Saturday, 19 September 2015

தனிஒருவன்

பொதுவாக சில திரைப்படங்கள் நாம் செய்ய வேண்டியதை,மறந்ததை,இந்த பூமியில் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை,சட்டென உணர்த்திவிட்டுச் செல்லும். நாம் ஏற்கனவே அறிந்த ஒரு தகவலை சுவாரஸ்யம் சேர்த்து சொல்லும்போது மனதில் இன்னும் ஆழமாக பதியுமல்லவா? அதுதான் சினிமாவின் ஸ்பெஷல். பிறர் சொல்லி புரியாததை,பல பக்கங்கள் படித்துத் தெளியாததை,காட்சிகளாகக் கண்களுக்கு கொடுத்து உள்ளத்தில் ஊடுருவச் செய்யும் அற்புதம் திரையில் நிகழ்கிறது. கல்வியில் 'செயல்முறைக் கல்வி' போல. ஒரு திரைப்படத்தில் எல்லா அம்சங்களும் சிறப்பாக இருக்கும்,ஒரு திரைப்படத்தில் குறிப்பிட்ட விஷயம் மட்டுமே பிரதானமாக கையாளப்பட்டு மற்றவை பின்தள்ளப்படும். கதையின் தன்மையைப் பொறுத்து அதை ரசிக்கவும் விமர்சிக்கவும் செய்வது அழகு. வியாபார நோக்கம் கருதி சமீபத்திய திரைப்படங்கள் சமூகக் கருத்தை மையப்படுத்தி கமர்ஷியல் சேர்த்து வெளிவருகின்றன(முழு பொழுதுபோக்கு படங்கள் பற்றி இங்கு சொல்லவில்லை. அதற்கான தேவையுமில்லை). விஷயம் யாதெனில், கதையிலும்,திரைக்கதையிலும், தான் சொல்லவந்த விஷயத்தை பிரதானமாக்கி சில மணி நேரங்களுக்கு ரசிகனைக் கட்டிப் போடுவதே இயக்குநருக்கான சவால். கற்றது தமிழ்,எவனோ ஒருவன் படங்கள் சிறந்த உதாரணம். இவ்விரு படங்களும் முன்னிறுத்தும் கேள்விகள் அபாரமானவை(இரண்டுமே வியாபாரரீதியில் தோல்வியடைந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). தனிமனிதனின் கேள்விகள்,கோபங்கள்,அவமானங்கள்,
சந்தோஷங்கள்,கட்டாயமாக உலகிற்கு உணர்த்தப்பட வேண்டியவை. ஏனெனில்,இந்த உணர்ச்சிகளின் கலவைதான் சமூகம்.சில நல்ல கதைகள் கமர்ஷியலாக படமாக்கப்பட்டு தன் சுயத்தை இழந்து விடுகின்றன. 'நிமிர்ந்து நில்' திரைப்படம் இந்த வகையைச் சார்ந்தது.தன் சமூகக் கோபங்களை உரக்கச் சொன்ன இயக்குநர் அந்தப் படத்தை இடைவேளையோடு முடித்து மிச்சத்தைக் கத்தரித்து குப்பையில் போட்டிருந்தால் சிறப்பாக வந்திருக்கும்.
'தனிஒருவன்' ஒரு வகையில் சிறப்பாக வந்திருக்கும் திரைப்படம். கதையின் பின்புலம் வலுவானது. நன்மை-தீமை இடையிலான போராட்டம் தான் படம். Batman-joker போல. ஒருவன் சிறு வயதில் செய்தித்தாளில் 15 வயது சிறுவன் செய்த கொலை செய்தி பார்த்து யோசிக்கத்  துவங்குகிறான். அது அவனை காவல் அதிகாரி ஆக்குகிறது. குற்றங்களுக்கு பின்னால் உள்ள அரசியலை ஆராய்கிறான். அது ஒரு நெடுஞ்சங்கிலி போல நீள்கிறது. பெரிய குற்றங்களின் ஆணிவேர் சிறுகுற்றங்கள் என்பதை கண்டடைகிறான். ஒட்டுமொத்த குற்றங்களையும் ஒரு சிலந்திவலை பின்னலாகக் கொண்டு ஆராயும்போது சிலந்தியாக அந்த 15 வயது சிறுவன் உருவெடுத்து நிற்கிறான். தன் எதிரியை சந்திப்போம் என்று ஆணித்தனமாக நம்புகிறான்.இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். நல்லவன் அவனது கொள்கையிலும் கெட்டவன் அவனது கொள்கையிலும் தெளிவாக இருக்கிறார்கள்.கடவுளையும் பிசாசையும் போல இரு மனிதர்களின் சிந்தனைகள் விவாதங்களாகின்றன. இறுதிக்காட்சியில், தான் தோல்வியின் விளிம்பில் இருக்கும் போதும் அவன் கொள்கையில் திடமாக இருக்கும் கெட்டவன் இந்த 'நாட்டுக்காக' அல்ல 'உனக்காக' இதை ஏற்கிறேன் என்கிறான்.இதன் உட்கருத்து விஸ்தீரணமானது. இந்தக் கதையை விமர்சிக்கும் போது தனிஒருவன்(நல்லவன்) எப்படி இவ்வளவு விஷயங்களைச் செய்ய முடியும்? அரசு இயந்திரத்தில் இருந்து தப்பிப் பிழைத்து உயிரனமாய் நடமாட முடியும்? நான்கு நண்பர்களை மட்டும் வைத்துக் கொண்டு போராட முடியும்? தனிஒருவன்(கெட்டவன்)  எப்படி ஒட்டுமொத்த நகரத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்? எப்படி அரசியல் முடிவுகள் கூட அவனைக் கடந்துதான் செல்ல முடியும்? போன்ற கேள்விகள் அநாவசியமானவை. அவசியமில்லாதவை. 

Friday, 24 July 2015

நிலத்தடி நீர் - what's app ல் கண்ட கட்டுரை

நிலத்தடி நீர் மட்டம் தரைமட்டத்திலிருந்து 3 - 5 மீ ஆழத்தில் இருந்தது. ஐம்பதுகள் வரை பயிர்களுக்குக் கமலைக் கிணறுகளில் மாடு பூட்டி நீரிறைத்தனர். நிலத்தடி நீர்மட்டம் மேலாகவிருந்த ஆறு, வாய்க்கால் பகுதிகளில் ஏற்றத்தால் நீரிறைத்தனர். அக்காலத்தில் கிணறு தோண்ட விரும்பும் விவசாயி பொதுவாகத் தோட்டத்தின் 'ஜலமூலை' எனும் வடகிழக்குப் பகுதியில் கிணறு தோண்டுவார். அருகிலுள்ள அடுத்த தோட்டத்துக்காரர்களும் அவர்களது தோட்டங்களின் வடகிழக்கு மூலைகளில் கிணறுகள் தோண்டியதால், ஒரு கிணற்றுக்கும் அடுத்த கிணற்றுக்கும் 'ஒரு தோட்ட' இடைவெளி இருந்தது; இது வாஸ்து நம்பிக்கையால் ஏற்பட்ட மறைமுகமான நன்மை. அக்கினிமூலையான தென்மேற்குப் பகுதியில் தோண்டியிருந்தாலும் அன்று நீர் கிடைத்திருக்கும் என்பது வேறு விஷயம். வடகிழக்குப் பகுதியில், குறிப்பாக எந்த இடத்தில் கிணறு தோண்ட வேண்டும் என்ற முடிவுக்கு வரவியலாத விவசாயிகளில் சிலர், அதிகாலையில் தோட்டத்திற்குப் பசுமாட்டை ஓட்டிச் சென்று அது எங்கு மூத்திரம் பெய்கிறதோ அங்குக் கிணறு தோண்டினர். வேறு சிலர் குரும்பை ஆட்டின் முதுகின்மீது ஒரு பிடி மண்ணை வைத்து அதை ஓடவிட்டு அது எங்கு நின்று உடலைச் சிலிர்த்து மண்ணை உதறுகிறதோ அங்குக் கிணறு தோண்டினர். குரும்பையாடு, பசுமாடு தவிர, பச்சைக் கவட்டைக் குச்சி ஏந்தியவர்களுக்கும் ஏக கிராக்கி அன்று. நிலத்தடி நீர் கிட்டும் மட்டத்திலும் அளவிலும் கூடுதல்குறைவு இருந்தாலும் பொதுவாக எல்லா இடங்களிலும் அப்போது நிலத்தடி நீர் இருந்தது. நிலத்தடி நீரின் மட்டம் மேல் மண்ணுக்குக் கீழேயுள்ள மக்கிய பாறைகளில் (இதைக் கொங்குத் தமிழில் 'மசணை' என்பர்) இருந்தது. பின் என்ன ஆனது? ஐம்பதுகளில், காங்கிரஸ் அரசுக் காலத்தில், தமிழ் நாட்டுக் கிராமங்களை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் மின்சாரமயமாக்கலுக்கு முக்கியமான இடம் இருந்தது. உடனே வசதியுள்ள விவசாயிகளின் கிணறுகளில் மின்சாரத்தால் இயங்கும் நீரேற்றிகள் இயங்க ஆரம்பித்தன. அவை கமலை, ஏர் இறைத்த நீரைவிடப் பலமடங்கு அதிக அளவில் நிலத்தடி நீரை அள்ள ஆரம்பித்தன. அறுபதுகளின் இறுதியில் தோட்டங்களில் கமலைகளின் ஓசையும் ஓய்ந்தது; வயல்வெளிகளில் ஏற்றப் பாட்டு கேட்டதும் நின்றது. முன்பு இறைக்கப்பட்ட நிலத்தடி நீரைவிட அதிக நீர் இறைக்கப்பட்டு, அதிக நீரை உட் கொள்ளும் பயிர் வகைகளும் பயிரிடப்பட்டன. ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு கிணறுகளைத் தோண்டி, நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கொள்ளவும் நிலத்தடி நீரின் மட்டம் இறங்க ஆரம்பித்தது. தகப்பன் தோண்டிய கிணற்றை மகன் ஆழப்படுத்த ஆரம்பித்தான். அந்தக் கால கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம், மக்கிய பாறைகளிலிருந்து தாழ்ந்து அதற்கும் கீழேயுள்ள கடினப் பாறைகளிலுள்ள பிளவுகளிலும் வெடிப்புகளிலும் விரிசல்களிலும் தேங்க ஆரம்பித்தது. விடுவார்களா நம்மவர்கள்? வளைக்குள் ஒளிந்திருக்கும் எலியைத் தேடிப்பிடிக்கும் சாரைப் பாம்புகள்போலத் தோண்டு கிணறுகளின் அடித் தளத்தில் துளைகளிட்டும் கிணற்றின் பக்கவாட்டில் துளைகளிட்டும் கிணற்றின் நீர்ச்சுரப்பைப் பெருக்குவதற்கான காரியங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவர் 50 மீ தோண்டினால் அடுத்தவர் 60 மீ தோண்டுவார். இப்படியாக ஒருவருக் கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு நிலத்தடி நீரகத்தை வற்றடித்தனர். மணற்கேணி, தொட்டனைத்து ஊறும். ஆனால், கடினப்பாறைகளில் தோண்டப்படும் கிணறுகள் அவ்வாறானவையல்ல. நிலத்தடி நீரகம் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமன்று. பூமியின் மேற்பரப்பில் உள்ள நீர்நிலைகளிலும் தாவரங்களின் இலைகளிலும் உள்ள நீர், சூரியனின் வெம்மையால் ஆவியாகி, மேகங்களாகத் திரண்டு, வானிலையைப் பொறுத்து மழையாகப் பெய்வதை நீர் சுழற்சி என்கிறோம். மழை நீரின் ஒரு பகுதி நிலத்தின் அமைப்பைப் பொருத்து ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடிக் கடலில் சங்கமமாகிறது. தரையின் மேற்பரப்பில் வழிந்தோடும் மழை நீரின் ஒரு பகுதி ஏரிகளிலும் குளங்களிலும் தேங்கி, அதன் ஒரு பகுதி சூரியனின் வெம்மையால் நீராவியாக மாற, மீதமுள்ள நீர் நிலத்தடி நீராக பூமியினடியில் இறங்குகிறது. மணற்பாங்கான அல்லது படிவப்பாறைகள் உள்ள பகுதிகளில் மழைநீரில் 12 - 15 விழுக்காடும் பாறைப் பாங்கான பகுதிகளில் 4 - 6 விழுக்காடும் நிலத்தினுள் இறங்குகிறது. நிலத்திற்குள் இறங்கும் நீரின் ஒருபகுதியால் தாவரங்கள் பயனடைகின்றன. மீதியுள்ள பகுதி வேர்மட்டத்திற்குக் கீழேயுள்ள நுண்துளைகள் வழியாக இறங்கி, பின்னர் ஊடுருவவே இயலாத கடினப்பாறைவரை சென்று தேங்குகிறது. நிலத்தடி நீரைக் கொண்டுள்ள பூரிதப் பகுதியை நீரகம் என்பர். இந்த நீரகத்தில் தேங்கியுள்ள நீரின் மட்டம், புவியியல் அமைப்பையும் பெய்யும் மழையின் அளவையும் பொருத்தே அமையும். எழுபதுகளில் கோவைக்கு அருகாமையில் நிலத்தடி நீர்மட்டம் 30 - 40 மீ ஆழத்தில் இருந்தது. இன்றைக்கு 80 - 100 மீ கீழே உள்ளது. கோவை நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலுமுள்ள விவசாயிகளும் தொழிற்சாலைகளும் குடியிருப்புகளும் நிலத்தடி நீரை அபரிமிதமாகப் பயன்படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் இறங்க ஆரம்பித்தது. ஓராண்டில் உறிஞ்சி எடுக்கப்படும் நிலத்தடி நீர், ஓராண்டில் ஊறியிறங்கும் நீரின் அளவைவிடக் குறைவாக இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாகச் சேகரமாகி இருப்பில் இருக்கும் நிலத்தடி நீரை அளவுடன் உபயோகப்படுத்த வேண்டும். நிலத்தடி நீர், இயற்கையால் புதுப்பிக்கப்படும் வளம். நிலத்தடி நீரகத்திலுள்ள நிலத்தடி நீர், வங்கியில் இடப்பட்ட வளரும் மாதச் சேமிப்பு போல. பருவங்கள்தோறும் பெய்யும் மழையின் ஒரு பகுதி நிலத்தடி நீரகத்தில் சேகரமாகிறது. அந்தச் சேகரத்திலிருந்து நாம் ஆண்டுதோறும் எடுத்துப் பயன்படுத்தும் நீரின் அளவு ஆண்டுதோறும் மழை கொடுக்கும் நீரின் அளவைவிடக் குறைவாக இருந்தால் சேகரம் வற்றாது. பருவமழை தவறி, வறட்சி ஏற்படும் ஆண்டுகளில் ஓரளவு சேகரிப்பிலிருந்து எடுக்கலாம். அடுத்த ஆண்டு சராசரி மழையைவிட அதிக மழை பெய்தால், இந்தக் குறைவு நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். ஆனால், தொடர்ந்து சேகரத்திலிருந்து அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும். இதை நிலத்தடி நீர் அகழ்வு என்பர். இதுதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

Friday, 19 June 2015

C.ருத்ரய்யா

C.ருத்ரய்யா - சிறந்த திரைப்பட இயக்குநர் என தனது ஒரே படத்தின் மூலம் உணர்த்தியவர். வாழ்நாளில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியவர். காலத்தின் சுழற்சியில் சிக்குண்டு சினிமா உலகை விட்டு விலகி, வெறுத்து, பின் முயன்று, தோற்று, நோய்வாய்பட்டு, இயற்கை எய்திய கலைஞன். அவரைப் பற்றிய ஒரு கட்டுரையை திரு.செழியன் அவர்களின் எழுத்தில் விகடனில் படிக்க நேர்ந்தது. அதன் தாக்கத்தில் பார்த்த திரைப்படம் "அவள் அப்படித்தான்". 1970 களில் சமூகத்தில் பெண் என்பவள் எப்படிப்பட்டவள் என்று ஒரு பிம்பம் இருந்தது. பெண் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதிகளை ஊசியில் உள்ளடக்கி பெண்ணே உணராமல் ஒவ்வொரு பெண்ணின் இரத்தத்திலும் செலுத்தியிருந்தது சமூகம். இன்றளவும் தமிழ் சினிமா பேசத் தயங்குகிற, பூடகமாகவே மட்டும் சொல்ல முயன்ற, ஆழ்ந்த உள்ளடக்கம் கொண்ட ஒரு கருவை 1978ல் கையிலெடுத்து பொளேரென போட்டு உடைத்தார் ருத்ரய்யா. பெண் பற்றிய சமூகத்தின் கட்டமைப்பை செதில் செதிலாக பெயர்த்து வேறு பரிமாணத்தை வெளிச்சமிட்டு காட்டியது இந்தப் படம். சினிமா என்பது காட்சி மொழி என்று சொன்னவர் அவர். ஒவ்வொரு காட்சியிலும் சிந்தனை தெறிப்புகள். சிறந்த சொல்லாடல். வழக்கம்போல மக்களுக்கு பிடிக்கவில்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பின் கிராமத்து அத்தியாயம்(இன்னும் பார்க்கவில்லை). அதன் பின் 35 வருட இடைவெளி. அடுத்தது மரணம். கடைசியாக ஒளிப்பதிவாளர் செழியனுடனான உரையாடலின் போது அவர் சொன்ன வார்த்தைகள் சுருக்கமாக.
" ஏன் செழியன் நான் இப்போ படம் எடுத்தா மக்கள் பார்ப்பாங்களா? 2 கதை இருக்கு. ஒரு சின்ன பட்ஜெட் படம். ஒரு பெரிய பட்ஜெட் சயின்டிஃபிக் படம். கமல்கிட்டயும் கேட்டிருக்கேன். யாராவது ப்ரொடியூசர் இருந்தா சொல்லுங்க செழியன். கெடச்சா பாக்கலாம் இல்லனா சோத்த தின்னே சாகவேண்டியதுதான்".

சாரம்: ஆனந்த விகடன்

கனவெனும் நிஜம்

நித்திரை. நித்திரையின் விழிப்பு - நிஜம்,கனவல்ல. நிஜக்கனவு. கனவில் நிஜம் - எனில் - நிதர்சனம். நிஜம் போன்ற நிழல். நிழல் போன்ற நிஜம். கனவு போன்ற மாயை. கற்பனை. இது புரிபடா கனவின் களமோ? நிஜத்தின் களமோ? யார் கண்டார்.