Tuesday, 20 October 2015

வாசிப்பு

புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வாசிப்பு "வாழ்க்கையைக் கற்றுத்தரும்", "சிந்தனையின் எல்லையை விரிவுபடுத்தும்", அறிவை வளர்க்கும்", இப்படிப் பலப்பல. அதில் முக்கியமான ஒன்று, "புத்தக வாசிப்பு உன்னை நல்வழிப்படுத்தும்" எனும் கூற்று.
உண்மை நிலை அதுவல்ல.

புத்தகம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட பார்வை. அது அவர் எடுத்துக்கொண்ட கருவைப் பொறுத்தும் அவர் மனநிலையைப் பொறுத்தும் வெளிப்படும். ஒரு வாசகனுக்கு அந்தத் தெளிவு இருந்தால் மட்டுமே வாசிப்பு இனிமை தரும். மனிதனை திசைமாற்றும் அபாயம் புத்தகங்களுக்கு உண்டு. ஒரு புத்தகம் என்றுமே ஒருவனைத் திருத்தவோ, நல்வழிப்படுத்தவோ உதவுவதில்லை. மாறாக, அவனை சிந்திக்கத் தூண்டுகிறது. அந்த சிந்தனைகளின் வடிவமாக அவன் உருமாறுகிறான். மனிதனின் இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அவனைச் செறிவடையச் செய்யவும், தவறு செய்யத் தூண்டவும் புத்தகங்களால் முடியும். அது புத்தகங்களுக்கே உரித்தான தன்மை. இருவினைகளின் வடிவமே, புத்தகம்! போராளியும் புத்தகம் வாசிக்கிறான். தீவிரவாதியும் புத்தகம் வாசிக்கிறான். அஹிம்சாவாதியும் புத்தகம் வாசிக்கிறான். ஒரே புத்தகம். முப்பரிமாணம். புத்தகம் இதை சாத்தியமாக்கும்!!

எல்லாவிதமான புத்தகங்களையும் வாசித்து, ஆராய்ந்து, அதன் கருவை உள்வாங்கி அலசுபவனே ஒரு நல்ல வாசகனாக இருக்க முடியும்! வாசிப்பின் விஸ்தீரணம் அப்படியானது.

சில புத்தகங்களை வாசிக்கும் போது உணரும் ஒரு அற்புதமான விஷயம், வாசிக்கும்போதும் வாசித்து முடித்தபின்பும் புரிபடா தன்மை! வாசிப்பின் வேகத்தில் நம் கண்களுக்குத் தட்டுப்படாத வார்த்தைகளும், தவறவிட்ட விடயங்களும், ரசிக்கத் தவறிய எழுத்துநடையும், மீண்டும் உயிர்பெற்று எழும் அந்த புத்தகங்களை மீண்டும் வாசிக்கும்போது!
ஒவ்வொரு முறையும் ஒரு புது உயிர்!
புது அர்த்தம்!
பழகிய விஷயங்கள் பற்றிய வேறுபார்வை!
அதாவது, நவீனத்துவத்தை உடைத்து பின்நவீனத்துவம் வந்ததைப் போல!
எழுத்துக்களின் நடனம் மட்டுமே இதை சாத்தியமாக்குகிறது.

****

மனத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து புத்தகங்களை வாசிக்கும்போது ஒரு வாசகனாக நான் உணர்ந்தது மூன்று நிலைகள்.

நிலை 1:

ஒரே மூச்சில் ஆர்வமுடன் படித்து முடித்து புத்தகம் உணர்த்தும் விடயம் மனதில் பதிந்துவிடுவது.

நிலை 2:

புத்தகம் முழுவதும் படித்து முடித்தாலும் எழுத்தாளரின் எண்ணத்தை, கதைக் கருவை, உணர்த்தும் விடயத்தை அவரவர் தன்மைக்கேற்றாற்போல் புரிந்துகொள்வது.

நிலை 3:

முழுதாக ஒரு மணிநேரம் தாண்டியிருக்காது. வார்த்தைகளை உதடுகள் வாசிக்கும். வாசிப்பதை மூளை உணரும். ஆனால், மனதில் தங்காது. தலையில் பாரம் வந்து அமர்ந்துகொள்ளும். பயங்கர வலி ஏற்படும். ஒருவிதமான மயக்கநிலை (இந்த மனச்சிதறல்கள் எதனால்? எழுத்துக்களின் கடின நடையா? புரிந்துகொள்ள முடியாத ஆதங்கத்தின் வெளிப்பாடா? தெரியவில்லை).

****

இந்தக் கட்டுரை இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்லாமல் முழுமைபெறாது.
நாவல்: ஜே.ஜே சில குறிப்புகள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி

ஜே.ஜே என்ற கதாபாத்திரத்தை முன்னிறுத்தி அவர் கையாண்டிருக்கும் களம் அசாதாரணமானது. ஜே.ஜே வின் பார்வையில் உலகம் விரிகிறது.மனித வாழ்க்கையின் எதார்த்தத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடுகள், இடைவெளிகள் பற்றியதே நாவலின் பேசுபொருள்.
மனிதனை வண்டாய் குடைந்துகொண்டிருக்கும் கேள்விகள், குழப்பங்கள், சிக்கல்கள் பற்றி அந்த வண்டை விட வேகமாய் குடைந்து தீர்வைத் தேடி அலைகிறது, ஆராய்கிறது இந்த நாவல் என்பது என் பார்வை.
ஒரு முடிவு அல்லது தீர்வு (என நினைப்பது) இன்னொன்றின் தொடக்கம் என்பதே! அப்படிப்பட்ட தேடல்கள் இந்த நாவல் முழுக்கக்கொட்டிக்கிடக்கிறது. ஒரு நாவலாக இந்த எழுத்துகள் புரிகிறதோ இல்லையோ, பக்கங்களைத் துண்டுபிரசுரங்களாகக் கற்பனை செய்துகொண்டால் நிச்சயம் ஏதேனும் ஒரு பிரசுரம் உங்களுக்கானதாய் இருக்கும்!!


Monday, 19 October 2015

அழுக்குப் பக்கங்கள்

பெரும்பாலும் மனித மனங்களில் உண்டாகும் கவலைகள், சஞ்சலங்கள், சந்தேகங்கள், சந்தோஷங்கள், கற்பனைகள், சிந்தனைகள் என எல்லாமே அதனதன் தனித்தன்மையைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. காரணம், இந்த உணர்வுகள் சாஸ்வதமற்றவை! மனிதனுக்கு மனிதன் மாற்றம் பெறுபவை! ஒவ்வொரு மனிதனுக்கும் அதன் அர்த்தங்களில் இருந்து நழுவி வித்தியாசப்படுகிறது.

ஒரு திரைப்படத்தில் வரும் ஆழ்ந்த பொருள் கொண்ட வசனம் நினைவுக்கு வருகிறது.

" வாழ்க்கையில் சில விஷயங்களை நியாயப்படுத்த முடியாது, நியாயப்படுத்தவும் கூடாது."

வாழ்வில் இன்னது செய்கிறோம் எனத் தெரிந்தும், தெரியாமலும், சந்தர்ப்பவசத்தாலும், சூழ்நிலைகளாலும், கட்டுப்பாடில்லாத எண்ணங்களாலும், உளவியல் கோளாறுகளாலும் மனிதர்கள் செய்யும் தவறுகள் எத்தனை எத்தனை? நியாயப்படுத்த முடியாத, நியாயப்படுத்தவும் கூடாத விஷயங்கள் எத்தனை எத்தனை?!! மனிதனின் மனநிலைக்கு உகந்தாற்போல் இவை பரிமாணம் பெறுகின்றன.
கடும் மன உளைச்சல்கள், குற்ற உணர்ச்சி, வஞ்சகம், மனப்பிறழ்வுகள், கோபதாபங்கள், வக்கிரங்கள் என எல்லா எதிர்வினைகளுக்கும் பின்புலம் இப்படிப்பட்ட விஷயங்கள்தான். தனிமைப் பொழுதுகளில், இரவுகளில் இந்த உணர்வுகளின் உக்கிரம் அதிகம்! கடலில் உருவாகி, அதிலிருந்து தப்பிப் பிழைத்து கரையைச் சேரும் அலைகள் தன் ஸ்திரத்தை இழந்து மீண்டும் உள்ளிழுக்கப் படுவதை போல உணர்வுகள் முட்டி  மோதுகின்றன. உடைந்து சிதறுகின்றன. மறுவடிவம் பெற்று திடீரென உயர்த்தெழுந்து கருவில் இருந்து வெளிவரத் துடிக்கும் குழந்தை போல வெளிவரத் துடிக்கின்றன! முயன்று, அமிழ்ந்து,எழுந்து, பின் அடங்கும் இந்த உணர்வுப் பாறைகளின் கசிவுகள் இந்த உலகத்தின் ஸ்திரத்தை அசைத்துப் பார்க்கின்றன. உலகம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மனிதன் உருவாக்கிய கொள்கைகளை, கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றன! அடிமனதில் வேரூன்றி இருக்கும் அந்த விஷயங்கள் இறுதிவரை ஒரு கரையானைப்போல் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது. விடவும் முடியாது வைத்துக்கொள்ளவும் முடியாது. அத்தனை சிக்கலானது!

****
ஏனோ இந்த அழுக்குப் பக்கங்களின் மீது தனி கவனம் செல்கிறது. அதைப் படிப்பதில், ஆராய்வதில், சிந்திப்பதில் ஒரு இன்பம் இருப்பதாக தோன்றுகிறது.
மனதின் இந்த அழுக்குப் பக்கங்கள் விகாரமானவை. நம் மிருக பிம்பத்தை நமக்கு உணர்த்துபவை. தன் தவறுகளை, வக்கிரங்களை, அகோர முகத்தை அடையாளம் காணாத யாரும் வாழ்க்கை பற்றிய தெளிவை, ஒரு நம்பகத்தன்மையை பெறுவதில்லை. ஆம், இந்த அழுக்குப் பக்கங்கள் மனிதனைப் பண்படுத்தி நல்வழிப்படுத்தும் ஒரு பாசுரம்! தனிமையில், பொது இடங்களில், அலுவலகங்களில்,வீடுகளில் என ஒவ்வொருவருடைய விகார முகங்கள் அவர்களின் தன்மைக்கேற்ப வெளிப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் பூட்டும் சாவியும் மனித மனம் மட்டுமே!




Thursday, 15 October 2015

தற்கொலைகாரன்

"மனதை இருள்படர்ந்த எண்ணங்கள்
கவ்விக்கொள்ளும் போது
மனச்சிறகுகள் வெகுசுலபமாக திசை
மாறுகின்றன அந்த சில கணங்களுக்கு மட்டும்"
தற்கொலை!

இனி இந்த உலகில் வாழ, தான் தகுதியற்றவன் என்று ஒருவனை நினைக்கச் செய்வது எது?

பயம்,குற்றஉணர்ச்சி,அவமானம், தோல்வி,கோழைத்தனம்,நம்பிக்கையின்மை,மனஉளைச்சல்,வேலையின்மை என ஒரு சராசரி மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் தற்கொலைக்கான திரி. முரண் யாதெனில், அதே பிரச்சனைகள்தான் மனித வாழ்க்கைக்கு பிடிப்பையும் கொடுக்கிறது! அந்த திரி எண்ணெய் ஊற்றாமலேயே எரிந்து கொண்டிருக்கிறது எல்லோரது மனதிலும். சட்டென ஒரு இருள் படர்ந்து அந்த திரி அணையும் போது உயிர் மீதான ஈர்ப்பு போய்விடுகிறது. வாழ்க்கைப் படகின் துடுப்பாய் இருந்த பிரச்சனைகள் எமனாய் மாறுகின்றன. ஒரு வெறுமை நிலையை, வெற்றிடத்தை மனம் உணரும் அந்த நிமிடங்களே கொலைகார நிமிடங்கள்! கவனமாக கையாள வேண்டிய இராட்சச நிமிடங்கள்!
வலுவான மனநிலைகொண்ட, பல சிக்கல்களை சர்வ சாதாரணமாக எதிர்கொண்ட, நம்பிக்கை செறித்த,துன்பத்திலேயே உழன்றாலும் தளராத இதயம் கொண்ட, எத்தனை எத்தனை நண்பர்களைக் கூட சாய்த்து விடுகிறது இந்த தற்கொலை. நான் மிரண்டுபோகிறேன் ஒவ்வொரு உயிரும் இந்த தற்கொலைகாரனால் பறிக்கப்படும் போது!

Wednesday, 14 October 2015

காமத்தின் விதை

சிறுவயதில்
பசுவின் மடியில் கன்று பால் குடிப்பதையும்
தாயின் முலையில் சிசு பால் சப்புவதையும்
பார்த்த நொடிகளில்
உண்டான குறுகுறுப்பில்
மனதில் விழுந்திருக்குமோ
காமத்தின் விதை!
என்று வேர்விட்டுத் துளிர்த்து செடியானதோ தெரியவில்லை.
இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
வளர்ந்து கொண்டு இருக்கிறது!