Wednesday, 6 January 2016

கனவு

வாழ்வில் கனவு என்ற அனுபவத்தை உணராமல் எந்த மனிதனும் இருக்கமுடியாது. அவரவர் ஆழ்மனதின் ஆசைகளுக்கேற்ப, வக்கிரங்களுக்கேற்ப, விசித்திர எண்ணங்களுக்கேற்ப, கனவு தன் எல்லையை வரையறுத்துக் கொள்கிறது. கனவு, எதை விதைக்கிறோமோ அந்த எல்லையைத் தாண்டாமல் விதைத்ததை மட்டும் கிளைபரப்பி வளர்த்துக்கொண்டே போகும் பொக்கிஷம், விபரீதம் - எண்ணங்களின் தாண்டவம் - உணர்ச்சிகளின் சங்கமம். எண்ணங்களுக்கு நேரம் காலமெல்லாம் கிடையாது. அதனால்,கனவுக்கும். பகலும் இரவும் கனவெனும் மாபெரும் வெளியில் சஞ்சரிக்கலாம்.  குழந்தையாகலாம், கவிஞனாகலாம், மிருகமாகலாம், முத்தமிடலாம், கொலை செய்யலாம், காதல் புரியலாம், காமம் தீர்க்கலாம், களவு செய்யலாம்,கட்டி உருளலாம், கத்தித் தீர்க்கலாம், ரெளத்திரம் பழகலாம், வன்மம் கலையலாம், அழுது புலம்பலாம், சிரித்து மகிழலாம், மாண்டு உயிர்க்கலாம், அசுரகுணம் கொள்ளலாம், அருவமாய் போகலாம். யார் கண்டது? மொத்தத்தி்ல் மனதில் கனன்று கொண்டிருக்கும் உறுபசி தீரலாம்! இது முடிவிலா நிலை. இங்கு முடியாதது எதுவுமே இல்லை. நம் நினைவுக் கண்ணிகளை முன்னுக்குப்பின் முரணாக கலைத்துப் போடுவதும், அகோரமுகத்தைக் கண்முன்னே கிழித்துத் தொங்கவிடுவதும், லட்சியங்களின் எல்லையை விஸ்தாரமாக்குவதும் கனவின் விளையாட்டு. கனவால் மட்டுமே முடிந்த விளையாட்டு.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழும். இது கற்பனை அல்லவா என்று. கற்பனை, இல்லாததை உருவாக்கி ரசிப்பது (power to make the things not present in reality). கனவு, இயல்பாகவே இருப்பதிலிருந்து இல்லாததை சாத்தியமாக்குவது (inherent ability to attain unreality from reality exists). கனவு, சுய பிரதிபலிப்பு சுயமின்றி நிகழ்வது.  கற்பனை சுயநினைவோடு புற,அகத் தூண்டல்களால் நாமே உருவாக்கும் மாயை. இன்னும் தெளிவாகச் சொன்னால், நீரில் நடப்பது போல் நினைப்பது கற்பனை. நீரில் நடந்ததாய் உணர்வது கனவு. கனவுகள் ஆழ்மனதின் அபிலாஷைகள். கற்பனைகள் சந்தர்ப்பங்களின் சிந்தனை வெளிப்பாடுகள். கனவுகள் தானாகவே நிகழ்பவை. கற்பனைகள் உருவாக்கப்படுபவை. பயணம் ஒன்றுதான்,பாதைகள்தான் வெவ்வேறு என்பதே முரண்நகை. போதும். இதற்கு மேல் பேசினால் நீங்கள் எனக்காக ஒரு புது வசைச்சொல்லை உருவாக்கக்கூடும்.
பறவையைப் போல் வானில் பறப்பது போல கனவு கண்டிருக்கிறீர்களா? நான் கண்டிருக்கிறேன். இரு கைகள் சிறகுகளாக, மெள்ள மெள்ள வான்நோக்கி பறப்பேன். பறவையாவேன்! அது ஒரு சுகானுபவம். அதை நாம் நம்பும் நிஜத்தில் முயன்றால் எப்படி இருக்கும்? Ankhon Dekhi என்று ஒரு ஹிந்திப் படம். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற கூற்றை சற்றே மாற்றி தீர விசாரித்து கண்ணால் கண்டால் மட்டுமே மெய் என ஒருவன் நம்பினால் எப்படி இருக்கும்? நம் அறிவியல் நிரூபித்த அத்தனையையும் நம்ப மறுத்து, தன் கண்களால் பார்த்தாலொழிய ‘இருக்கலாம்’ என்று கடந்து செல்லும் ஒருவன் தான் கண்ட கனவை நிஜமாக்க நினைத்தால் எப்படியிருக்கும்? அவன் பறவையாய் பறப்பது போன்று கனவு காண்கிறான். அப்படி கனவு காணும் போதெல்லாம்  பறவையாய் உணர்வதாக மனைவியிடம் சொல்லும் போது,’நீங்கள் இதுவரை பறந்ததுண்டா? பின் எப்படி உணர முடியும்?’ என சிரித்துக்கொண்டே  கேட்கிறாள். அவள் கேட்கும் கேள்வி அவன் கோட்பாட்டை சுக்குநூறாக்குகிறது. தன்னை உறுத்திக்கொண்டே இருக்கும் அந்தக் கேள்விக்கான விடையை அவன் கண்டறியும் அந்த பேரனுபவத்தோடு படம் நிறைவடைகிறது!
கன்னா பின்னாவென்று வரும் இந்தக் கனவுகள் மிரட்சியடையச் செய்பவை. மந்தகாசத்தைத் தருபவை. ஏகாந்தத்தை உணர்த்துபவை. நீங்கள் பிறப்பதற்கு முன்பே இறந்துபோன சித்தப்பா உங்கள் பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நெருக்கமானவர் மரணிக்கும் போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? என்றோ தற்கொலை செய்துகொண்டு செத்துப்போன பின் வீட்டுக்காரன் ஏன் செத்தேன் என்று உங்களிடம்தான் சொல்வேன் என்று அடம்பிடித்தால் எப்படி இருக்கும்? பாம்புகடித்து  இறந்துபோன அண்ணன் ‘அகேஷனலாக’ வந்து உங்களைப் பார்த்து அழுது கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? பெரும்பாலும் நிராசைகளும் துயரங்களும் நிறைந்ததாய் இருக்கின்றன கனவுகள். லட்சிய வேட்கை கொண்ட கனவுகளும் உண்டு. எனக்கு ‘இன்னதாக’ ஆக வேண்டும், இதையெல்லாம் செய்யவேண்டும் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உருவாக்கிக்கொண்ட  ஒன்றல்லவா? தன் பலம் எதுவென்று பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து, அடையாளம் காணும் ஒன்றல்லவா? ஒருவேளை உங்கள் விருப்பத்தை அடையாளம் கண்டபின் வேண்டுமானால் கனவாக வரக்கூடும். கனவென்பது இயல்பாக தோன்றும் எண்ணங்களின் திரட்சி அல்லவா? அதெல்லாம் முடியாது, அப்துல்கலாம் சொல்லியிருக்கிறார் என்கிறீர்களா? சரி, இருந்துவிட்டுப் போகட்டும். தன் லட்சியத்தை தன் கனவில் கண்ட பின் அதற்கு உரமாக கற்பனைகள் அவசியமாகிப் போகிறது. அதனால்தானோ என்னவோ எனக்கு லட்சியங்கள் கனவில் வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை என் லட்சியம் எதுவென்று தெரியாததால் கூட இருக்கலாம்! சுவாரசியமான கனவுகளும் உண்டு. நண்பர்களோடு அமர்ந்து மது அருந்திக்கொண்டிருக்கும் நடு இரவில், யாருக்குத் தெரியக்கூடாது என்று நினைத்தோமோ அவரே திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு என் தாத்தாவை எழுப்பி ‘ஷைடிஷ்’ வாங்கினால் எப்படி இருக்கும்? சம்பந்தமே இல்லாமல் என் தாத்தாவும், என் நண்பனின் அண்ணனும் எப்படி நுழைந்தார்கள் எனத் தெரியவே இல்லை. முகம் தெரியா நபரை கையில் அரிவாளோடு  ஓட ஓட விரட்டி வெட்ட நானும் என் தாத்தாவும் முயலும்போது கனவு கலைந்தால் எப்படி இருக்கும்?
பல வருடங்களாக வெளிநாட்டில் உழன்று கொண்டிருக்கும் மகன் தன்னோடு  சேர்ந்து உணவருந்தியதாக ஒரு தாய் உணர்வதும், இறந்துபோன நண்பன் தன்னைச் சுற்றியே எப்பொழுதும் இருப்பதாய் உணர்வதும் கனவின் நீட்சியன்றி வேறென்ன? கனவு நிகழும்போது அதைப் பார்வையாளனாக கவனித்திருக்கிறீர்களா? நம்புங்கள். நான் உணர்ந்த நிஜம். தூக்கத்தின் விழிப்பு அது என்று கூட சொல்லலாம். எதுவாயினும், தலைக்குள் தனி உலகம் இந்தக் கனவு!

Saturday, 21 November 2015

வெறுப்பு - சிறுகதை

சென்னையின் அந்த இரயில் நிறுத்தம் சிறு ஓய்விற்குப் பின் மீண்டும் தன்னைச் சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருந்தது. மாலைப்பொழுது இறந்து இரவு பிறந்துகொண்டிருந்தது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது. யாசகர்களும் திருநங்கைகளும் இரயில்களையும் இரயில் நிறுத்தத்தையும் ஆக்கிரமித்திருந்தனர். இரயில் நிறுத்தத்தில் உள்ள ‘கியோஸ்க்'களில் வெளிச்சப்புள்ளிகள் தெரிய ஆரம்பித்தன. நிறுத்தத்தில் நிறைய மரமேசைகள் இரும்பை அடித்தளமாகக் கொண்டு வீற்றிருந்தன. ஒரு மரமேசை கூட ஒழுங்கான நிலையில் இல்லை. மேசையின் உட்காரும் படுக்கையான இடங்களில் மரப்பலகைகள் உடைந்து பிசிறுகளோடு துருத்திக்கொண்டு இருந்தது. சாய்ந்து அமரமுடியாமல் சிரமப்படவேண்டியிருந்தது. உத்தேசமாக ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து அதில் அமர்ந்தான் அவன். துரதிர்ஷ்டவசமாக அந்த மேசையிலும் ஓரத்தில்  கைவைக்கும் இடத்தில் மரத்தாலான பலகை இல்லாமல் சாலையில் உள்ள பள்ளங்களைப் போல ஓட்டைகள் கொண்ட இரும்புக் கைப்பிடி இருந்தது. கொஞ்சம் கவனம் தவறினாலும் கையைக் கிழித்துவிடும் நிலையில் இருந்தது.
சற்றே கலைந்த தலையுடன்,முகத்தில் மண்டிக்கிடந்த தாடியுடன் பார்ப்பதற்கு நாடோடி போலத் தெரிந்த அவன் முகத்தில் அயர்ச்சி தெரிந்தது. பார்ப்பவர்கள் சந்தேகிக்கும் தோற்றத்தில் இருந்தான்.  தாடியுடன் இருப்பவர்கள் அவ்வளவு இங்கிதம் தெரிந்த ஆசாமிகளாக இருக்கமுடியாது என்பது இந்தச் சமூகத்தின் எண்ணம். சமூகம் விரும்புவது அழகான திருத்தமான முகம்,சுத்தமான உடை,அதை அணிந்திருக்கும் விதம்,நடையிலும் பேச்சிலும் நேர்த்தி,வாரிய தலை. இந்தத் தகுதிகள் அவனை நம்பப் போதுமானவை! சாம்பல் நிறமும் வெள்ளை போன்ற மங்கலான நிறமும் கொண்ட நேர்கோடுகளைக் கொண்ட சட்டையும்,சாம்பல் நிற காற்சட்டையும் அணிந்திருந்தான். ஏதோவொரு தனியார் நிறுவனத்திலிருந்து வேலை முடிந்து வந்திருக்கக்கூடும். ஆனால் கால்களில் ஷூ இல்லை. கழுத்தில் அடையாள அட்டை இல்லை. இருபத்தைந்து வயது இளைஞன். யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அடிக்கடி அலைபேசியில் மணிபார்த்துக் கொண்டும் இரயில் நிறுத்தத்தை வேடிக்கைப்பார்த்துக்கொண்டும் இருந்தான். ரசிக்கும்படியாகவும் வித்தியாசமாகவும் அந்த நிறுத்தத்தில் எதுவுமே இல்லை தண்டவாளங்களில் குவிந்துகிடந்த குப்பைகளைத் தவிர.
ஒரு கிழவி அழுக்குச் சீலையணிந்து, பல நாட்கள் குளிக்காததால் சிக்கலாகிப்போன தலைமயிருடன், சருமத்தில் அழுக்குபடிந்து அதுவே ஒரு நிறமாக மாறிப்போயிருக்க, மெதுவாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கையில் சிறுமூட்டை ஒன்று வைத்திருந்தாள். யாசிப்பவர்கள் அந்த சிறுமூட்டைக்குள் என்னதான் வைத்திருப்பார்கள்? அவளுடைய மொத்த உடைமைகள் அவ்வளவுதான்! அவனருகே வந்து தன் வலதுகையை நீட்டினாள். அவளது கண்கள் அவன் கண்களை நோக்கி இருந்தது. அந்தப் பார்வையின் உக்கிரம் தாங்காமல் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டு கண்பார்வையைத் தவிர்க்க முயன்றான். அவள் நகர்வதாகத் தெரியவில்லை. சட்டைப்பையைத் துலாவி இரண்டுரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஒரு வெற்று மனநிலையில் அவள் கையில் தந்தான். அந்த இரண்டுரூபாயைத்தர அவன் தனக்குள் ஒரு விவாதமே நடத்தியிருக்கக்கூடும்! அவள் எந்த பாவனையும் செய்யாமல் அவனுக்கு அருகில் அமர்ந்த பிரஜையை நோக்கி நகர்ந்தாள். அவள் அதற்கு பழகியிருந்தாள். பெரும்பாலும் அவளது வலதுகை முன்னோக்கி நீண்டிருந்தது. அந்தக் கிழவியின் இடத்தை, அவள் அவனுக்குள் உருவாக்கிய வெற்று மனநிலையை அந்தக் கிழவியின் குழந்தைப்பருவம் கொண்ட சிறுமி நிவர்த்தி செய்தாள். மனதில் எரிச்சல் மண்டியது. மறுபடியும் சில்லரை தேடினான். சட்டைப்பையில் பத்துரூபாய் தாள்களே இருந்தன. சட்டென்று மூளையில் முளைத்த சுயநலம் தன் கொம்புகளை நீட்டி எட்டிப்பார்த்தது. சுயநலக் கொம்புகளை கவனித்த அவன் மனம் சுயபச்சாதாபம் கொண்டது. ஒரு பத்துரூபாய் நோட்டை எடுத்து அவள் கையில் வைத்தான். தன்னிடம் இருக்கும்போது இல்லாதவர்களுக்கு கொடுப்பதில் ஏன் இத்தனை தர்க்கங்கள் எட்டிப்பார்க்கின்றன எனப் புரியாமல் தவித்தான். தன்னையே வெறுத்தான்.
ஒரு உதவியோ தானமோ செய்தபின், திரும்ப அதை உடனே செய்யவேண்டிய நிலை வரும்போது சிறு தயக்கம் உண்டானாலும் முதலில் செய்தது தானமாக இருக்க முடியாது. தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கும். ஓரிரு உதவிகளுக்குப் பின் மனித மனத்தை சுயநலம் கவ்விக்கொள்கிறது. மனதிற்கு உதவி செய்யவும் கால இடைவெளி தேவைப்படுகிறது.
சரியாக ஏழரை மணிக்கு அவள் இரயில் நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தாள். கிராமத்து யுவதி. குடும்ப சூழ்நிலையால் தன் படிப்பிற்கேற்ற வேலையில் தன்னை நுழைத்துக்கொண்டு அந்த நிறுவனத்தில் ஒரு ‘கம்ஃபர்ட்னெஸ்’சை உணர்ந்ததால் வேறு எங்கும் செல்ல விரும்பாதவள். மாநிறம். மெலிந்த தேகம். நல்ல உயரம். அவனது பள்ளித்தோழி அவள். பள்ளிக்காலத்திலிருந்தே தோழியல்ல. இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் காமத்துக்கும் தோழமைக்கும் இடையேயான ஊசலாட்டத்தில் அவளைத் தோழியாக நினைக்க அவன் தன்னைப் பண்படுத்திக் கொண்டிருந்தான் என்பதே நிஜம்! அவளது முகம் முதல் கால்வரை ஒரு பார்வையைக் கொடுத்துவிட்டு அவள் கால்களுக்கு வந்து சேர்ந்தான். அவள் கட்டைவிரலுக்குப் பக்கத்து விரல் கட்டைவிரலை விட நீண்டிருந்தது. அது அவள் கால்களின் அழகைக் கெடுத்தது. பெண்களின் பாதங்கள் மென்மையானவை. காமத்தைத் தூண்ட வல்லவை. கொலுசுகள் வினையூக்கி. ஏனோ நடந்து நடந்து மரத்துப்போன அவன் அன்னையின் பாதங்களும் குதிகால் வெடிப்புகளும் அவன் நினைவுகளின்  இடுக்கில் கசிந்தன. கால்விரல் நகங்களில் ஒருவிதமான அடர் கருப்பு நிறத்தில் நகப்பூச்சு பூசியிருந்தாள். பெண்களின் ரசனை விசித்திரமானது. ஒவ்வாத நிறத்தையே அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அவள் செருப்பைப் பார்த்தால் எரிச்சலாக இருந்தது அவனுக்கு. அதற்காக அவளைக் கடிந்து கொண்டான்.
அவள் இடது கையில் ஒரு வரலாற்றுப் புத்தகமும் பர்ஸ்சும் இருந்தது. அவற்றைத் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்திருந்தாள். வலது கையில் அலைபேசியும் கைக்குட்டையும்  இருந்தது. பெண்கள் ஏன் புத்தகங்களைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி அவனுக்கு எழுந்தது. ஆனால் அவளிடம் அதைக் கேட்கவில்லை. “புத்தகத்தைக் கொடு” என்றான். அவள் தனக்குப் பரிசாக வந்த புத்தகம் என்றும் பத்திரமாகத் திருப்பித் தருமாறும் கேட்டுக்கொண்டு நீட்டினாள். அவளுக்கு புத்தக வாசிப்பில் ஆர்வமில்லை என்பது அவனுக்குத் தெரியும். பரிசு என்பது அன்பின் வெளிப்பாடு என அவள் நம்பியதால் அந்தப் புத்தகம் அவளுக்கு பிடித்தமானதாக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். வாங்கிப் பிரித்துப் பார்த்தான். ஆங்காங்கே பக்கங்கள் தையலிலிருந்து பிரிந்து தொங்கிக்கொண்டிருந்தது. சில பக்கங்கள் தனியாக எடுத்துக்கொண்டு வந்தன. அவளைப் பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து,”ஒழுங்கா வச்சுக்கலடா” என்றாள். “ஒரு புக்குக்கா இவ்ளோ தூரம் வந்த? என்னலாம் பாக்கணும்னா வருவியா?” என பெண்ணுக்கே உரித்தான கேள்வியைக் கேட்டாள். அவன் சிரித்துக்கொண்டே,”புக்க சாக்கா வச்சு உன்னப் பாக்கதான் வந்தேன்” என்றான். ”சமாளிக்காத” என்றாள்.
உண்மையில்,அதுதான் உண்மை என்பது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவளைப் பார்க்கவேண்டும் என்று மனதில் உதித்த தருணம் அவன் உருவாக்கிக்கொண்ட காரணி அது. ஆணுக்குப் பெண்ணை சந்திப்பதிலும், உரையாடுவதிலும் என்றுமே ஆர்வமும் குறுகுறுப்பும் இருக்கும். அதைத்தாண்டி அவன் யோசிப்பதும் நடந்துகொள்வதும் அவனைப்பற்றிய அவள் எண்ணத்தைச் சார்ந்தது. அவளுக்கு அவன் யார் என்பதைச் சார்ந்தது.
அவளைப் பேசவிட்டு கேட்டுக்கொண்டிருந்தான். வேலைப்பளு பற்றி, குடும்பப் பிரச்சினைகள் பற்றி, அவனது பொறுப்பின்மையைப் பற்றி, இன்னும் என்னன்னவோ பேசிக்கொண்டிருந்தாள். பெண்களுக்கு பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவள் இடைவெளி விடும் நேரத்தை அவளைத் தொடர்ந்து பேச வைக்க அவன் உபயோகித்துக் கொண்டான். பேசும்போது அவள் கண்கள் கைக்கடிகாரத்தின் மேல் வந்து வந்து செல்வதை அவன் கவனிக்கத் தவறவில்லை.
இரவு, உலகைத் தன்னுள் இழுத்துக்கொண்டது.
“நல்லா இருட்டிட்டு. கெளம்பலாமா?” என்றாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே. எதுக்கு வெரட்டுற?” என்றான்.
“ உனக்குதான்டா தூரமா போகணும். கெளம்பு” என்று அவனை அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள்.
ஒரு பெண்ணுடனான சந்திப்பில், உரையாடலை ஆண் என்றுமே நிறுத்துவதில்லை. அவள்தான் முற்றுப்புள்ளி வைக்கிறாள். வெகுநாள் கழித்துப் பார்த்ததால் அவளுடன் பேசிக்கொண்டிருக்க அவனுக்கு பிடித்திருந்தது. அவளுக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால், இருட்டவும் அவள் பெண்மை விழித்துக்கொள்கிறது. தன் பாதுகாப்பின் அவசியம் உணர்ந்து கொள்கிறாள். வீடு திரும்ப யத்தனிக்கிறாள். பெண்களுக்கு இரவு பகைவன் போல! பெண்களின் கற்பு சார்ந்த எண்ணம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. மனதை விட்டுவிட்டு உடலை சதையை காபந்து பண்ணுவதை கருத்தில்கொண்டு வாழ்கிறாள். மனம் சகதியில் குதித்தாலும் நெறிகளிலிருந்து பிசகினாலும் அவள் அதை அநாயசமாக கடந்து செல்கிறாள். உடல் அப்படியல்லவே! ஆனால், கற்பு உடல் சார்ந்ததல்ல உளம் சார்ந்தது என்பதை அறிந்தே இருந்தாலும் உடலை காப்பதையே பிரதானமாக கற்பெனக் கொள்கிறாள்.
அவளிடம் விடைபெற்றுக் கொண்டு தன் சிந்தனைகளுக்குள் மூழ்கினான். அவளைப் பார்க்கும் முன்பு  இருந்த மனநிலைக்கும் பார்த்தபின் இருக்கும் மனநிலைக்குமான வேறுபாடு அவனை ஏதோ செய்தது.  கொஞ்ச நேரத்திற்கு முன்னான தன் தர்க்கங்கள் மறந்து சாதாரணமாக அவளுடன் இயைந்து பேச முடிந்ததை எண்ணி வியந்தான். தனக்குச் சாதகமான பிடித்தமான ஒன்று நடக்குமெனில் எந்தச் சூழ்நிலையிலும் மனம் கிளைவிட்டு கிளை தாவுவதை உணர்ந்தான். கசப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது அவனுக்கு.
அவன் போகவேண்டிய இரயில் வந்து சேர்ந்தது. ஏறிக்கொண்டான். திறந்த கதவுகளின் ஓரமாகவே நின்று கொண்டான். மக்கள் பேருந்து,இரயில் பயணங்களின் போது ஜன்னல் ஓரங்களில் அமர்வதையும் படிகளில் நின்றுகொண்டு வருவதையும் உடனே இறங்குவதற்கு ஏற்றாற்போல் பாதையை மறைத்துக்கொண்டு நிற்பதையுமே பெரிதும் விரும்புகிறார்கள். பேருந்து, இரயில்களின் மையப்பகுதியில் நின்றுகொண்டு வருவதையும் ஜன்னல் ஓரம் தவிர பிற இருக்கைகளையும் யார்தான் நேசிப்பது? திருநங்கை ஒருவர் அனைவரது தலையிலும் கைவைத்து “நல்லாருப்ப,காசு குடு” என்று சொல்லி காசு கேட்பதை அவன் கவனித்தான். மிகக் கடினமான விஷயங்களில் ஒன்று, திருநங்கைகளைத் தவிர்க்க முயல்வது. அவர்கள் “காசு குடு” என்று கேட்பதில் இருக்கும் ஒருமையில் ஒரு உரிமை இருக்கும். அதிகாரம் இருக்கும். வலி இருக்கும். இந்தச் சமூகம் அவர்களுக்கான இடத்தைத் தர மறுப்பதினால் உண்டான விளைவு இது. சக ஆணையும் பெண்ணையும் சட்டைசெய்யாமல் நகரும் மனிதர்களுக்கு இவர்களைத் தவிர்க்கத் தெரிவதில்லை. தடுமாறுகிறார்கள். அருவறுப்பினாலும் அச்சத்தினாலும் கட்டாயத்தினாலும் காசு கொடுக்கிறார்கள். அவர்கள் நிலை உணர்ந்து தன் நிலையறிந்து உதவுபவர்கள் அரிது. அவன் பத்துரூபாய் கையில் எடுத்துவைத்துக்கொண்டான். திருநங்கை நெருங்கிவரும்போதே எடுத்து நீட்டினான். அவன் பயணநேரம் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் நான்கைந்து திருநங்கைகள்.இருவருக்கு கொடுக்க முன்வந்தவன் அதன்பின் தன்னைக் குறுக்கிக்கொள்கிறான். அவன் பங்கு அவ்வளவுதான் என்பது போல! ஏதோ பெரிய சேவை செய்துவிட்டது போல! திரும்பவும் தன்னையே வெறுத்தான்.
இரண்டு மூன்று நிறுத்தங்களுக்குப் பின் அவன் நின்றிருந்த பெட்டியில் ஏதோ சலசலப்பு கேட்டுத் திரும்பினான். அவன் நின்றிருந்த பெட்டியின் ரஸ்தோவைத் தாண்டி மறுமுனையில் நான்கு இளைஞர்கள் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரை சரமாரியாக அடித்துக்கொண்டிருந்தார்கள். மறுமுனையிலிருந்த அனைவரும் இந்த முனைக்கு வந்துவிட்டனர். நால்வரில் ஒருவன்,” …த்தா அவன போட்றா” என்றான். அந்த மனிதர்,” ஏன்பா என்ன அடிக்கிறீங்க? விட்ருங்கப்பா” என்று கைகூப்பிக் கேட்கிறார். அவர் பேசும்போதே ஒருவன் இரயில் கம்பியை இறுக்கப்பற்றிக்கொண்டு அவரை எம்பி உதைக்க அவர் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. அவர் முகத்தில் சரமாரியாக நால்வரும் அடிக்க அவர் கீழே விழுந்தார். “மச்சான் நம்ம ஏரியா வந்துட்டு. கெளம்பலாம்” என்று சொல்லிக்கொண்டே திரும்பிவந்து அவரை ஓங்கி உதைத்துவிட்டு நிறுத்தத்தில் நடைமேடைக்கு எதிர்முனையில் இறங்கி ஓடினார்கள். அனைவரது கண்களும் அவர்களை நோக்கியே இருந்தன. அவர்கள் நகர்ந்தபின் திரும்ப மறுமுனைக்கு வந்த மக்கள் அவரை கண்டுகொள்ளவே இல்லை. பரிதாபத்துடனும் சந்தேகத்துடனும் அவரை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மட்டும் தண்ணீர் போத்தலை கொண்டுவந்து கொடுத்து முகம் கழுவச் சொன்னார். மறுமுனையிலிருந்த அனைவரும் இந்த மூலைக்கு திடுதிடுவென வரும்போதே ஏதோ விபரீதம் எனப் புரிந்துகொண்ட அவனும் வேடிக்கை பார்த்தான். ஏதோ ஒரு விசை அவனை நகரவிடாமல் பிடித்து இழுத்தது. “ஒருத்தர் வந்திருந்தா கூட போதுமே? நானும் போயிருப்பேனே?” என்று அவன் மனம் சமாதானத்தைத் தேடியது. பதற்றம் கொண்டான். மனம் அவசரகதியில் சிந்தனையில் குதித்தது. மனிதன் மனிதனின் ஒட்டுண்ணியாகவே வாழ விரும்புகிறான். சார்ந்திருத்தல் மனிதகுணம். எனில், தற்சார்பு என்பது தன் சுயவளர்ச்சியில் மட்டும்தானா? தன்மானம் என்பது தன் சுயம் காத்தல் மட்டும்தானா? ஒரு விஷம் உடல் முழுக்கப் பரவுவதை உணர்ந்தான். பயங்கரமாக தலை வலித்தது அவனுக்கு. செல்கள் தெறிக்க நரம்புகள் புடைக்க தன்மேலேயே கோபம் கொண்டான். திரும்பவும் தன் மேலேயே துவேஷம் கொண்டான். தன்னையே வெறுத்தான். அவனால் அதைத்தான் செய்ய முடிந்தது!

Tuesday, 20 October 2015

வாசிப்பு

புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வாசிப்பு "வாழ்க்கையைக் கற்றுத்தரும்", "சிந்தனையின் எல்லையை விரிவுபடுத்தும்", அறிவை வளர்க்கும்", இப்படிப் பலப்பல. அதில் முக்கியமான ஒன்று, "புத்தக வாசிப்பு உன்னை நல்வழிப்படுத்தும்" எனும் கூற்று.
உண்மை நிலை அதுவல்ல.

புத்தகம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட பார்வை. அது அவர் எடுத்துக்கொண்ட கருவைப் பொறுத்தும் அவர் மனநிலையைப் பொறுத்தும் வெளிப்படும். ஒரு வாசகனுக்கு அந்தத் தெளிவு இருந்தால் மட்டுமே வாசிப்பு இனிமை தரும். மனிதனை திசைமாற்றும் அபாயம் புத்தகங்களுக்கு உண்டு. ஒரு புத்தகம் என்றுமே ஒருவனைத் திருத்தவோ, நல்வழிப்படுத்தவோ உதவுவதில்லை. மாறாக, அவனை சிந்திக்கத் தூண்டுகிறது. அந்த சிந்தனைகளின் வடிவமாக அவன் உருமாறுகிறான். மனிதனின் இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அவனைச் செறிவடையச் செய்யவும், தவறு செய்யத் தூண்டவும் புத்தகங்களால் முடியும். அது புத்தகங்களுக்கே உரித்தான தன்மை. இருவினைகளின் வடிவமே, புத்தகம்! போராளியும் புத்தகம் வாசிக்கிறான். தீவிரவாதியும் புத்தகம் வாசிக்கிறான். அஹிம்சாவாதியும் புத்தகம் வாசிக்கிறான். ஒரே புத்தகம். முப்பரிமாணம். புத்தகம் இதை சாத்தியமாக்கும்!!

எல்லாவிதமான புத்தகங்களையும் வாசித்து, ஆராய்ந்து, அதன் கருவை உள்வாங்கி அலசுபவனே ஒரு நல்ல வாசகனாக இருக்க முடியும்! வாசிப்பின் விஸ்தீரணம் அப்படியானது.

சில புத்தகங்களை வாசிக்கும் போது உணரும் ஒரு அற்புதமான விஷயம், வாசிக்கும்போதும் வாசித்து முடித்தபின்பும் புரிபடா தன்மை! வாசிப்பின் வேகத்தில் நம் கண்களுக்குத் தட்டுப்படாத வார்த்தைகளும், தவறவிட்ட விடயங்களும், ரசிக்கத் தவறிய எழுத்துநடையும், மீண்டும் உயிர்பெற்று எழும் அந்த புத்தகங்களை மீண்டும் வாசிக்கும்போது!
ஒவ்வொரு முறையும் ஒரு புது உயிர்!
புது அர்த்தம்!
பழகிய விஷயங்கள் பற்றிய வேறுபார்வை!
அதாவது, நவீனத்துவத்தை உடைத்து பின்நவீனத்துவம் வந்ததைப் போல!
எழுத்துக்களின் நடனம் மட்டுமே இதை சாத்தியமாக்குகிறது.

****

மனத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து புத்தகங்களை வாசிக்கும்போது ஒரு வாசகனாக நான் உணர்ந்தது மூன்று நிலைகள்.

நிலை 1:

ஒரே மூச்சில் ஆர்வமுடன் படித்து முடித்து புத்தகம் உணர்த்தும் விடயம் மனதில் பதிந்துவிடுவது.

நிலை 2:

புத்தகம் முழுவதும் படித்து முடித்தாலும் எழுத்தாளரின் எண்ணத்தை, கதைக் கருவை, உணர்த்தும் விடயத்தை அவரவர் தன்மைக்கேற்றாற்போல் புரிந்துகொள்வது.

நிலை 3:

முழுதாக ஒரு மணிநேரம் தாண்டியிருக்காது. வார்த்தைகளை உதடுகள் வாசிக்கும். வாசிப்பதை மூளை உணரும். ஆனால், மனதில் தங்காது. தலையில் பாரம் வந்து அமர்ந்துகொள்ளும். பயங்கர வலி ஏற்படும். ஒருவிதமான மயக்கநிலை (இந்த மனச்சிதறல்கள் எதனால்? எழுத்துக்களின் கடின நடையா? புரிந்துகொள்ள முடியாத ஆதங்கத்தின் வெளிப்பாடா? தெரியவில்லை).

****

இந்தக் கட்டுரை இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்லாமல் முழுமைபெறாது.
நாவல்: ஜே.ஜே சில குறிப்புகள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி

ஜே.ஜே என்ற கதாபாத்திரத்தை முன்னிறுத்தி அவர் கையாண்டிருக்கும் களம் அசாதாரணமானது. ஜே.ஜே வின் பார்வையில் உலகம் விரிகிறது.மனித வாழ்க்கையின் எதார்த்தத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடுகள், இடைவெளிகள் பற்றியதே நாவலின் பேசுபொருள்.
மனிதனை வண்டாய் குடைந்துகொண்டிருக்கும் கேள்விகள், குழப்பங்கள், சிக்கல்கள் பற்றி அந்த வண்டை விட வேகமாய் குடைந்து தீர்வைத் தேடி அலைகிறது, ஆராய்கிறது இந்த நாவல் என்பது என் பார்வை.
ஒரு முடிவு அல்லது தீர்வு (என நினைப்பது) இன்னொன்றின் தொடக்கம் என்பதே! அப்படிப்பட்ட தேடல்கள் இந்த நாவல் முழுக்கக்கொட்டிக்கிடக்கிறது. ஒரு நாவலாக இந்த எழுத்துகள் புரிகிறதோ இல்லையோ, பக்கங்களைத் துண்டுபிரசுரங்களாகக் கற்பனை செய்துகொண்டால் நிச்சயம் ஏதேனும் ஒரு பிரசுரம் உங்களுக்கானதாய் இருக்கும்!!


Monday, 19 October 2015

அழுக்குப் பக்கங்கள்

பெரும்பாலும் மனித மனங்களில் உண்டாகும் கவலைகள், சஞ்சலங்கள், சந்தேகங்கள், சந்தோஷங்கள், கற்பனைகள், சிந்தனைகள் என எல்லாமே அதனதன் தனித்தன்மையைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. காரணம், இந்த உணர்வுகள் சாஸ்வதமற்றவை! மனிதனுக்கு மனிதன் மாற்றம் பெறுபவை! ஒவ்வொரு மனிதனுக்கும் அதன் அர்த்தங்களில் இருந்து நழுவி வித்தியாசப்படுகிறது.

ஒரு திரைப்படத்தில் வரும் ஆழ்ந்த பொருள் கொண்ட வசனம் நினைவுக்கு வருகிறது.

" வாழ்க்கையில் சில விஷயங்களை நியாயப்படுத்த முடியாது, நியாயப்படுத்தவும் கூடாது."

வாழ்வில் இன்னது செய்கிறோம் எனத் தெரிந்தும், தெரியாமலும், சந்தர்ப்பவசத்தாலும், சூழ்நிலைகளாலும், கட்டுப்பாடில்லாத எண்ணங்களாலும், உளவியல் கோளாறுகளாலும் மனிதர்கள் செய்யும் தவறுகள் எத்தனை எத்தனை? நியாயப்படுத்த முடியாத, நியாயப்படுத்தவும் கூடாத விஷயங்கள் எத்தனை எத்தனை?!! மனிதனின் மனநிலைக்கு உகந்தாற்போல் இவை பரிமாணம் பெறுகின்றன.
கடும் மன உளைச்சல்கள், குற்ற உணர்ச்சி, வஞ்சகம், மனப்பிறழ்வுகள், கோபதாபங்கள், வக்கிரங்கள் என எல்லா எதிர்வினைகளுக்கும் பின்புலம் இப்படிப்பட்ட விஷயங்கள்தான். தனிமைப் பொழுதுகளில், இரவுகளில் இந்த உணர்வுகளின் உக்கிரம் அதிகம்! கடலில் உருவாகி, அதிலிருந்து தப்பிப் பிழைத்து கரையைச் சேரும் அலைகள் தன் ஸ்திரத்தை இழந்து மீண்டும் உள்ளிழுக்கப் படுவதை போல உணர்வுகள் முட்டி  மோதுகின்றன. உடைந்து சிதறுகின்றன. மறுவடிவம் பெற்று திடீரென உயர்த்தெழுந்து கருவில் இருந்து வெளிவரத் துடிக்கும் குழந்தை போல வெளிவரத் துடிக்கின்றன! முயன்று, அமிழ்ந்து,எழுந்து, பின் அடங்கும் இந்த உணர்வுப் பாறைகளின் கசிவுகள் இந்த உலகத்தின் ஸ்திரத்தை அசைத்துப் பார்க்கின்றன. உலகம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மனிதன் உருவாக்கிய கொள்கைகளை, கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றன! அடிமனதில் வேரூன்றி இருக்கும் அந்த விஷயங்கள் இறுதிவரை ஒரு கரையானைப்போல் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது. விடவும் முடியாது வைத்துக்கொள்ளவும் முடியாது. அத்தனை சிக்கலானது!

****
ஏனோ இந்த அழுக்குப் பக்கங்களின் மீது தனி கவனம் செல்கிறது. அதைப் படிப்பதில், ஆராய்வதில், சிந்திப்பதில் ஒரு இன்பம் இருப்பதாக தோன்றுகிறது.
மனதின் இந்த அழுக்குப் பக்கங்கள் விகாரமானவை. நம் மிருக பிம்பத்தை நமக்கு உணர்த்துபவை. தன் தவறுகளை, வக்கிரங்களை, அகோர முகத்தை அடையாளம் காணாத யாரும் வாழ்க்கை பற்றிய தெளிவை, ஒரு நம்பகத்தன்மையை பெறுவதில்லை. ஆம், இந்த அழுக்குப் பக்கங்கள் மனிதனைப் பண்படுத்தி நல்வழிப்படுத்தும் ஒரு பாசுரம்! தனிமையில், பொது இடங்களில், அலுவலகங்களில்,வீடுகளில் என ஒவ்வொருவருடைய விகார முகங்கள் அவர்களின் தன்மைக்கேற்ப வெளிப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் பூட்டும் சாவியும் மனித மனம் மட்டுமே!




Thursday, 15 October 2015

தற்கொலைகாரன்

"மனதை இருள்படர்ந்த எண்ணங்கள்
கவ்விக்கொள்ளும் போது
மனச்சிறகுகள் வெகுசுலபமாக திசை
மாறுகின்றன அந்த சில கணங்களுக்கு மட்டும்"
தற்கொலை!

இனி இந்த உலகில் வாழ, தான் தகுதியற்றவன் என்று ஒருவனை நினைக்கச் செய்வது எது?

பயம்,குற்றஉணர்ச்சி,அவமானம், தோல்வி,கோழைத்தனம்,நம்பிக்கையின்மை,மனஉளைச்சல்,வேலையின்மை என ஒரு சராசரி மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் தற்கொலைக்கான திரி. முரண் யாதெனில், அதே பிரச்சனைகள்தான் மனித வாழ்க்கைக்கு பிடிப்பையும் கொடுக்கிறது! அந்த திரி எண்ணெய் ஊற்றாமலேயே எரிந்து கொண்டிருக்கிறது எல்லோரது மனதிலும். சட்டென ஒரு இருள் படர்ந்து அந்த திரி அணையும் போது உயிர் மீதான ஈர்ப்பு போய்விடுகிறது. வாழ்க்கைப் படகின் துடுப்பாய் இருந்த பிரச்சனைகள் எமனாய் மாறுகின்றன. ஒரு வெறுமை நிலையை, வெற்றிடத்தை மனம் உணரும் அந்த நிமிடங்களே கொலைகார நிமிடங்கள்! கவனமாக கையாள வேண்டிய இராட்சச நிமிடங்கள்!
வலுவான மனநிலைகொண்ட, பல சிக்கல்களை சர்வ சாதாரணமாக எதிர்கொண்ட, நம்பிக்கை செறித்த,துன்பத்திலேயே உழன்றாலும் தளராத இதயம் கொண்ட, எத்தனை எத்தனை நண்பர்களைக் கூட சாய்த்து விடுகிறது இந்த தற்கொலை. நான் மிரண்டுபோகிறேன் ஒவ்வொரு உயிரும் இந்த தற்கொலைகாரனால் பறிக்கப்படும் போது!

Wednesday, 14 October 2015

காமத்தின் விதை

சிறுவயதில்
பசுவின் மடியில் கன்று பால் குடிப்பதையும்
தாயின் முலையில் சிசு பால் சப்புவதையும்
பார்த்த நொடிகளில்
உண்டான குறுகுறுப்பில்
மனதில் விழுந்திருக்குமோ
காமத்தின் விதை!
என்று வேர்விட்டுத் துளிர்த்து செடியானதோ தெரியவில்லை.
இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
வளர்ந்து கொண்டு இருக்கிறது!

Saturday, 19 September 2015

தனிஒருவன்

பொதுவாக சில திரைப்படங்கள் நாம் செய்ய வேண்டியதை,மறந்ததை,இந்த பூமியில் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை,சட்டென உணர்த்திவிட்டுச் செல்லும். நாம் ஏற்கனவே அறிந்த ஒரு தகவலை சுவாரஸ்யம் சேர்த்து சொல்லும்போது மனதில் இன்னும் ஆழமாக பதியுமல்லவா? அதுதான் சினிமாவின் ஸ்பெஷல். பிறர் சொல்லி புரியாததை,பல பக்கங்கள் படித்துத் தெளியாததை,காட்சிகளாகக் கண்களுக்கு கொடுத்து உள்ளத்தில் ஊடுருவச் செய்யும் அற்புதம் திரையில் நிகழ்கிறது. கல்வியில் 'செயல்முறைக் கல்வி' போல. ஒரு திரைப்படத்தில் எல்லா அம்சங்களும் சிறப்பாக இருக்கும்,ஒரு திரைப்படத்தில் குறிப்பிட்ட விஷயம் மட்டுமே பிரதானமாக கையாளப்பட்டு மற்றவை பின்தள்ளப்படும். கதையின் தன்மையைப் பொறுத்து அதை ரசிக்கவும் விமர்சிக்கவும் செய்வது அழகு. வியாபார நோக்கம் கருதி சமீபத்திய திரைப்படங்கள் சமூகக் கருத்தை மையப்படுத்தி கமர்ஷியல் சேர்த்து வெளிவருகின்றன(முழு பொழுதுபோக்கு படங்கள் பற்றி இங்கு சொல்லவில்லை. அதற்கான தேவையுமில்லை). விஷயம் யாதெனில், கதையிலும்,திரைக்கதையிலும், தான் சொல்லவந்த விஷயத்தை பிரதானமாக்கி சில மணி நேரங்களுக்கு ரசிகனைக் கட்டிப் போடுவதே இயக்குநருக்கான சவால். கற்றது தமிழ்,எவனோ ஒருவன் படங்கள் சிறந்த உதாரணம். இவ்விரு படங்களும் முன்னிறுத்தும் கேள்விகள் அபாரமானவை(இரண்டுமே வியாபாரரீதியில் தோல்வியடைந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). தனிமனிதனின் கேள்விகள்,கோபங்கள்,அவமானங்கள்,
சந்தோஷங்கள்,கட்டாயமாக உலகிற்கு உணர்த்தப்பட வேண்டியவை. ஏனெனில்,இந்த உணர்ச்சிகளின் கலவைதான் சமூகம்.சில நல்ல கதைகள் கமர்ஷியலாக படமாக்கப்பட்டு தன் சுயத்தை இழந்து விடுகின்றன. 'நிமிர்ந்து நில்' திரைப்படம் இந்த வகையைச் சார்ந்தது.தன் சமூகக் கோபங்களை உரக்கச் சொன்ன இயக்குநர் அந்தப் படத்தை இடைவேளையோடு முடித்து மிச்சத்தைக் கத்தரித்து குப்பையில் போட்டிருந்தால் சிறப்பாக வந்திருக்கும்.
'தனிஒருவன்' ஒரு வகையில் சிறப்பாக வந்திருக்கும் திரைப்படம். கதையின் பின்புலம் வலுவானது. நன்மை-தீமை இடையிலான போராட்டம் தான் படம். Batman-joker போல. ஒருவன் சிறு வயதில் செய்தித்தாளில் 15 வயது சிறுவன் செய்த கொலை செய்தி பார்த்து யோசிக்கத்  துவங்குகிறான். அது அவனை காவல் அதிகாரி ஆக்குகிறது. குற்றங்களுக்கு பின்னால் உள்ள அரசியலை ஆராய்கிறான். அது ஒரு நெடுஞ்சங்கிலி போல நீள்கிறது. பெரிய குற்றங்களின் ஆணிவேர் சிறுகுற்றங்கள் என்பதை கண்டடைகிறான். ஒட்டுமொத்த குற்றங்களையும் ஒரு சிலந்திவலை பின்னலாகக் கொண்டு ஆராயும்போது சிலந்தியாக அந்த 15 வயது சிறுவன் உருவெடுத்து நிற்கிறான். தன் எதிரியை சந்திப்போம் என்று ஆணித்தனமாக நம்புகிறான்.இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். நல்லவன் அவனது கொள்கையிலும் கெட்டவன் அவனது கொள்கையிலும் தெளிவாக இருக்கிறார்கள்.கடவுளையும் பிசாசையும் போல இரு மனிதர்களின் சிந்தனைகள் விவாதங்களாகின்றன. இறுதிக்காட்சியில், தான் தோல்வியின் விளிம்பில் இருக்கும் போதும் அவன் கொள்கையில் திடமாக இருக்கும் கெட்டவன் இந்த 'நாட்டுக்காக' அல்ல 'உனக்காக' இதை ஏற்கிறேன் என்கிறான்.இதன் உட்கருத்து விஸ்தீரணமானது. இந்தக் கதையை விமர்சிக்கும் போது தனிஒருவன்(நல்லவன்) எப்படி இவ்வளவு விஷயங்களைச் செய்ய முடியும்? அரசு இயந்திரத்தில் இருந்து தப்பிப் பிழைத்து உயிரனமாய் நடமாட முடியும்? நான்கு நண்பர்களை மட்டும் வைத்துக் கொண்டு போராட முடியும்? தனிஒருவன்(கெட்டவன்)  எப்படி ஒட்டுமொத்த நகரத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்? எப்படி அரசியல் முடிவுகள் கூட அவனைக் கடந்துதான் செல்ல முடியும்? போன்ற கேள்விகள் அநாவசியமானவை. அவசியமில்லாதவை.