென்ன சொல்ல!

காதலின் ஈரம் உணரச் செய்த கலைஞர்களுக்கு அன்பு முத்தங்கள்!!!

Saturday, 11 August 2018

காற்றில் உலவும் சொற்கள்

அவளுடைய பழம்புதுமைப் பெயரில் தொடங்கியது எனக்கும் அவளுக்குமான ஊடல்.
இந்தத் தலைமுறைக்கு  ஏற்றாற்போல் தன் பெயரைச் சுருக்கி வைத்துக்கொண்டு
அப்படித்தான் விளிக்க வேண்டுமென அடம்பிடிக்கும் வளர்ந்த குழந்தை அவள்!
தேவதை அவள்!

காலத்தின் மேற்பார்வையில்
எண்ணற்ற உரையாடல்களால் நெய்யப்பட்டு எங்களுக்குள் இழையோடிய அன்பின் கொடியை அறுக்க விரும்பாமல் முன்னுணர்வோடு
பெயரில்லா உறவென்று பெயர் வைத்துக்கொண்டோம்.

சொற்களால் உண்டான உறவில்...
ஒரு புள்ளியில், ஒருவர் அறியாமல் ஒருவர் தன் மனக்கூட்டுக்குள்ளேயே சேர்த்து வைத்த அன்பின் சொற்கள் நிறைந்து, வழிந்து, அயர்ந்து, இதற்கு மேல் உங்களுக்கு உதவ முடியாது என்று சிதறி ஓடின. அதன்பின்
சொற்களற்ற அமைதி-
அமைதியின் ஆர்ப்பரிப்பு.

அமைதியின் விளைவாக
அவளது திருமணம்-ஒரு நீண்ட இடைவெளி-குழந்தை.

இனி அவளுக்குப் பேசுவதில் இடையூறு எதுவும் இல்லை
தயக்கம் இல்லை
வெட்கம் குழைத்த கூச்சம் இல்லை
பாதுகாப்பு அரண் கிடைத்துவிட்டது.

உறக்கமில்லா நீண்ட இரவுகளும்
பேரிருளில் வெளிச்சப்புள்ளிகளாய் கசியும் நினைவுகளுமாய் நாள்கள் நகர்ந்துகொண்டிருந்த போது
ஓர் நாள்
தன்னை ஒரு "பெண்" என்று அறிமுகம் செய்து கொண்டாள்.
என் முகம் கூட தெளிவாக நினைவிலில்லாது என்னைப் பற்றி முழுதும் அறியாது ஏன் என்றே தெரியாமல் எனக்காக அழுததாகச் சொன்னாள்.
நான் என் உணர்வைத் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்றாள்.
என்னைப்பற்றி ஒரு நம்பிக்கை ஏற்படாதவாறு கடைசிவரை அவளைக் குழப்பினேன் என்று சொன்னாள்.
அவளை என் ஆய்விற்கு நான் பயன்படுத்திக் கொண்டதாகச் சொன்னாள்.
' திருமணம் செய்து கொள்வாய் அல்லவா?' என்று கேட்டுவிட்டு
சில நொடிகளுக்குப் பின்
' செய்துகொள்ள வேண்டும்' என பதில் சொன்னாள்.
குற்ற உணர்வு கொள்வதாகச் சொன்னாள்.
நினைவுநாடாக்களில் உயிருடன் உலாவிய மனச்சொற்கள்
அனைத்தையும்
திரும்பவும் ஒரு பெரு மெனக்கெடலுக்குப் பின் மூளைச்சொற்களாக வெளிப்படுத்தினாள்.
கடமைக்காக இன்னும் என்னன்னவோ சொன்னாள்.

அதன்பின்னான உரையாடல்களில் சொற்களின் மீது என் மீதான கழிவிரக்கத்தின் நெடி தீவிரமாக வீசியது. முதல்முறையாக சொற்கள் கசந்தது எனக்கு.

எதற்காக இத்தனை மெனக்கெடல்கள்?
இத்தனை விளக்கங்கள்?
அவள் வாழ்வில்
நிகழ்ந்துவிட்ட அன்பின்பிழை நான்
காலம் நிகழ்த்திய பெருந்தவறு நான்
கோழை நான்
முட்டாள் நான்
என்று சொல்லாமல் சொல்கிறாளா?

எனக்குப் புரியவில்லை.
எங்கோ தட்டிற்று.

ஆனால், ஒன்று மட்டும் மிக உறுதியாகத் தெரிந்தது.
அவள் மனமெனும் பச்சை பசேலென்ற வயல்வெளியில் பிடுங்கி எறியப்பட வேண்டிய களை நான்!

Monday, 6 August 2018

ஒரு சிறிய காதல் கதை என்பது...

பேருந்துப் பயணமொன்றில் கருத்த தேவதை வண்ணம் பரிமாறி எண்ணும் பரிமாறிய நாளின் மழை இரவில் நாட் ரீச்சபிளாகி நெஞ்சில் தீ வைத்தல்
அல்லது
மருத்துவரின் டோக்கன் ஏந்திய காரிகை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி கடையனான நம்மைக் கண்வைத்து இடையில் செருகிவிடுதல்
அல்லது
முகநூல் முக்கத்தின் சந்தன மையலில் கரைந்து வழிய வழிய உரையாடி இன்பாக்ஸ் வரையோடி நம் ஆத்திரம் பொங்க ஒருத்தி ஆணாய்ப் போதல்
அல்லது
நேற்றின் வெண்பனி பூக்கும் கருமிரவில் ஒருதலைக்காரி முத்தமிட நெருங்கையில் இன்று கனவு மறந்து போதல்
அல்லது
பத்தாண்டுக் கனவுகளோடு கதவினைத் தாழிட்டு உட்சென்று பார்த்தால் ஒருத்தி பல்லாண்டின் ஒளியோடு தவளையெனக் கிடத்தல்
மற்றும்
நாளிதழ் ஒன்றில் உல்லாசமாக இருந்த நாம் அதே ஒருத்தியின் கணவனால் மாலை நாளிதழில் கொலையுண்டுபோதல்!

- ஸச்சின்
ஆனந்த விகடன்(11.11.2015)